தி லெஜண்ட் - திரை விமர்சனம் - ஹீரோவாக வெல்வாரா லெஜண்ட்?

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் திரை விமர்சனம் 
தி லெஜண்ட் - திரை விமர்சனம் - ஹீரோவாக வெல்வாரா லெஜண்ட்?
Published on
Updated on
2 min read

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜெண்ட் திரை விமர்சனம்... 

'சிவாஜி' பட ரஜினிகாந்த்தைப் போல வெளிநாட்டிலிருந்து மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என வரும் ஹீரோ, அதைப் போலவே நண்பராக விவேக், சிவாஜி பட வில்லனான சுமன் இந்தப் படத்திலும் வில்லன், அங்கே சுமனுக்கு பின்னணி பேசிய சுப்பு பஞ்சுதான் இந்தப் படத்திலும் பின்னணிக் குரல். சிவாஜி படத்தில் வருவதைப் போல பாடல்கள் என படத்தின் முதல் பாதி  சிவாஜி சாயல்.

தன் பட விளம்பரங்களில் பிரபல ஹீரோயின்களுடன் நடனமாடி பிரபலமான லெஜண்ட் சரவணன் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக  அறிமுகமாகியிருக்கிறார். பல பேட்டிகளில் தனது நடிப்பு குறித்து பேசிய சரவணன், தான் ஒரு ரஜினி ரசிகன் எனவும், தன்னையும் மீறி நிறைய காட்சிகளில் ரஜினி போல் நடித்திருந்ததாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். 

அவர் சொன்னது போலவே நிறைய இடங்களில் நடை, முகபாவனை என  ரஜினியின் சாயல். துறுதுறு இளைஞராக தன்னைக் காட்டிக்கொள்ள நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. பாடல்கள், சண்டைக் காட்சிகள் என ஓரளவுக்கு சமாளித்திருக்கிறார். உணர்வுபூர்வமான காட்சிகளில் நடிப்பதற்கு இன்னும் பயிற்சி தேவை. 

ஊர்வசி ரௌடேலா, கீத்திகா திவாரி என இரண்டு நாயகிகள். மேலும் யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி தலா ஒரு பாடலுக்கு நடனமாடிவிட்டுச் செல்கின்றனர். 

சுமன், வம்சி கிருஷ்ணா, ஹரிஷ் பேரடி ஆகியோர் 80களின் வில்லன்களை நினைவுபடுத்துகின்றனர். விஜயகுமார், பிரபு, லிவிங்ஸ்டன், சச்சு, மயில்சாமி, சிங்கம்புலி, மன்சூர் அலிகான், லதா உள்ளிட்டோர் சம்பிரதாயமாக வந்துபோகின்றனர். இவர்களுக்கு இன்னமும் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தந்திருக்கலாம். குறிப்பாக, பிரபுவை சிறப்பாகப்  பயன்படுத்தியிருக்கலாம். மிக சுமாராக எழுதப்பட்ட காட்சியென்றாலும் மன்சூர் அலிகான் தனது பாணியிலான நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். 

முதல் பாதிக்கு விவேக், இரண்டாம் பாதிக்கு யோகி பாபு என ஆங்காங்கே சிரிக்க வைக்க முயன்றிருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் ஏற்கெனவே கேட்ட ரகம். படத்தில் இல்லாத எனர்ஜியைத் தனது பின்னணி இசையின் மூலம் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். சில இடங்களில் அவை ரசிக்க முடிந்தாலும் ஒருகட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவுதான் ஒட்டுமொத்த படத்தில் பெரும் ஆறுதல். குறிப்பாகச் சண்டைக்காட்சிகளில் தனது ஒளிப்பதிவின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார். 

கிராமத்துப் பெண்ணாக கீத்திகா திவாரி எப்படி இயல்பாக இல்லையோ,  அவருக்கும் லெஜண்ட் சரவணனுக்குமான காதல் காட்சிகளும் இயல்பாக  இல்லை. காதல் காட்சிகள் மட்டும் இல்லை, லெஜண்ட் சரவணனின் பாட்டியாக சச்சு, அப்பா, அம்மாவாக விஜய்குமார் - லதா, அண்ணனாக பிரபு என அனைத்து கதாபாத்திரங்களும் செயற்கைத்தனமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் உணர்வுப்பூர்வமான காட்சிகள் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 

அதற்கு ஒரு படி மேல், நம்பியார் காலத்து வில்லனாக சுமன். 70, 80களிலேயே பார்த்து சலித்துப்போன ஹீரோ - வில்லன் மோதல், பழிவாங்கும் காட்சிகள் போன்றவை பொறுமையைச் சோதிக்கின்றன.  இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி படத்தை உருவாக்குவதில் காட்டிய அக்கறையை கதை - திரைக்கதையிலும்  காட்டியிருந்தால் இந்த தி லெஜண்ட்டை இன்னமும் ரசித்திருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com