தனுஷின் ஜகமே தந்திரம் விமர்சனம்: லண்டன் தாதா எப்படி இருக்கிறார்?

மக்கள் எங்கே வாழ்கிறார்களோ அதுதான் அவர்களுடைய சொந்த மண், தாய் நாடு என்கிற கருத்தை...
தனுஷின் ஜகமே தந்திரம் விமர்சனம்: லண்டன் தாதா எப்படி இருக்கிறார்?


மதுரை தாதாவான தனுஷ், லண்டனிலும் தாதாவாக வாழ்கிறார். பிறகு தனக்கு வாழ்வளித்த பீட்டருக்கு எதிராக மோதுகிறார். புலம்பெயர் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறார். இதுதான் ஜகமே தந்திரம் படத்தின் கதை.

வெகுஜனத் தமிழ்ப் படங்களில் பாகிஸ்தான், சீனாவுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற முடியும். ஆனால் இலங்கை என்கிற சொல் அவ்வளவு எளிதாக அரசியல் வசனங்களில் இடம்பெற்று விடாது (உதா - ஏழாம் அறிவு). ஆனால் ஓடிடி வெளியீடு என்பதால் இலங்கைப் போர்க் காட்சிகள், இலங்கைத் தமிழர்கள் வேறு நாடுகளில் தஞ்சமடைவது எனப் பல காட்சிகள் இப்படத்தில் உள்ளன. இதனால் வழக்கமான வெகுஜன பாணித் திரைக்கதையிலிருந்து  விலகி, சில நிமிடங்களுக்குப் படத்தில் தீவிரத்தன்மை நிலவுகிறது. ஆனால், அதற்கு முன்பும் பின்பும் வழக்கமான வெகுஜனத் திரைக்கதைப் பாணியைக் கொண்ட படம் என்பதுதான் பல முயற்சிகளைப் பலவீனமாக்கி விடுகிறது.

லண்டனில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு, தனக்குத் தொல்லை கொடுக்கும் இலங்கைத் தமிழருக்கு (ஜோஜு ஜார்ஜ்) எதிராக தனுஷை மதுரையில் இருந்து அழைத்து வந்து களமிறக்குகிறார் இங்கிலாந்துத் தொழிலதிபர் பீட்டர் (ஜேம்ஸ் காஸ்மோ). இங்கிலாந்தில் உள்ள அகதிகள் வெளியேற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். அதற்கான முயற்சிகளில் எப்போதும் ஈடுபடுபவர். அதிகப் பணம் கிடைக்கிறது என்பதற்காக ஜோஜு ஜார்ஜுக்கு எதிராக மோதி, பிறகு அவருடன் சமாதானம் ஆவது போல நடித்து துரோகமிழைக்கிறார் தனுஷ். ஜோஜு ஜார்ஜின் எல்லாவிதமான கடத்தல்களையும் லண்டனுக்கு வந்த சில நாள்களிலேயே தெரிந்துகொண்டு பீட்டருக்கு வகுப்பு எடுக்கிறார் தனுஷ். ஆனால் அந்தக் கடத்தல்களை ஜோஜு ஜார்ஜ் எதற்காகச் செய்கிறார் என்கிற எளிதான உண்மையை தனுஷ் அறியாதது எப்படி? 

ஜோஜு ஜார்ஜிடம் மாட்டிக்கொள்ளும் தனுஷ் அவரிடம் நடத்தும் பேரம் மற்றும் ஜோஜு ஜார்ஜுக்குத் துரோகம் செய்யும் விதமாக நடந்துகொண்டு அவரை தனுஷ் வீழ்த்தும் கட்டம், தனுஷைக் கொல்ல ஐஸ்வர்யா லெட்சுமி முயற்சி செய்வது என இதுபோன்ற சில காட்சிகள் நன்றாக அமைந்துள்ளன. இதன்பிறகு தனுஷ் என்ன செய்யப்போகிறார், லண்டன் வில்லனை எப்படி எதிர்க்கப் போகிறார் என்கிற ஆவல் ஏற்படுகிறது. அதற்குப் பிறகுதான் இலங்கைக் காட்சிகள், புலம்பெயர் மக்களின் கஷ்டங்கள் எனக் கதை வேறு திசையில் செல்கிறது. இதனால் குற்ற உணர்வுக்கு ஆளாகும் தனுஷ், புலம்பெயர் மக்களின் துயர் துடைக்க பீட்டருக்கு எதிராகக் களமிறங்குகிறார். கலையரசன் உள்ளிட்ட ஜோஜு ஜார்ஜின் ஆள்களுடன் கைகோர்க்கிறார். (இந்தக் காட்சி அட்டகாசமாக அமைந்திருக்க வேண்டும். ஜோஜு ஜார்ஜின் ஆள்கள், ஏற்கெனவே தனுஷைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். மனம் திருந்தி மீண்டும் அவர்களுடன் தனுஷ் ஒன்றுசேர்வது சாதாரணமாக அமைந்துள்ளது. திடீரென அவர்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதும் இயல்பாக இல்லை.)

இலங்கைத் தமிழ்ப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா லெட்சுமி, கதையில் திருப்பத்தை உண்டுபண்ணுகிறார். அட என்று நிமிர்ந்தால் அதற்குப் பிறகு அவருக்குக் கதையில் வேலை இல்லாமல் போய்விடுகிறது.

பிளாஷ்ஃபேக் காட்சிகள் தவிர படம் முழுக்கவே சண்டைக் காட்சிகளும் அதற்கான திட்டமிடல்களும் என்பதால் படத்தின் நீளம் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம் என்பதால் உசுப்பேற்றும் வசனங்களும் (தலைவர் மீண்டும் வருவார்) படத்தில் இல்லாமல் இல்லை. புஜ்ஜி பாடலுக்கான இடம் கதையில் இருந்தாலும் கதையின் நீளம், தீவிரம் கருதி நீக்கிவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். பாடல்கள் படத்தில் தடையாக இல்லாதது நிம்மதி. நானும் என் ஊரில் வட இந்தியர்கள் பிழைக்க வந்ததை கேவலமாகப் பார்த்தேன். அதையே இங்கிலாந்தில் தனக்கும் மற்றவர்களுக்கும் செய்யும்போதுதான் நான் செய்த தவறு புரிகிறது என்கிற தனுஷ் பேசும் வசனம் சரியான இடத்தில் வருகிறது. மக்கள் எங்கே வாழ்கிறார்களோ அதுதான் அவர்களுடைய சொந்த மண், தாய் நாடு என்கிற கருத்தை விதைக்க முயன்றுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். 

ஆரம்பக் காட்சிகளில் ஓடும் ரயிலை மறித்து உள்ளே சென்று பயணிகள் முன்னிலையில் ஒருவரைக் கொல்கிறார் தனுஷ். கேட்க ஆளில்லை. தனுஷ் நடத்தும் பரோட்டா கடையில் பெரிய கலவரமே நடக்கிறது. கேட்க ஆளில்லை. இத்தனையும் செய்து, பிரச்னையின்றி லண்டனுக்கு வருகிறார். அங்கும் அவர் செய்யாத கொலையில்லை. துப்பாக்கி ஏந்தாத இடமில்லை. அங்கும் கேட்க ஆளில்லை. காவல்துறை என்கிற அமைப்பே இந்த உலகில் இல்லையா என்கிற கேள்வி ஏற்படாமல் இல்லை. மேலும் அகதிகளை நாட்டுக்குள் விட்டால், அவர்கள் ஆபத்து விளைவிக்கவும் வாய்ப்புண்டு என்கிற எண்ணத்தையும் கதையின் போக்கு ஏற்படுத்துகிறது. இது படத்தின் அடிப்படை நோக்கத்தைச் சிதைப்பதாக உள்ளது. 

படம் முழுக்க தனுஷுக்கு நிறைய வேலை. கிண்டலாகப் பேசும் பல வசனங்கள் உற்சாகத்தைத் தருகின்றன. துள்ளலான உடல்மொழியுடன் படத்தை அதிகமாகவே தாங்கிறார். வெள்ளைக்கார வில்லன் ஜேம்ஸ் காஸ்மோ, படம் முழுக்க கெட்ட வார்த்தைகள் பேசிக்கொண்டும் புலம்பெயர் மக்கள் மீதான தனது வெறுப்பை வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கிறார். ஒளிப்பதிவு, இசை எல்லாம் கதைக்கு ஏற்றவகையில் அமைந்துள்ளன. சீரற்ற திரைக்கதைக்குப் படத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.

முதல் பாதியில் களம் மட்டுமே வேறு, மற்றபடி வழக்கமான தாதா கதையாகவே படம் இருந்தது. அதன்பிறகு கதையின் போக்கு முற்றிலும் மாறிவிடுகிறது. பிறகு மீண்டும் வழக்கமான வெகுஜனத் திரைக்கதை படத்தில் கையாளப்படுகிறது. இந்தக் கலவை கதையின் நோக்கத்துக்குச் சரியாகப் பொருந்தவில்லை. ஒரு வெகுஜனப் படம் சோர்வை ஏற்படுத்தக்கூடாது. அவ்வப்போது ஆச்சர்யங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இந்தப் படத்தில் தனுஷ் - ஜோஜு ஜார்ஜ் ஒன்றாகத் தோன்றும் காட்சிகள் மட்டும் நன்கு அமைந்துள்ளன. இலங்கைத் தமிழ் மக்களின் துயரங்கள் சில நிமிடங்கள் படத்தில் இடம்பெற்றாலும் பிறகு மீண்டும் அதே சண்டை, அதே துப்பாக்கிக் குண்டு மழை என கதை வழக்கமான பாதைக்கு மாறிவிடுவதால் இதுவும் மற்றொரு வழக்கமான, சராசரியான வணிகப்படமாகிவிடுகிறது.

ஜிகர்தண்டாவில் ரசித்த, வியந்த கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com