எப்படி இருக்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது'? - திரை விமர்சனம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது பட விமர்சனம் 
எப்படி இருக்கிறது இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நட்சத்திரம் நகர்கிறது'? - திரை விமர்சனம்
Published on
Updated on
1 min read

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து இயக்கியுள்ள நட்சத்திரம் நகர்கிறது படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. காதலின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிறது இந்தப் படம். காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சமூகத்தில் தவறாக அர்த்தம்கொள்ளப்படும் வார்த்தைகளான காதல், ஒரு தலைக் காதல், தன் பாலின ஈர்ப்பு, திருநங்கை, ஆணவப் படுகொலை ஆகியவற்றைப் பற்றி விரிவாக அலசுகிறது இந்தப் படம்.

புதுச்சேரியைச் சார்ந்த நாடகக் குழு ஒன்றில் காதல் குறித்து நாடகம் ஒன்றை உருவாக்க திட்டமிடப்படுகிறது. இதற்காக குழுவில் உள்ளவர்கள் தற்காலிக காதல் குறித்து விவாதம் செய்கிறார்கள். உரையாடல்கள் தான் படமே. 

ஒரு காட்சியில் துஷாரா, ''நாம் எல்லோருமே சரியானவர்கள் அல்ல, தவறுகள் செய்துதான் மேம்பட்ட நிலையை அடைந்திருப்போம், வாழ்க்கை முழுக்க கற்றுக்கொண்டே தான் இருக்கப்போகிறோம்'' என ஒரு வசனம் பேசுவார். இப்படி படம் முழுக்க பல வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

படத்தின் தன்மையினால் மிக மெதுவாக நகர்வது போல ஒரு எண்ணம் தோன்றலாம். அலுவலகங்களில், பொதுவெளிகளில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை இன்றளவும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுவாக முற்போக்காக சிந்திக்கும் நாம்கூட நமக்கென வரும்போது சுயநலமாக முடிவெடுப்போம். இப்படி பல விஷயங்களை இந்தப் படம் அலசுகிறது. 

உதாரணமாக பெண்களின் விருப்பம் இல்லாமல் அணுகக்கூடாது என அறிவுரை சொல்லும் ஒரு கதாபாத்திரம், மது அருந்தாத நபரைக் கட்டாயப்படுத்தும்போது அவர் நோ மீன்ஸ் நோ என்பார். இப்படி முரண்களுடன் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. 

இளையராஜாவின் பாடல்கள் படம் நெடுக இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே வெற்றிபெற்ற இசையமைப்பாளர் தென்மாவின் பாடல்கள் படத்தில் மிக சுவாரசியமாக படமாக்கப்பட்டுள்ளன. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை நேரடியாக பார்க்கும் உணர்வைத் தருகிறது. 

சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்து பேசுவதோடு ஒரு சராசரி குடும்பத்தில் சாதி எவ்வளவு தூரம் வேரூன்றி இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக இயக்குநர் பா.ரஞ்சித் பதிவு செய்திருக்கிறார். படம் முடித்து வெளியே வரும்போது ஒரு நிமிடம் நம்மை நாமே பரிசோதித்துக்கொள்வது உறுதி. அந்த அளவுக்கு ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சமூகத்தில் பலதரப்பட்ட மக்களை பிரதிபலிப்பதாக உள்ளது. 

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தவிருக்கும் தமிழ் சினிமாவின் முக்கியப் பதிவு நட்சத்திரம் நகர்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com