நாய் மனிதனாகவும், மனிதன் நாயாகவும் மாறினால்? நாய் சேகர் - திரை விமர்சனம்
By கார்த்திகேயன் எஸ் | Published On : 13th January 2022 04:49 PM | Last Updated : 13th January 2022 05:46 PM | அ+அ அ- |

சதிஷ், பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் நாய் சேகர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
எதிர்பாராத விபத்தினால் நாய் மனிதனாகவும், மனிதன் நாயாகவும் மாறினால் என்னவாகும் என்பதே நாய் சேகர் படத்தின் கதை. இதுவரை நகைச்சுவை நடிகராக இருந்த சதிஷ், முதன்முறையாக கதை நாயகனாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்திலும் நகைச்சுவை கலந்த வேடம் என்பதால் முடிந்த வரை நன்றாகவே செய்திருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்த பவித்ரா லக்ஷ்மிக்கு இது முதல் படம் என்பதால் நிறைய இடங்களில் நடிப்பதற்கு திணறுகிறார்.
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இந்தப் படத்தில் காமெடி கலந்த வில்லனாக நன்றாக செய்திருக்கிறார். விஞ்ஞானி வேடத்தில் வரும் ஜார்ஜ் மரியத்துக்கு முக்கியத்துவமான வேடம். அதனை அவர் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார்.
மேலும், மனோபாலா, கேபிஒய் பாலா, லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசம்பந்தம் உள்ளிட்ட நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். லொள்ளு சபா மாறன் மட்டும் தனது நகைச்சுவை கலந்த வசனத்தால் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கிறார்.
படத்தில் நாய்க்கு முக்கியமான வேடம். அந்த நாய்க்கு படையப்பா என்று பெயர். நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா குரல் கொடுத்திருக்கிறார். அவரது குரல் படத்துக்கு பெரும் பக்கபலமாக அமைந்திருக்கிறது. நிறைய இடங்களில் மிர்ச்சி சிவாவின் வசன உச்சரிப்பு சிரிப்பை வரவழைக்கின்றன.
ரஜினி ரசிகர்கள் ரசிக்கக் கூடிய வகையில் நிறைய காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கின்றன. நாய் வரும் காட்சிகள் குழந்தைகள் ரசிக்கும்படி படமாக்கப்பட்டுள்ளன.
ஒரு நகைச்சுவை படத்துக்கு அஜீஷின் பின்னணி இசை பெரிதும் கைகொடுத்திருக்கின்றன. பாடல்களில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாய் சண்டையிடும் காட்சிகளில் பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவு நன்றாக இருந்தது.
பவித்ராவை லொள்ளு சபா மாறன் குழுவினர் கடத்தும் காட்சி ஒன்று படத்தில் வாய்விட்டுச் சிரிக்கும்படி இருந்தது. சதீஷ் நாயாக மாறும் காட்சி, நகைச்சுவை கலந்த இறுதி சண்டைக்காட்சி படத்தில் குறிப்பிடும்படியான சுவாரசிய அம்சங்கள். இதனைப் போலவே மற்ற காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஃபேன்டசி படத்தில் லாஜிக் பார்க்காதீர்கள் என்ற அறிவிப்புடன் தான் படம் துவங்குகிறது. என்னதான் ஃபேன்டசி படமாக இருந்தாலும், அந்தக் கதைக்கு என சில லாஜிக் இருக்கும். அதுதான் நாய் சேகர் படத்தில் முக்கிய பிரச்னை.
டீசரை பார்த்தாலே படத்தின் கதை என்னவென புரிந்திருக்கும். சதிஷ் நாயாக மாறிய பின்னர், அதற்கேற்ற குணநலன்களுடன் நடந்துகொள்கிறார். ஆனால், சில காட்சிகளில் சாதாரண மனிதனாக நடந்துகொள்கிறார். சதிஷ் நாயாக மாறும் முக்கிய நிகழ்வு கிட்டத்தட்ட இடைவேளை நெருங்கும்போதுதான் நடக்கிறது. அதுவரை படம் நம் பொறுமையை நிறையவே சோதிக்கிறது. அதன் பிறகு ஓரளவுக்கு நகைச்சுவைகள் கைகொடுக்கின்றன.
நகைச்சுவை படம் என்றாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் சதிஷ் - பவித்ராவின் காட்சிகள் கதைக்கு முக்கியத்துவம். ஆனால் பவித்ராவிற்கு சதிஷின் மேல் ஏன் காதல் வருகிறது என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். இரண்டாம் பாதிக்கு மேல் படத்தில் நகைச்சுவை காட்சிகள் முதல் பாதியை ஒப்பிடுகையில் நன்றாக இருந்தன. நாய் மனிதனாகவும், மனிதன் நாயாகவும் மாறினால் என்ன ஆகும் என்ற ஃபேன்டசி கலந்த கதை என்பதால் குழந்தைகள் ரசிக்கலாம்.