முகப்பு சினிமா திரை விமரிசனம்
எங்கே இருந்தாலும் பிழைக்கலாம் ‘கதிர்’: திரை விமர்சனம்
By சிவசங்கர் | Published On : 29th April 2022 04:48 PM | Last Updated : 29th April 2022 04:48 PM | அ+அ அ- |

எந்தக் காலமாக இருந்தாலும் நாம் ஏதாவது ஒன்றிற்கு அடிமைப்பட்டுதான் இருக்கிறோம் என்பதை காதல், நகைச்சுவை, ஏமாற்றம் வழியாக இன்றைய தலைமுறையின் பிரச்னையைப் பேசியிருக்கிறது ‘கதிர்’ திரைப்படம்.
ஊரில் நண்பர்களுடன் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் நாயகன் கதிர் (வெங்கடேஷ்) ஒருகட்டத்தில் வேலையின்மையால் உருவாகும் அவமரியாதைகளைச் சந்திக்கிறார். பின், இதே ஊரில் இருந்தால் சிரமம்தான் என உணர்வதால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடிச் சென்னைக்குச் செல்கிறார்.
ஆனால், சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாததால் வேலை மறுக்கப்படுகிறது. இறுதியாக நீண்ட முயற்சிக்குப் பின் வேலை கிடைக்கும் நேரத்தில் திடீரென அங்கிருந்து கிளம்பி சொந்த ஊருக்குச் செல்கிறார். அங்கு நாயகனுடைய நண்பன் தற்கொலை செய்து கொள்கிறான். தற்கொலைக்கான காரணம் என்ன? ஏன் வேலையை வேண்டாம் என்றார்? சொந்த ஊரிலிருந்து திரும்பி சென்னைக்கு வந்தாரா என்கிற மீதிக் கதையில் வலுவான காரணங்களைச் சேர்த்திருக்கிறார் இயக்குநர் தினேஷ் பழனிவேல்.
படம் முழுவதும் நகைச்சுவைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றாலும் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்கள். ஊரில் நடக்கும் காட்சிகள் கொங்குதமிழ் என்பதால் வட்டார வசனங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, பட்டிமன்ற பேச்சாளரான மஞ்சுநாதனின் வசனங்களும் உடல்மொழியும் அழகாக இருக்கிறது.
படத்தில் இரு பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன. இரண்டிலும் காதல்கள் இடம்பெற்றிருந்தாலும் 1970-களில் நடக்கும்படியான பிளாஷ்பேக்கில் நடிகர் சந்தோஷ் பிரதாப் வரும் காட்சிகள் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பண்ணையார்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களைக் காட்டிய விதம் தத்ரூபமாக அதே காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
சில நிமிடமே வந்தாலும் கதாநாயகி பாவ்யா த்ரிகா ரசிக்க வைக்கிறார். துணை நடிகர்களான அர்ஜுன் (பரூக்), கோகுல், பாட்டியாக வரும் ரஜினி சாண்டி உள்ளிட்டோர்களின் நடிப்பும் படத்திற்கு முக்கியப் பங்களிப்பை ஆற்றியிருக்கிறது.
ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும் “கல்வி மட்டுமல்ல, காதலும் அடிமைத்தனத்திலிருந்து மீட்கும்” போன்ற சில அழுத்தமான வசனங்களும் எதிர்பார்க்கப்பட்ட அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத சின்னத் திருப்பங்களைக் கொடுத்ததும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளன.
படத்தின் முதல்பாதியில் சில காட்சிகளின் நீளமும், வேலையில்லாமல் இருப்பவர்கள் எல்லாம் என்ஜினியரிங் படித்தவர்கள்தான் என்பதைப் போன்ற பழக்கப்படுத்தப்பட்ட காட்சிகள் படத்தின் பலவீனம்.
இயக்குநர் தினேஷ் பழனிவேல், நாயகன் வெங்கடேஷ் உள்பட படக் குழுவினர் பலருக்கும் இது முதல் படம் என நம்ப முடியாதபடிக்கு தேர்ந்த திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘கதிர்’. பார்க்கலாம்.