மறுபிறவி எடுக்கும் காதலன் 'ஷியாம் சிங்கா ராய்’- திரை விமர்சனம்

வாசுவாகவும், ஷியாமாகவும் நானியே நடித்துள்ளார். இருப்பினும், தன் அசத்தலான நடிப்பால் இரண்டும் வேறு வேறு ஆள் என்கிற பிம்பத்தை சரியாக நானி உருவாக்கியது தான் படத்தின் பலம்.
மறுபிறவி எடுக்கும் காதலன் 'ஷியாம் சிங்கா ராய்’- திரை விமர்சனம்

இயக்குநராக போராடிக்கொண்டிருக்கும் வாசு(நானி) நீண்ட முயற்சிக்குப் பின் ஒரு குறும்படத்தை எடுத்து தயாரிப்பாளரை அணுகி பட இயக்குவதற்கான வாய்ப்பைப் பெறுகிறான்.

வேகமாக அதற்கான வேலைகள் நடைபெற்று படமும் பெரிய வெற்றியைப் பெறுகிறது. பின், அதே படத்தை ஹிந்தியில் இயக்க ஒரு நிறுவனம் வாசுவை ஒப்பந்தம் செய்யும்போது திரைப்படமாக எடுத்த கதை 50 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நாவல் என அதைப் பதிப்பித்த பதிப்பகம் வாசு மீது வழக்குப் பதிகிறார்கள். திருடப்பட்டதாக கூறப்படும் நாவலை எழுதியவர் ஷியாம் சிங்கா ராய்! 

நாவலின் ஒருபக்கத்தைக் கூட படிக்காத வாசு எப்படி அக்கதையிலுள்ள அனைத்துக் கதாப்பாத்திரங்களின் பெயரையும் அப்படியே தன் திரைப்படத்தில் பயன்படுத்தினார் என்பது மீதிக்கதை. 

வாசுவாகவும், ஷியாமாகவும் நானியே நடித்துள்ளார். இருப்பினும், தன் அசத்தலான நடிப்பால் இரண்டும் வேறு வேறு ஆள் என்கிற பிம்பத்தை சரியாக நானி உருவாக்கியது தான் படத்தின் பலம்.

படத்தின் ஆரம்பக் காட்சிகள் பொறுமையைச் சோதித்தாலும் ஷியாம் சிங்கா ராயின் காட்சிகள் வரும்போது படம் முற்றிலும் இன்னொரு பரிணாமத்தை அடைகிறது. தேவதாசி முறைகளை ஒழிக்கும் புரட்சியாளனாக ஷ்யாமின் கருத்துகள் படத்துடன் ஒன்றச் செய்கின்றன.

ஷியாம், ரோசியின்( சாய் பல்லவி)  காதல் காட்சிகள் திரும்பத் திரும்ப பார்த்து ரசிக்கும்படி மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, சாய் பல்லவியின் அறிமுக நடனக்காட்சி தேவதாசிகளாக இருந்தவர்களைப் பற்றிய ஆவணம் என்கிற அளவில் அற்புதமாக இருக்கிறது.

5 மொழிகளில் வெளியான படம் என்றாலும் மூலம் தெலுங்கு தான். ஆனாலும், தமிழில் வசனங்கள் அபாரமாக எழுதப்பட்டுள்ளன. ‘ சுயநலத்தைப் போல ஒரு சித்தாந்தம் இல்லை’ ‘மனிதனை மதிக்காத இடம் நாடாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் எனக்குத் தேவையில்லை’ போன்ற வசனங்கள் கைதட்ட வைக்கின்றன.

வாசுவிற்கு நாயகியாக வரும் க்ரித்தி ஷெட்டி பெரிதாக கவரவில்லை. வழக்கறிஞராக சில காட்சிகளே தோன்றினாலும் முரளி ஷர்மா உடல்மொழியால் வியக்க வைக்கிறார். நாயகியாக இருந்து துணை நடிகையாக மாறிய மடோனா செபாஸ்டீன் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

ராகுல் சங்கிரித்யனின் இயக்கம், ஜான் வர்க்கீஸின் அழகான ஒளிப்பதிவு போன்றவை சுமாரான படமாக  மாறியிருக்க வேண்டிய கதையை காப்பாற்றியிருக்கிறது.

எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் படத்தில் பாராட்டப்பட வேண்டியது ஷியாமாக வரும் எழுத்தாளன், புரட்சியாளன், காதலன் நானியின் கதாப்பாத்திரத்தை சரியாக, சோர்வு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கிய திரைக்கதையைத் தான். 

ஷியாம் சிங்கா ராய் - கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com