விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' - ஏன் பார்க்க வேண்டும் ? - திரை விமர்சனம்

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி விவசாயி படத்தின் திரை விமர்சனம் 
விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' - ஏன் பார்க்க வேண்டும் ? - திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக கிராமம் என்றால் பச்சைப் பசேலென்ற வயல்வெளி, தாவணி போட்ட பெண்கள், கைலி அணிந்த இளைஞர்கள், திருவிழா பாடல் என்ற போலி பிம்பத்தை  உடைத்தெறிந்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். நீண்ட காலத்துக்கு பிறகு ஓர் அசல் கிராமத்தையும், கிராமத்து மனிதர்களையும் கண்முன் கண்டுவந்திருக்கிறார். 

விஜய் சேதுபதி, யோகி பாபு என ஒருசிலரைத் தவிர படத்தில் நடித்த  பெரும்பாலானவர்கள் நிஜமாகவே கிராமத்து மனிதர்கள். குறிப்பாக படத்தில் மாயாண்டி என்ற விவசாயியாக நல்லாண்டி என்ற முதியவர் நடித்திருக்கிறார். உண்மையில் அவர் மாயாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார்.

அவருக்கு விவசாயத்தைத் தவிர எதுவும் தெரியாது. காவலரைப் பார்த்து அவர் காக்கி உடை அணிந்திருப்பதால் மின் வாரிய ஊழியர் என நினைத்துக்கொள்ளக்கூடிய அப்பாவி. உண்மையில் அவர் அப்படித்தான் என தோன்றுகிறது. அவரது அப்பாவித்தனத்தைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். நல்லாண்டிக்கு அவரது வேடத்தைச் சொல்லிப் புரியவைத்துப் படமாக்குவது என்பது மணிகண்டனுக்கு சவாலான பணியாக இருந்திருக்கும்.

படத்தில் ஒளிப்பதிவாளரும் அவரே என்பதால் உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்துக்கே நேரடியாக சென்று வந்த உணர்வைக் கொடுக்கிறார். நடித்திருப்பவர்கள் எல்லாம் மதுரைத் தமிழை மிக இயல்பாக பேசுகிறார்கள். வசனமாக இல்லாமல் காட்சியையும், அதன் சூழ்நிலையையும் சொல்லி, நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு மணிகண்டன் சொல்லியிருப்பாரோ என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு வசனங்கள் இயல்பாக இருக்கின்றன. ஒருசில இடங்களில் மட்டும், நூறு நாள் வேலைத் திட்டத்தை எதிர்ப்பது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். 

கிராமத்தில் யானையை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார் யோகி பாபு. யானை யானையாகவே இருக்கிறது. யோகி பாபு யோகி பாபுவாகவே இருக்கிறார். நல்லவேளையாக அவருக்கு மொத்தமே 4 காட்சிகள்தான். அதில் ஒரு காட்சியில் பின்னால் கடந்துபோகிறார். 

தனது வாழ்வில் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தினால் எதிலும் பற்றற்ற நிலையில் இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரது தோற்றமும் நடவடிக்கைகளையும் வைத்து நாமே நமது கிராமத்தில் (அப்படி இருக்கிறவர்கள் மட்டும்) ஒருவரை உருவகப்படுத்திக்கொள்ள முடியும். அந்த அளவுக்கு இயல்பாகச் செய்திருக்கிறார்.

துவக்கத்தில் அவர் வரும் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து அவரது வேடத்துக்கும் படத்துக்கும் பெரிதாக  சம்பந்தமில்லாததால், அவர் வரும் காட்சிகளைப் படத்தொகுப்பாளர் தவிர்த்திருக்கலாம்.

அவர் விஜய் சேதுபதி என்பதாலேயே அவ்வளவு முக்கியத்துவம்  கொடுக்கப்பட்டிருக்கிறதோ என்றுகூட தோன்றுகிறது. படத்தின் விளம்பரத்துக்காகவும் வியாபாரத்துக்காகவும் விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபுவைப் பயன்படுத்தியிருக்கலாம். 

படத்தில் ஆங்காங்கே வரும் காட்சிகளோடு மிக இயல்பான நகைச்சுவையையும் கலந்துசொல்லியிருக்கிறார் மணிகண்டன். அதுவும் கிராமத்தில் எப்படி பேசிக்கொள்வார்களோ அப்படித்தான் இருந்தது. அது படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது. 

படத்தில் நீதிமன்றம் ஓர் அங்கமாக இருக்கிறது. நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக யதார்த்தமாகப் படமாக்கப்பட்டுள்ளன. நீதிபதியாக நடித்திருந்த ரேய்ச்சல் மிக இயல்பாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் படத்துக்குக் கூடுதல் சுவாரசியத்தை அளித்தது. இனி அவரைத் தொடர்ந்து நிறைய படங்களில் காணலாம். 

சந்தோஷ் நாராயணின் இசையில் இரண்டு பாடல்களுமே ரசிக்கும்படி இருக்கின்றன. சந்தோஷ் நாராயண், ரிச்சர்டு ஹார்வியின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றன. ஆனால் முதல் பாதியில் பெரும்பாலான இடங்களில் வரும் இசை படத்தோடு ஒன்றவில்லை. இசையே இல்லையென்றாலும் இந்தக் காட்சிகள் நன்றாகத்தான்  இருந்திருக்கும். 

படம் இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் நீளம். மிக எளிய கதை என்பதால் படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். குறிப்பாக விஜய் சேதுபதி வரும் காட்சிகளை முடிந்தவரை குறைத்திருக்கலாம். கதைக்குள் செல்வதற்கு முதல்  20 நிமிடங்களாகி விடுகிறது.  அதுவரை ஒரு விவசாயியாக மாயாண்டியின் வாழ்வியல் காட்டப்படுகிறது. இந்தக் காட்சிகள் ஒரு சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஒரு விவசாயியின் நிலையை மிக தத்ரூபமாக பதிவு செய்திருக்கும்  இந்த கடைசி விவசாயி, சினிமா ரசிகர்களுக்கு சிறந்த  விருந்தாக இருக்கும்; மற்றவர்களுக்கு ஒரு நல்ல படம் பார்த்த உணர்வைக் கொடுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com