மீண்டாரா, 'பழைய’ வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்

மீண்டாரா, 'பழைய’ வடிவேலு? நாய் சேகர் ரிட்டன்ஸ் - திரை விமர்சனம்

சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Published on

சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் மூலம் திரைக்கு வந்துள்ளார். அவரின் நகைச்சுவைக்காகவே காத்திருந்த ரசிகர்களுக்கு சரியான விருந்தைக் கொடுப்பாரா என்கிற எதிர்ப்பார்ப்புடன் இப்படம் வெளியாகியுள்ளது.

கதைப்படி நாய் சேகர்(வடிவேலு) பணக்காரர்களின் நாய்களை கடத்தி  பணம் பறிக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அப்படி, தன் குழுவினருடன் ஒரு நாயைக் கடத்திக் கொண்டுவருகிறார். பின், அதைத் திருப்பித் தர அதன் உரிமையாளரிடம் பெரிய தொகை பேசப்படுகிறது. ஆனால்,  கடத்தப்பட்ட நாய் வேறு ஒருவருடையது. 

அதேநேரம் சிறு வயதில் தான் வளர்த்து வந்த ஒரு நாயைத் தேடி நாய் சேகர் கிளம்புகிறார். அந்த நாய் யாரிடம் இருக்கிறது? எங்கு இருக்கிறது? என்பதை முழுநீள நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

வடிவேலுவின் குழுவினராக நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லி, யூடியூபர் பிரஷாந்த் வரும் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக, இருவரும் மற்றொரு ரவுடியான ஆன்ந்த் ராஜிடம் அடி வாங்கும் காட்சிகளில் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிப்பு வருகிறது.

வில்லனாக மிரட்டி வந்த ஆனந்த் ராஜ் சமீப காலமாக காமெடியில் கலக்கி வருகிறார். இந்தப் படத்திலும் அவர் வரும் காட்சிகளில் இயல்பாக சிரிப்புச் சத்தம் கேட்கிறது. அவர் குழுவில் இடம்பெற்ற லொல்லு சபா சேஷூ, ’என்னம்மா’ ராமர் தங்களுக்கு கிடைத்த சில நிமிடங்களை மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளனர்.

ராவ் ரமேஷ், முனிஷ்காந்த், மனோபாலா, வெங்கல் ராவ் உள்ளிட்டோர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்தை சரியாக கையாண்டுள்ளனர்.

முதல்பாதியின் இறுதி நிமிடங்களிலும் கிளைமேக்ஸிலும் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. 

ஆள்களைக் கடத்தியே பழக்கப்பட்ட தமிழ் சினிமாவில் முதல்முறை நாய்களை கடத்தினால் எப்படி இருக்கும் என்கிற புதிய கருவுடன்  இயக்குநர் சுராஜ் வந்திருந்தாலும் மேக்கிங் மற்றும் திரைக்கதையில் சொதப்பியுள்ளார். 

சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, பாடல்கள் கவனத்தைச் சிதற விடாமல் பார்த்துக்கொள்கிறது.

வடிவேலுவுக்கு வெற்றி கொடுக்கும்  முயற்சியில் இயக்குநர் ஓரளவு வென்றிருக்கிறார். நகைச்சுவை மற்றும் உடல்மொழிகளில் புதிதாக எந்த மாற்றமும் இல்லாத நிலையில், புதுப்புது பாணி காட்டும் ’பழைய’ வடிவேலுவை இனிக் காணவே முடியாதோ என்றே எண்ண வைக்கிறது. 

மொத்தத்தில் எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றால் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ நகைச்சுவைகளை ரசிக்கலாம். எதிர்ப்பார்ப்புடன் சென்றால்? நாய் சேகரை ரசித்துவிட்டு வரலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்