நயன்தாரா நடிப்பில் உருவான ‘கனெக்ட்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கனெக்ட்’.
ரெளடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாராவுடன் வினய் ராய், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கிற்கு முன் சூசன்(நயன்தாரா) குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். பின், கரோனா தொற்று வேகமாகப் பரவத் துவங்கியதும் மருத்துவரான சூசனின் கணவர் ஜோசப் பினாய் (வினய் ராய்) முழுமையாக மருத்துவமனையில் தங்கி விடுகிறார்.
சூசனும் அவருடைய மகளான அன்னாவிற்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுவதால் தனித்தனி அறைகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
அதைத் தொடர்ந்து, அன்னா சில அமானுஷ்ய விசயங்களால் பாதிக்கப்படுகிறார். ஒருகட்டத்தில், அன்னாவிற்குப் பேய் பிடித்திருப்பது தெரிய வருகிறது. யார் அந்தப் பேய்? எப்படி அன்னாவிடம் வந்தது? என்கிற மீதிக்கதையை 99 நிமிடங்களில் பரபரப்புடன் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.
கரோனா காலகட்டத்தில் படம் உருவாகியுள்ளதால் குறைவான கதாபாத்திரங்கள், நினைத்தாலும் ஒருவரை ஒருவர் எளிதாக சந்திக்க முடியாத சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு வேகமான திரைக்கதை மூலம் இடைவேளை இல்லாமல் சுவாரஸ்யமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது கனெக்ட்.
அன்னாவாக நடித்த ஹானியா நஃபிஸ், சூசன் தந்தையான சத்யராஜ் ஆகியோரின் நடிப்பு படத்தின் பலமாக அமைந்துள்ளன.
இறுதிக்காட்சிகளில் வரும் அனுபம் கெர் முகபாவனைகளிலேயே பயத்தைக் கடத்துகிறார்.
பேய் கதைதான் என்றாலும் ப்ரித்வி சந்திரசேகரின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம். ஒவ்வொரு காட்சிக்கும் அதிர வைக்கும் இசையில் பதற்றத்தை உருவாக்குகிறார்.
கதையின் கரு சிறப்பாக இருந்தாலும் பேய் படங்களுக்கே உரித்தான ‘கிளைமேக்ஸ்’தான் இப்படத்திலும் இருக்கிறது. முடிவைத் தெரிந்துக்கொண்டு படம் பார்க்கும் அனுபவத்தைத் தவிர்த்திருந்தால் நிச்சயம் ‘கனெக்ட்’ பேசப்பட்டிருக்கும்.
மொத்தத்தில் படம் எப்படி இருக்கிறது? திரையரங்க அனுபவத்திற்காக ஒருமுறை ‘கனெக்ட்’ உடன் ரசிகர்கள் ‘கனெக்ட்’ ஆவார்கள்..!