அம்முவிலிருந்து அம்மா வரை : தலைவி திரை விமர்சனம்

கற்பனை கலந்த உண்மை எனப் படக்குழு தெரிவித்து விட்டதால்  சில காட்சிகளில்...
அம்முவிலிருந்து அம்மா வரை : தலைவி திரை விமர்சனம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்வில் நடந்த ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது 'தலைவி'.

பள்ளிப் பருவத்தில் விருப்பம் இல்லாமல் நடிக்க வந்து பிற்காலத்தில் தமிழகத்தின் அசைக்க முடியாத தலைவியாக உருவான வரை கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக அறிவிக்கப்பட்டதும் முழு வாழ்க்கையும் பதிவு செய்யப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 1964 முதல் 1991 வரையிலான காலகட்டத்தினை மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள். சாதாரண நிலையில் அசாதாரண நிலையை எப்படி அடைந்தார், எம்ஜிஆர்-ருக்குப் பின் அடுத்தக்கட்டத் தலைவர்கள் இருந்த நிலையில் அவர்களை மீறி எப்படி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனார் என்பதுதான் கதை.

படத்தில் எம்ஜிஆர் ஆக நடித்த அரவிந்த் சாமி , கருணாநிதியாக நடித்த நாசர் , ஆர்.எம். வீரப்பனாக சமுத்திரக்கனி, எம்.ஆர். ராதாவாக ராதாரவி போன்ற கதாபாத்திரத் தேர்வுகளில் இயக்குநர் விஜய் வென்றிருக்கிறார். சில காட்சிகளிலேயே தோன்றினாலும் நாசர் கர்ஜனைக் குரலுடன் கருணாநிதியைக் கண் முன் நிறுத்துவதும் அரவிந்த் சாமி திரையில் எம்ஜிஆர் போலவே மாறி இருப்பதும்  படத்தின்  பெரிய பலம். அமைதியான உடல் மொழியில் என் தலைவனிடம் யாரையும் நெருங்க விட மாட்டேன் என்கிற சமுத்திரக்கனி நடிப்பு, படம் முழுவதையும் நகர்த்திச் செல்கிற முக்கிய கதாபாத்திரம்.

கதை நாயகியான கங்கனாவின் நடிப்பு பல இடங்களில் வேற்று மொழி நடிகை என்கிற பிம்பத்தை உடைக்கச் செய்திருக்கிறது. குழப்பங்கள், அவமானங்கள் , தோல்வி, நம்பிக்கை என அனைத்தையும் அவர் வெளிப்படுத்தும் காட்சிகளில்  தன்னுடைய கதாபாத்திரத்திற்குச் சரியாகப் பொருந்தியிருக்கிறார்.

படத்தின் முதல் பாதி முழுக்க ஜெயலலிதாவிற்கு  எம்ஜிஆருக்கும் இடையேயான  நட்பு பற்றி அதிகமாகக் காண்பித்ததால் பெரிய தொய்வு ஏற்படுகிறது. சில காட்சிகளில் கங்கனாவின் வசனங்களுக்கு முகபாவனைகள் சரியாகக் கூடி வராததும், அந்தக் காலகட்டத்தின் பேச்சு வழக்குகளும் பெரிய பலவீனங்கள். இரண்டாம் பாதியிலும் சில இடங்களில் இதே குறைகளைக் காண முடிந்தாலும்  படத்தின் வேகம் அதை சரி செய்து கொண்டது.

படத்தின் பெரிய பலங்கள் ஜி.வி. பிரகாஷின் இசையும் வசனங்களும்தான்.  'தலைவி' பின்னணி இசையும் 'கண்ணும் கண்ணும் பேசப் பேச' 'உனக்காக உலகம்' பாடல்கள் மனதில் பதிகின்றன. 'மக்களை நீ நேசித்தால் மக்கள் உன்னை நேசிப்பார்கள்' 'அறிவு தான் கடவுள்' போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. முக்கியமாக இது வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால்  எந்த இடத்திலும் சொதப்பாமல் கலைத்துறையினர் உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல் படத்தை நேர்த்தியாகவும் காதல் காட்சிகளில் அழகாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

முன்பே தெரிந்த ஒரு வரலாற்றைக் கற்பனை கலந்து எடுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். 'மதராசப்பட்டினம்' படத்தில் கிடைத்த அனுபவத்தில்  தலைவியிலும் 1965-91 வரையிலான காலக்கட்டத்தின் இடங்கள், ஆடைகள் போன்றவற்றைச் சரியாகப் பதிவு செய்திருக்கிறார்.
 
படத்தின் ஆரம்பத்திலேயே கற்பனை கலந்த உண்மை எனப் படக்குழு தெரிவித்து விட்டதால்  சில காட்சிகளில் ஒன்றிப் போக முடியாததும் எளிதில் பார்வையாளன் ஊகிக்கும் வகையிலான திரைக்கதையும் ஜெயலலிதாவைத் தவிர கட்சியில் யாருக்கும் பொறுப்பில்லை என்கிற மாதிரியான  பிம்பமும் சலிப்பைத் தருகின்றன. ஒட்டுமொத்தமாக எந்த ஒரு பெரிய திருப்புமுனைகளையும் எதிர்பார்க்காமல் இருந்தால் படத்தைப் பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com