ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?

ஆமிர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள லால் சிங் சத்தா பட விமர்சனம் 
ஆமிர் கான் - நாக சைதன்யாவின் 'லால் சிங் சத்தா' - படம் எப்படி இருக்கிறது?
Published on
Updated on
2 min read

'சாக்லெட்டுகள் நிறைந்த பெட்டியைப் போன்றது வாழ்க்கை. யாருக்கு என்ன சாக்லெட் கிடைக்கும் என்பது தெரியாதுன்னு எங்க அம்மா சொல்வாங்க'.  இப்படி ஒரு வசனத்துடன் ஃபாரஸ்ட் கம்ப் ஆங்கிலப் படம் துவங்கும். 

ஆனால் 'வாழ்க்கை ஒரு பானி பூரியைப் போன்றது. பானி பூரி சாப்பிட்டால் வயிறு நிறையும். ஆனால் மனது நிறையாது' என்ற வசனத்துடன் துவங்குகிறது ஃபாரஸ்ட் கம்ப் இந்திய ரீமேக் படமான லால் சிங் சத்தா. 

லால் சிங் சத்தாவாக ஆமிர் கான். முதல் பாதியில் அப்படியே டாம் ஹாங்க்ஸை நிறையவே நினைவுபடுத்துகிறார். சில இடங்களில் அவரது முக  பாவனைகளில் மிஸ்டர் பீன் வந்துபோகிறார். ஆனால் அவை எல்லாம் முதல் சில காட்சிகளில் மட்டும்தான்.

புருவங்களை அசைக்காமல் பார்ப்பது, அப்பாவியான முகம் என ஒட்டுமொத்தமாக லால் சிங் சத்தாவாகவே வாழ்ந்திருக்கிறார் ஆமிர். இரண்டாம் பாதியில் தலையில் டர்பன், நிறைய தாடி என அவரது முழு  வாழ்வை நமக்கு உணர செய்யும்படி நடித்திருக்கிறார்.

அவருக்கு அடுத்து அதிகம் கவனம் ஈர்ப்பது கரீனா கபூர். ஆமிர் கான் மற்றும் கரீனா கபூர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பதின் இளம் வயது முதல் நடுத்தர வயதினராவது வரை கதை நகர்கிறது. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப தங்கள் நடிப்பில் அவர்கள் காட்டிய மாறுபாடு படத்தை  சுவாரசியப்படுத்துகிறது. 

பாலராஜுவாக நாக சைதன்யா. அவருக்குமே ஒரு வெகுளித்தனமான கதாபாத்திரம். சிறிது நேரமே வந்தாலும் நினைவில் நிற்கும்படியான நடிப்பை வழங்கியிருக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் ஷாருக்கான் வரும்  காட்சிகளால் திரையரங்கு கலகலப்பாகிறது.

'ஃபாரஸ் கம்ப்' படம் போல் அல்லாமல், ஒரு ரயிலில் தனது சக பயணிகளுடன் தனது கடந்த காலங்களை சொல்கிறார் ஆமிர். தன் வாழ்க்கையில் நடந்தவற்றை ஆமிர் சொல்லச் சொல்ல ரயில் பயணிகள் வெளிப்படுத்தும் உணர்வுகள் நன்றாக இருக்கின்றன.  

ஃபாரஸ்ட் கம்ப் படத்தை இந்தியாவுக்கு ஏற்றபடி வெகு சிறப்பாக மாற்றியிருக்கிறார் அதுல் குல்கர்னி. படத்தில் இந்திரா காந்தி மரணம், பாபர் மசூதி இடிப்பு, கார்கில் போர், அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் என ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்போதைய அரசியல் முக்கிய நிகழ்வுகளைக் கதையின் போக்கில் இணைத்தது சுவாரசியமாக இருக்கிறது.

படத்தைத் தமிழில் மொழி மாற்றம் செய்யும்போது இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். நிறைய வார்த்தைகள் கூகுளில் மொழிமாற்றம் செய்தது போல வழக்கத்தில் இல்லாததாக இருக்கிறது. பாடல் வரிகளிலும் அதே பிரச்னை என்பதால் ரசிக்க முடியவில்லை.

ஃபாரஸ்ட் கம்ப் போல லால் சிங் சத்தா என்ற ஒருவரின் வாழ்க்கையின் சில அத்தியாயங்களை உணர்வுபூர்வமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். பஞ்சாப் பின்னணியில் கதை நகர்கிறது. இந்திய கலாசாரத்துக்கு ஏற்றபடி மாற்ற நிறைய முயன்றிருக்கிறார்கள். ஆனால்  இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். காரணம், நம்மால் உணர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு சில  காட்சிகள் அந்நியமாக இருக்கின்றன. அதனால் படம் மெதுவாக நகர்கிறது என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.

ஃபாரஸ்ட் கம்ப்பை இந்தியாவுக்கு ஏற்றபடி  மாற்றியிருப்பது ஓகே. ஆனால்,  லால் சிங் சத்தாவை இன்னும் கவரும்படியாகச் சொல்லியிருக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com