மதுரைக்காரர்கள் என்றாலே முட்டாள்களா ? 'அன்பறிவு' - திரை விமர்சனம்

குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிற   படங்களின் வரிசையில்  இடம் பிடித்திருக்கிறது இந்த அன்பறிவு.
அன்பும் அறிவும்...
அன்பும் அறிவும்...

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா, நெப்போலியன், காஷ்மிரா, ஷிவானி ராஜசேகர், சாய்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் படம் 'அன்பறிவு'.

தமிழ் சினிமாவில் கடந்த 2010 வரை ஒரு வழக்கம் இருந்தது. ஒரு நடிகர் தன்னை மாஸ் ஹீரோவாக மக்கள் மனதில் இடம்பிடிக்க சில கதைகளில் நடித்தாக வேண்டும். குறிப்பாக சமூக பிரச்னைகளில் இருந்து மக்களை காக்கும் சூப்பர் ஹீரோ வேடம், காவல்துறை அதிகாரி வேடம், இரட்டை வேடம் ஆகிய மூன்று வேடங்களை ஏற்றிருக்க வேண்டும். 

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், அஜித் விஜய், சூர்யா ஆகியோர் மேற்சொன்ன மூன்று விதமான வேடங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தனர்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நடைமுறையெல்லாம்  வழக்கொழிந்துவிட்டது. மேற்சொன்ன நடிகர்கள் எல்லாம்கூட தங்கள்  பாணியை மாற்றிக்கொண்டு புதுமையான கதைகளைக் கேட்டு நடிக்கத் துவங்கிவிட்டனர். காரணம் மக்களின் ரசனை மாறிக்கொண்டிருக்கிறது, மேம்பட்டும் வருகிறது.

அதனால் கமர்ஷியல் சினிமாக்களில்கூட யதார்த்தம் கலந்தே சொல்ல வேண்டிய நிலைக்கு இயக்குநர்கள் ஆளாகியிருக்கிறார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான பெரிய நடிகர்களின் படங்களான மாஸ்டர், கர்ணன், டாக்டர், மாநாடு, ஜெய் பீம் படங்கள் இதற்கு பெரும் உதாரணம். 

இந்த நிலையில் 'அன்பறிவு' மூலம் தன்னை மக்கள் மனதில் நிலைநிறுத்திக்கொள்ள மேற்சொன்ன பழைய பாணியைக்  கையிலெடுத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. அவரது முயற்சி கைகொடுத்ததா ?

வழக்கமான இரட்டை வேட படங்களில் ஒரே உருவ ஒற்றுமை கொண்ட குழந்தை பிறக்கும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அந்த குழந்தைகள் பிரிய நேரிடும். வேறு வேறு சூழ்நிலைகளில் அந்த குழந்தைகள் வளர்ந்து பிரிந்த தங்களின் குடும்பத்தை எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும். இந்தப் படமும் அதற்குத் துளியும் விதிவிலக்கல்ல. 

அன்பழகன், அறிவழகன் என இரட்டை வேடங்களில் ஹிப்ஹாப் தமிழா. அன்பு மற்றும் அறிவின் அப்பா - அம்மா குடும்ப பிரச்னை காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அவர்களை அன்பு மற்றும் அறிவு எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதே படத்தின் கதை. அன்பறிவு என்ற இரட்டை சண்டைப்பயிற்சி இயக்குநர்களை நினைவுபடுத்தும் விதமாக இந்தப் படத்துக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

மதுரையில் தாத்தா மற்றும் அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறார் அன்பு. கனடாவில் அப்பாவின் பாதுகாப்பில் வளர்கிறார் அறிவு. அன்பு மற்றும் அறிவு தலைமுடி, தாடி என தோற்றத்தில் இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நடிப்பிலும்தான். ஒரே ஒரு வித்தியாசம். அன்பு மதுரை தமிழ் பேச முயற்சிக்கிறார். கனடாவில் வளர்வதால் அறிவு ஸ்டைலிஷாக இங்கிலீஷ் பேச முயற்சிக்கிறார். முக்கியம், முயற்சிக்க மட்டுமே செய்கிறார். 

மதுரை என்றாலே வேட்டியை மடித்துக்கட்டி மீசையை முறுக்கி விட்டுத் திரிவார்கள் என நினைக்கிறார்கள் போல. படம் பொள்ளாச்சி பக்கம் படமாக்கப்பட்டு இருக்கிறது. 250 கி.மீ. பயணம் செய்து மதுரை சென்று சும்மா ஒருமுறை பார்த்திருந்தால்கூட அவர்களுக்கு உண்மை புரிந்திருக்கும்.

மதுரை என்றாலே பாசம் இருக்கும் அளவுக்கு வீரம் இருக்கும், யார் என்ன சொன்னாலும் உடனே நம்பிவிடுவார்கள் என இன்னும் எவ்வளவு நாள்தான் மதுரை மக்கள் என்றாலே முரட்டுத்தனமான முட்டாள்களாகக்  காட்டுவார்களோ தெரியவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு மதுரையை மையப்படுத்தி வரும் படங்களில் ஜல்லிக்கட்டும் இடம் பெற்றுவிடுகிறது. அதையும் தாண்டி மதுரையில் நிறைய நல்ல விஷயங்கள் இருக்கிறது என்பதை இந்த இயக்குநர்கள் புரிந்துகொண்டால் நல்லது.

கதைதான் பழைய கதை என்றால், திரைக்கதையில்கூட துளியும் புதுமை இல்லை. நெப்போலியன், ஆஷா சரத், மாரிமுத்து, விதார்த் என நல்ல நடிகர்கள் நிறைய இருந்தும் அவர்களை மொத்தமாக வீணடித்திருக்கிறார்கள். இதில் விதார்த்துக்கு மட்டும் கொஞ்சம் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. காஷ்மிரா, ஷிவானி ராஜசேகர் என இரண்டு கதாநாயகிகளுக்கும் எந்த வேலையும் இல்லை. இதில் காஷ்மிராவுக்காவது ஒருசில காட்சிகள் இருக்கின்றன. ஷிவானிக்கு ஒரு பாடல் காட்சி மட்டும்தான், பாவம்.

விதார்த் சொல்வதை எல்லோரும் அப்படியே நம்புகிறார்கள். 25 வருடங்களில் ஒருவருக்குக் கூடவா அவரது நோக்கம் புரியவில்லை? அன்பு கனடாவிற்கு கடத்தப்பட்டதாக ஒரு காட்சி வருகிறது. அவரது அம்மா, தாத்தா என அவர் மீது பாசமாக இருக்கும் ஒருவர் அவரை மதுரை அழைத்து வர முயற்சிக்கவில்லை. இப்படி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்.

ஹிப்ஹாப் தமிழாவின் பின்னணி இசை தொலைக்காட்சித் தொடர்களை நினைவுபடுத்துகிறது. 2 மணி நேரம் 45 நேரங்கள் ஓடும் படம். ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு பழைய படத்தை நினைவுபடுத்துகிறது. இதனால் நிறைய இடங்களில் நம் பொறுமையைச் சோதிக்கிறது. 

மொத்தத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் என்றால் சென்டிமென்ட் தூக்கலாக இருந்தால் போதும், மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படத்தை ரசிப்பார்கள் என மக்களின் ரசனையைத் தவறாக மதிப்பிட்டிருக்கும் படங்களின் வரிசையில் இடம்பிடித்திருக்கிறது இந்த அன்பறிவு.

விதியே என்று பார்க்க நேர்ந்தால்தான், இல்லாவிட்டால் இடையிலேயே நிறுத்திவிடலாம். நம்மிடம்தான் ரிமோட் கன்ட்ரோல்  இருக்கிறதே...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com