வெல்லுமா சூர்யாவின் 'ஜெய் பீம்'? - திரைப்பட விமர்சனம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் படத்தின் திரைப்பட விமர்சனம்
வெல்லுமா  சூர்யாவின் 'ஜெய் பீம்'? - திரைப்பட விமர்சனம்

ஜோதிகா - சூர்யா இணைந்து தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள படம் ஜெய் பீம். நேரடியாக அமேசான் பிரைமில் நாளை (நவம்பர் 2 ஆம் தேதி)  வெளியாகிறது. 

பழங்குடியினத்தைச் சேர்ந்த  ராசாக்கண்ணு, மொசக்குட்டி, இருட்டப்பன் ஆகிய 3 பேர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திடீரென தப்பிச் சென்றுவிட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராசாக்கண்ணுவின் மனைவி செங்காணி, தன்னுடைய கணவரை  மீட்டுத்தருமாறு வழக்கறிஞரான சந்துருவை நாடுகிறார்.  

வழக்கை விசாரிக்கையில் திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகின்றன. காணாமால் போனவர்கள் மீட்கப்பட்டனரா ? செங்காணியின் போராட்டம் வென்றதா என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. 

ராசாக்கண்ணுவாக மணிகண்டன். ஒரு பழங்குடியினராக பேசும் மொழி, உடல் மொழி என உண்மையில் ராசாக்கண்ணுவாகவே வாழ்ந்திருக்கிறார்.  காதலும் கடந்து போகும், விக்ரம் வேதா, சில்லுக் கருப்பட்டி என குறைவான படங்களே நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தான் தேர்ந்த நடிகர் என நிரூபித்து வருகிறார். 

அவரது மனைவி செங்காணியாக லிஜோ மோல் ஜோஸ். அந்த வேடத்துக்கு அவர் சரியாக பொருந்தவில்லை என்று தோன்றியது. ஆனால் அவர் தனது திறமையான நடிப்பின் மூலம் சரிசெய்து விடுகிறார்.  

சந்துரு என்ற வழக்கறிஞராக சூர்யா.  தனக்கு அதிக முக்கியத்துவம் இல்லாத, ஆனால் கதையை நகர்த்தி செல்லக் கூடிய வேடம் சூர்யாவுக்கு. இந்தக்  கதையை தேர்ந்தெடுத்ததற்காகத்  தயாரிப்பாளர் சூர்யாவை விட நடிகர் சூர்யாவைத் தான் பாராட்ட வேண்டும்.  படத்தில் முக்கியமான இடத்தில் தோன்றி செங்காணிக்கு மட்டுமல்லாமல் படம் பார்க்கும் நமக்கும் நம்பிக்கை தருகிறார். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு அமைந்திருந்தது. 

பொதுவாக இந்த மாதிரியான இந்த வேடங்களை கதாநாயகனாக இருக்கும் ஒரு நடிகர் ஏற்கும்போது எல்லாத்தையும் தானே கண்டுபிடித்து ஒரு சூப்பர் ஹீரோவாக காட்டப்படுவார்கள். உதாரணமாக கடந்த 2019 வருடம் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் ஒரு பிரபல கதாநாயகன் என்பதால் ஒரு சண்டைக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அது படத்தின் வியாபாரத்துக்காக என நியாயமான காரணமாகவும் சொல்லப்பட்டது. ஆனால் நல்லவேளை அப்படியான காட்சிகள் இந்தப் படத்தில் இல்லை.  

இறுதிக் காட்சி ஒன்றில் எதிர்த்தரப்பினர், ''சாட்சிகள் நீதிமன்றம் வந்தால் நாம் மாட்டிக்கொள்வோம்'' என்று பேசும்போது அங்கே ஒரு சண்டைக்காட்சி வருமோ என எதிர்பார்ப்பு உருவாகியது. ஆனால் அதனை இயக்குநர் புத்திசாலித்தனமாகத் தவிர்த்ததற்கு பாராட்டுகள்.

ஆசிரியராக வருகிறார் ரஜிஷா விஜயன். ஒருசில காட்சிகளைத் தவிர பெரிதாக அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்த் தரப்பு வழக்கிறஞர்களான ராவ் ரமேஷும், குரு சோமசுந்தரமும் தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட வேடங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

குறைவான நேரமே வந்தாலும், சூர்யாவுக்கு மட்டுமல்லாமல் படத்துக்கும்  பெரும் பக்கபலமாக இருந்தார் பிரகாஷ் ராஜ். ஒரு காட்சியில் வசனமாக விளக்க வேண்டியதை பார்வையாலேயே  உணர்த்தி விடுகிறார். இரண்டாம் பாதியில் மிகவும் விறுவிறுப்பாக நகரும் கதையில் எம்.எஸ்.பாஸ்கர் தனது வெகுளித்தனமான வசனங்களால் சிரிக்க வைக்கிறார். 

பழங்குடியினத்தவர்களாக வருபவர்கள், காவல்துறையினராக வருபவர்கள் என படத்தில் பெரும்பான்மையானோர் புதுமுகங்கள்.  அவர்களைத் திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குநர்.  

ராசாக்கண்ணுவும் செங்காணியும் எலி பிடிக்கும் காட்சியுடன்தான் படம் துவங்குகிறது. 1995ல் நடக்கும் கதை. பழங்குடியின மக்களின் இருப்பிடம்,  அவர்கள் வாழ்வியல் என மிக யதார்த்தமாக நகர்கிறது. சமூகத்தில் பழங்குடியின மக்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாக காட்டப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் மணிகண்டன் பாம்பைப்  பிடித்து காட்டுக்குள் விடும்போது, அதனிடம், மனிதர்களிடம் ஜாக்கிரதையா  இரு என்பார். உண்மையில் அந்த வசனம்  அவர் தனக்கும் சொல்லிக்கொண்டார் என்பது பின்னர் வரும் காட்சிகள் நமக்கு உணர்த்துகின்றன.

இப்படி யதார்த்தமாக நகரும் படத்தில் திடீரென வழக்கறிஞராக  அறிமுகமாகிறார் சூர்யா. அவரின் கதாபாத்திரத்தை நமக்கு விளக்குவதற்காக சில காட்சிகள் அடுத்தடுத்து வருகின்றன.  அதுவரை மிக இயல்பாக சென்றுகொண்டிருந்த படம் சூர்யாவின் அறிமுகத்திற்கு பிறகு நாடகத்தன்மைக்கு மாறுகிறது.  பின்னர் செங்காணி சூர்யாவை சந்திக்கும் காட்சியில் இருந்து படம் மீண்டும் விறுவிறுப்பாக நகர்கின்றன. 

ஊர்த் தலைவராக வரும் இளவரசுவிடம், பழங்குடியின மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கேட்டு போவார் ரஜிஷா விஜயன். அப்போது இளவரசு, இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்து விட்டால், வாக்குக்காக இவர்கள் காலில் விழ வேண்டியிருக்கும் என்பார்.  

பின்னர் ஒரு காட்சியில்  ஜீப்பில் வீட்டில் விடுகிறேன் என செங்காணியிடம்  காவல்துறையினர் கெஞ்சுவர். ஆனால் அதனை செங்காணி தவிர்த்துவிட்டு அங்கிருந்து செல்வார். அப்போது காவல்துறையினர் ஒரு பழங்குடியின பெண்ணுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பார்க்கும் இளவரசு மிரண்டுபோவார். இப்படி தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியின மக்களுக்கு உரிய கௌரவத்தை சட்டத்தாலும், அரசாங்காத்தாலும் மட்டுமே வழங்க முடியும் என்பதை மேலே சொன்ன காட்சிகள்  உணர்த்துகின்றன. 

1995ல் நடக்கும் காலகட்டம். அப்போதைய காலகட்டத்தில் பேருந்துகள், பேருந்து நிறுத்தம், மக்களின் வீடுகள் மிக தத்ரூபமாக நம் கண்முன் கொண்டுவந்திருக்கின்றனர். அதற்காக கலை இயக்குநருக்கு பாராட்டுகள். தனது நேர்த்தியான ஒளிப்பதிவின் மூலம் கவனம் ஈர்க்கிறார் எஸ்.ஆர்.கதிர். ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்துக்கு மிக பக்கபலமாக அமைந்திருந்தன. 

படத்தில் வரும் காவல் நிலையக் காட்சிகள் நிறைய இடங்களில் விசாரணை படத்தை நினைவுபடுத்தன. அந்தக் காட்சிகள் தான் இரண்டாம் பாதியில் படத்தை நாம் உணர்வுபூர்வமாக அணுக உதவி செய்திருக்கின்றன. 

ஒரு உண்மை சம்பவத்தை முடிந்த வரை மிக யதார்த்தமாகப் பதிவு செய்து வென்றிருக்கிறார் இயக்குநர்.  தங்கள் வழக்குகளை முடிக்க, பழங்குடியினத்தவர்களைக் காவல்துறையினர் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டனர் என்ற மிக வலி நிறைந்த சம்பவத்தை எந்த சமரசமுமில்லாமல் கண்முன் கொண்டுவந்த இயக்குநருக்கு பாராட்டுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com