சாய் பல்லவியின் 'கார்கி' : தமிழின் முக்கியப் படம், ஏன்? - விமர்சனம்

கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் திரைப்பட விமர்சனம் 
சாய் பல்லவியின் 'கார்கி' : தமிழின் முக்கியப் படம், ஏன்? - விமர்சனம்
Published on
Updated on
2 min read

கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் திரைப்பட விமர்சனம் 

பிளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் புட் புரொடக்சன் தயாரித்துள்ள கார்கி படத்தில் சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன்  இயக்கத்தில் உருவாகியிருக்கும்  கார்கி படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா வெளியிடுகின்றனர். 

அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி ஒருவர் 4 வட மாநில இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். காவல் துறையினர் விசாரணையில் 5வது நபராக சாய் பல்லவியின் தந்தை கைது செய்யப்படுகிறார்.

தனது தந்தை நிரபராதி என உறுதியாக நம்பும் சாய் பல்லவி சட்ட ரீதியாக தந்தையை விடுதலை செய்யப்போராடுகிறார். சாய் பல்லவியின் தந்தை விடுதலையானாரா ? 5-வது குற்றவாளி யார் என்ற கேள்விகளுக்கு அழுத்தமாக பதில் சொல்லியிருக்கும் படம் தான் 'கார்கி'. 

கார்கி என்ற நடுத்தர குடும்பத்துப் பெண் வேடத்தை அட்டகாசமாய் பிரதிபலித்திருக்கிறார் சாய் பல்லவி. தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். எல்லா ஆதராங்களும் தனது தந்தைக்கு எதிராக இருக்க அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பதைபதைப்பை ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அவரது நடிப்பு மட்டுமே நம்மை படத்துடன் முழுமையாக ஒன்றி பார்க்க உதவுகிறது. 

அவருக்கு அடுத்தபடியாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் காளி வெங்கட். அவரது திரையுலக வாழ்வில் முக்கியமான படமாக கார்கி நிச்சயமிருக்கும். ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சரவணன் என அனைவரும் தங்கள் கதாப்பாத்திரங்களை சிறப்பாக கையாண்டுள்ளனர்.  நடிகையும் இந்தப் படத்தின்  தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா லக்ஷ்மி, பத்திரிகையாளராக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் பத்திரிகையாளராக வரும் ஐஸ்வர்யா, மலையாள சாயலில் தமிழ் பேசுவது உறுத்தல். 

முதல் பாதி முழுக்க ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அதன் தன்மையும் நமக்கு தெளிவாகக் காட்டப்படுகிறது. அது இரண்டாம் பாதியில் திரைக்கதைக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அப்பாவா பார்க்க வேண்டிய பொண்ணு, ஆம்பளையா பார்க்குறா என்பது போன்ற வசனங்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்துள்ளன. 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலில் இந்தப் படம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தக் கூடும். இந்தப் படம் ஏற்படுத்தும் தாக்கம் எதிரொலியாக, பெண்கள் குறிப்பாக சிறுமிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பேசுபொருளாக மாறும். அந்த அளவுக்கு சரியான சமூக புரிதலுடன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் கௌதம் ராமசந்திரன். குறிப்பாக நீதிபதி திருநங்கை என்பதால் எதிர்கொள்ளும் விமர்சனங்கள், அதற்கு அவர் பதிலடி கொடுக்கும் காட்சி மாஸ் ஹீரோவுக்கு நிகராக கைத்தட்டலைப் பெறுவது உறுதி. 

சாய் பல்லவி சராசரியான நடுத்தர குடும்பத்துப் பெண். அவரது கதாப்பாத்திரத்தை தமிழகத்தில் உள்ள பல பெண்கள் தங்களுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு இயக்குநர் வடிவமைத்திருக்கிறார்.  ஒட்டுமொத்த ஆண்கள் மீதும் தவறான புரிதலை ஏற்படுத்துமோ என அச்சம்கொள்கையில், காளி வெங்கட்டின் கதாப்பாத்திரம் மூலம் பதிலளித்திருப்பது நல்ல யுக்தி.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையாக சரவணன், சாய் பல்லவியிடம் பேசும் காட்சி சற்று அதீதமாக இருந்தது. ஊடகங்கள் வணிகப் போட்டியில் விரைவுச் செய்தியாக ஒன்றை வெளியிடுவதால், பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவுக்கு சிக்கலுக்கு உள்ளாவார்கள் என்பதை அழுத்தமாக காட்டியிருக்கிறார்கள். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை காட்சிகள் தரும் உணர்வை கோடிட்டு காட்டுகின்றன. 

சிறப்பான எழுத்து, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என தமிழ் சினிமாவின் முக்கியமான படம். அவசியமான சமூகக் கருத்துடன் கூடிய படத்தை சுவாரசியமாகத் தந்ததற்கு இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன் உள்ளிட்ட குழுவினருக்கு பாராட்டுகள். கார்கி - கட்டாயம் பார்க்க வேண்டிய படம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com