விஜய் சேதுபதி குரல் கொடுத்த 'கடைசீல பிரியாணி': ருசிக்கலாமா? திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி குரல் கொடுத்திருக்கும் கடைசீல பிரியாணி பட திரைப்பட விமர்சனம் 
விஜய் சேதுபதி குரல் கொடுத்த 'கடைசீல பிரியாணி': ருசிக்கலாமா? திரைப்பட விமர்சனம்

அப்பாவை கொன்றவரை மூன்று மகன்கள் இணைந்து கொல்ல திட்டமிடுகின்றனர். இந்தக் கொலை முயற்சியில் ஒரு சைக்கோவின் கைகளில் சிக்கிக்கொள்கின்றனர். அந்த சைக்கோவிடம் இருந்து அவர்கள் மீண்டார்களா? தன் அப்பாவைக் கொலை செய்தவர்களை கொன்று பழி தீர்த்தார்களா ? என்பதே படத்தின் கதை. 

படம் வெகு இயல்பான காட்சிகளுடனே துவங்குகிறது. பெரும்பாலும் காடுகளிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான காட்சிகளை லோ ஆங்கிளில் படமாக்கி காடுகளின் பிரம்மாண்டத்தை நமக்கு காட்டுகிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் அசீம் முகமது மற்றும் ஹெஸ்டின் ஜோஸ் ஜோசஃப். அதுவும் படம் திரில்லர் பாணிக்கு மாறியவுடன் ஒளிப்பதிவாளர்களின் இந்த முயற்சி படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறது. கேரளத்தின் கோட்டயம் பகுதியின் அழகைத் தத்ரூபமாக காட்சிபடுத்தியிருக்கிறார்கள். 

மற்றொருபுறம் தனது நேர்த்தியான ஒலி வடிவமைப்பு மற்றும் பின்னணி இசையின் மூலம் நாம் அந்தப் பகுதியிலேயே இருக்கும் உணர்வை தந்திருக்கிறார் வினோத் தணிகாசலம். சின்ன சப்தங்களைக்கூட மிக தத்ரூபமாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகர்கள் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும்தான். அந்த அளவுக்குப் படத்தை தங்களின் தோள்களில் சுமந்திருக்கிறார்கள். 

கதையின் நாயகனாக சிக்கு பாண்டியன் என்ற வேடத்தில் விஜய் ராம். சூப்பர் டீலக்ஸ் படத்தைப் போலவே இந்தப் படத்தில் பதின்வயது இளைஞன் வேடம். அந்தப் படத்தைப் போலவே தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார். அவரது மூத்த அண்ணனாக வசந்த் ரவியின் நடிப்பு முதல் பாதி படத்தை சுவாரசியமாக்க உதவியிருக்கிறது.

ஒரு சைக்கோவாக ஹக்கீம் ஷா இடைவேளையின் போதே அறிமுகமாகிறார். அவரது கதாப்பாத்திரம் அவ்வளவு நம்பகத்தன்மையாக இல்லையென்றால், அதனை அவர் கையாண்டிருக்கும் விதத்தால் கவனம் ஈர்க்கிறார். முதல் படத்திலேயே காட்சிகளைத் திறமையாக படமாக்கிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் நிஷாந்த் களிடின்டி.

ஒரு கொலைச் சம்பவம், அதன் விளைவுகள் என ஒரு சம்பவத்தைச் சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த சம்பவம் இடைவேளையின் போதுதான் நடக்கிறது. அதுவரை படம் மிக மெதுவாகவே நகர்கிறது. ஒருசில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பெரும்பாலான காட்சிகள் நம்  பொறுமையைச் சோதிக்கின்றன. இடைவேளைக்குப் பிறகே படம் சுவாரசியமாக நகர்கிறது. இடைவேளையின்போது அந்த திடீர் திருப்பம் நன்றாக இருந்தது. அந்தக் காட்சியும் மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டிருந்தது. 

பயந்த சுபாவம் கொண்ட ஒரு பதின்வயது இளைஞனை சக்தி வாய்ந்த சைக்கோ வில்லன் கொலை செய்யத் துரத்தும் பூனை, எலி விளையாட்டுதான் இந்தப் படம். அதுவும் இடைவேளைக்குப் பின்னரே வருகிறது. எளிய கதைதான் என்றாலும் ஆங்காங்கே காட்சிகள் மூலம் கதை சொல்லியிருக்கலாம். துவக்க காட்சிகள் வசனத்தின் மூலமே நமக்கு கதை சொல்லப்படுகிறது. 

கதையை விஜய் சேதுபதிதான் சொல்கிறார். படம் முழுக்க அவர் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லரில் ஒரு கதை சொல்லியிருப்பார் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட அதே பாணியில் இந்தப் படத்திலும் பேசுகிறார். படமாக்கப்பட்ட பிறகு படத்தைத் துவக்கத்தில் மக்கள் புரிந்துகொள்ள சிரமப்பட வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் படக்குழுவுக்கு தோன்றியிருக்கலாம். அதன் காரணமாகவே விஜய் சேதுபதியைப் படத்தின் கதையை சொல்ல வைக்க முடிவெடுத்திருக்கலாம் என்று தோன்றியது. 

முதலில் சொன்னது மாதிரி படத்தின் முதல் பாதியைப் படத்தொகுப்பின் போது கத்தரித்திருந்தாலும் எந்த பாதிப்பும் இருந்திருக்காது. இரண்டாம் பாதியில் வரும் திருப்புமுனைக் காட்சிகளும், வசனங்களும் படத்தை சுவாரசியமாகவே இருந்தன. ஹக்கீம் ஷா ஏன் கொடூரமான சைக்கோவாக இருக்கிறார், அவரது குடும்பத்தினரும் அவரை ஏன் பெரிதாக கேள்வி கேட்பதில்லை, ஏன் காவல்துறையினர் கண்மூடித்தனமாக அவரது குற்றச்செயல்களுக்கு துணை போகின்றனர்  இப்படி சில லாஜிக் மீறல்களும் படத்தில் இருக்கின்றன. 

மேலும் படத்தின் இறுதிக்காட்சி ஒரு சிலருக்கு திருப்தியளிக்காமல் போகலாம். இருப்பினும் மிகவும் தரமான ஒளிப்பதிவு மற்றும் இசை, சுவாரசியமான  இரண்டாம் பாதி ஆகியவற்றின் காரணமாகப் படத்தை ஒருமுறை பார்க்கலாம். படம் திரையரங்குகளில் வெளியாகாமல், ஓடிடி தளங்களில் வெளியானால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com