லிங்குசாமியின் 'தி வாரியர்' - சிங்கம், சிறுத்தைக்கே சவாலா?

லிங்குசாமியின் தி வாரியர் திரைப்பட விமர்சனம் 
லிங்குசாமியின் 'தி வாரியர்' - சிங்கம், சிறுத்தைக்கே சவாலா?

லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தி வாரியர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் மாஸ் ஹீரோவாக வேண்டுமென்றால் போலீஸாக நடித்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. நடிகர் விவேக் கூட ஒரு படத்தில் என் கடமை எம்ஜிஆர் எனத் துவங்கி ஆஞ்சநேயா அஜித் என ஒரு பெரிய பட்டியலை சொல்லுவார். 

தெலுங்கில் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி தமிழில் அறிமுகமான படத்திலேயே போலீஸாக களமிறங்கியிருக்கிறார். லிங்குசாமி இயக்கத்தில் 4 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியிருக்கும் படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. 

4 ஆண்டுகளில் இயக்குநர்களின் திரைமொழி மாறியிருக்கிறது, ரசிகர்களின் ரசனைகள் மாறியிருக்கிறது. ஆனால் பழைய  கமர்ஷியல் படங்களின் பாதிப்பில் உருவாகியிருக்கிறது. இந்த ஒரு படத்தில் சாமி, சிங்கம், காக்க காக்க என பல போலீஸ் படங்களின் சாயல். 

படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் சில காட்சிகளை தமிழிலும் படமாக்கியிருக்கிறார்கள். இருப்பினும் மாற்று மொழி படம் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.  

விசில் மகாலட்சுமி என்ற ஆர்ஜேவாக வரும் கதாநாயகி க்ரித்தி ஷெட்டி முதல் தலைமை மருத்துவராக வரும் ஜெயப்பிரகாஷ் என ஒருவரின் கதாப்பாத்திரம் கூட இயல்பாக இல்லை. அனைத்திலும் செயற்கைத்தனம். 

ஒப்பீட்டளவில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஆதியின் கதாப்பாத்திரம் பரவாயில்லை. அவரின் நடிப்புதான் ஒரே ஆறுதல். தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்களிலும் புதுமையில்லை. 

ராம் பொத்தினேனியின் அம்மாவாக நடித்துள்ள நதியா, ஆதியிடம் ஒரு காட்சியில், 'பிறக்கும்போது என் மகன் அழவில்லை. எனக்கு தெரியும் அவன் அழ பிறக்கவில்லை' என்பது போல ஒரு வசனம் பேசுவார். அப்பொழுது முதல் பாதியில் நாயகன் ராமை ஆதி நடித்து துவம்சம் செய்யும் காட்சி கண்முன் வந்துபோனது. மொத்தத்தில் படம் பார்க்கும் அனைவரும் வாரியர்ஸ் தான்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com