சந்தானத்தின் 'டிக்கிலோனா' - திரைப்பட விமர்சனம்

இரண்டரை மணி நேரம் முன்பு சென்று படம் பார்க்கும் முடிவை மாற்ற முடியாது என்பதே வலிக்கும் உண்மை.  
சந்தானத்தின் 'டிக்கிலோனா' - திரைப்பட விமர்சனம்

டிக்கிலோனா படத்துக்கான முன்னோட்டத்தைப் பார்த்தாலே இந்தப் படத்தின் கதை என்ன என்பதை நம்மால் கணித்துவிட முடியும். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை  அடித்துத் துவைத்த அதே டைம் டிராவல் படக் கதை தான்.

திரைக்கதையில் என்ன புதுமை செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே ஒவ்வொரு படங்களும் வித்தியாசப்படும். அந்த வகையில் 'டிக்கிலோனா'  திரைக்கதையிலும் ஏற்கனவே வெளியான பல படங்களின் சாயல். குறிப்பாக 'ஓ மை கடவுளே' படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. திருமண வாழ்க்கை கசந்து போகும் ஒருவன், கடவுள் கொடுக்கும் டிக்கெட் உதவியுடன் கடந்த காலம் சென்று அதனை எவ்வாறு மாற்றுகிறான் என்பதே 'ஓ மை கடவுளே' படத்தின் கதை. டிக்கிலோனாவில் அந்த டிக்கெட்டுக்குப் பதில் டைம் மிஷின் அவ்வளவே வித்தியாசம். 

பொதுவாக சந்தானம் படங்களின் கதையை ஒரு வார்த்தையிலேயே சொல்லிவிடலாம். இருப்பினும் தனது நகைச்சுவை வசனங்கள் மூலம் படத்தை சுவாரசியப்படுத்தி விடுவார். இந்தப் படத்தில் அதுவும் கை கொடுக்கவில்லை என்பதே கசக்கும் உண்மை.

தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் அனைவரையும் கலாய்ப்பது சந்தானத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. அந்த வகையில் யோகி பாபு, ஷாரா என உடன் வரும் காமெடி நடிகர்கள் அனைவரையும் கலாய்க்கிறார்.  அதுவும் பத்தாது என்று சந்தானத்தை, சந்தானமே கலாய்க்கிறார். இருப்பினும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரே மாதிரியாக அவர் நடிப்பதால் அவர் பேசும் வசனங்கள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.

படத்தில் நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால், சந்தானத்துக்கு ஏன் அவரது திருமண வாழ்க்கை கசக்கிறது என்பதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லை. மேலும், ஹாக்கி விளையாட்டை நேசிப்பவராக சந்தானம் காட்டப்படுகிறார். ஆனால் ஒரு காட்சியில் கூட அவர் ஹாக்கி விளையாடுவது காட்டப்படவில்லை. இப்படி எல்லோமே மேலோட்டமாகச் சொல்லப்பட்டிருப்பதால் எதனுடனும் ஒன்றிப் போக முடியவில்லை. 

டைம் மிஷின் காட்சிகளும் சரியாக இல்லை. ஏதோ நகரப் பேருந்துகளில் ஏறி செல்வதைப் போல அடிக்கடி கடந்த காலம் சென்று திரும்புகிறார். டைம் மிஷினில் பயணிக்க, சொல்லப்படும் விதிமுறைகளில் ஏதாவது சிக்கல்களைச் சேர்த்திருந்தால், அந்தக் காட்சிகளாவது சுவாரசியமாக இருந்திருக்கும். 

மேலும், 2027ல் கதை நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது. 5 வருடங்களுக்கு பின் நடக்கும் கதையில், மக்கள் பயன்படுத்தும் கருவிகளும், தொழில்நுட்பங்களும் நம்பும்படியாக இல்லை. கேஜிஎஃப் பாணியில் நிழல்கள் ரவி ஆங்காங்கே தோன்றி கதை சொல்வது ரசிக்கும்படி இருந்தது. சிறப்புத் தோற்றத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளும் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

வழக்கம்போல யுவன் தனது பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறார். ஆனால் பாடல்கள் எதுவும் ரசிக்கும் விதத்தில் இல்லை. 
குறிப்பாக பேர் வச்சாலும் என்ற மைக்கேல் மதன காமராஜன்' பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டு இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இந்தப் பாடலை இப்பொழுது பார்த்தாலும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்ற இடமும் அதற்கான சூழலும் சரியாக இல்லை. வேறு புதிய பாடலைப் பயன்படுத்தியிருந்தாலும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. 

டைம் டிராவல் படம் என்பதால் வந்த இடங்களையே, நாம் மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டியிருக்கிறது. இருப்பினும் ஒவ்வொரு முறையும் மாறுபட்ட கோணங்களால் நம்மை அயர்ச்சி அடையாமல் பார்த்துக்கொள்கிறார் ஒளிப்பதிவாளர் அர்வி. 

முதலில் சொன்னது போல, சந்தானத்துக்கு தனது திருமண வாழ்க்கை ஏன் கசக்கிறது என்பது அழுத்தமாக பதிவு செய்யப்படாததால் அவர் டைம் டிராவல் செய்யும் காட்சிகள் சுவாரசியமாக இல்லை. நகைச்சுவைக் காட்சிகள் ரசிக்கும்படி இல்லாததால் வழக்கமான சந்தானம் படமாகவும் கவரவில்லை.  

மொத்தத்தில் காலத்தின் அருமையைப் படத்தில் வெறும் கருத்தாக இல்லாமல், ஒட்டுமொத்தமாகப் படமாகவே எடுத்து உணர்த்துகிறார் இயக்குநர். இருப்பினும் சந்தானத்தைப் போல நம்மால் படம் பார்த்த பிறகு, இரண்டரை மணி நேரம் முன்பு சென்று படம் பார்க்கும் முடிவை மாற்ற முடியாது என்பதே வலிக்கும் உண்மை.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com