எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கமல் - லோகேஷ் கூட்டணி? விக்ரம் | திரைவிமர்சனம்

தன் முந்தைய படங்களின் தொடர்ச்சியைப் போலவே இப்படத்திலும் போதைப்பொருளை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ். 
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா கமல் - லோகேஷ் கூட்டணி? விக்ரம் | திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எப்போதும் அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருப்பது இயல்பு. 

சில படங்களில் இயக்குநரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றி தோல்வியும் இதற்கான காரணமாக அமைகின்றன.

அந்த வகையில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் நீண்ட நாள்களுக்குப் பின் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது  ‘விக்ரம்’.

தன் முந்தைய படங்களின் தொடர்ச்சியைப் போலவே இப்படத்திலும் போதைப்பொருளை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் லோகேஷ். 

வில்லனாக வரும் விஜய் சேதுபதியின் (சந்தானம்) பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் காணாமல் போகிறது. அது கிடைக்கவில்லை என்றால் தன் குடும்பத்தையே ரோலக்ஸ் அழித்துவிடுவான் என்கிற பயத்தில் கடத்தலில் தொடர்புடையவர்களைத் தேடிப் போகிறான். இடையே, கமல்ஹாசன் (கர்ணன்) மற்றும் ஃபஹத் ஃபாசில் (அமர்) இருவருக்கும் மறைக்கப்பட்ட போதைப் பொருளுக்கும் என்ன சம்பந்தம்? யார் அந்த ரோலக்ஸ்?  என்பதை சுவாரசியமான முறையில் திரைக்குக் கடத்தியிருக்கிறார் இயக்குநர்.

திரும்பத் திரும்ப லோகேஷ் கனகராஜ் போதைப்பொருளை மையமாக வைத்து திரைப்படத்தை எடுப்பதாலோ என்னவோ படம் முழுவதும் ஊகிக்கக் கூடிய காட்சிகளாகவே இருக்கின்றன. 

முக்கியமாக, படத்தின் முதல்பாதி பொறுமையை சோதிக்கிறது. ஒரு கட்டத்தில் இது கமல்ஹாசன் திரைப்படமா இல்லை  ஃபஹத் ஃபாசில் படமா என்கிற அளவிற்கு ஃபஹத்தின் காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருக்கின்றன. முதல் பாதியை முழுமையாக ஃபஹத் ஃபாசில் ஆக்கிரத்திருந்த நிலையில் இரண்டாம் பாதியில் கமல்ஹாசனின் காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது படத்தின் சுவாரசியத்திற்கு மேலும் உதவி செய்துள்ளது.

விஜய் சேதுபதியின் தோற்றமும் நடிப்பும் கொஞ்சம் புதுமையாக இருந்தது படத்திற்கு கூடுதல் பலம். நாக்கைத் துருத்திக்கொண்டு  அறிமுகமாகும் காட்சியிலும் திருமண நிகழ்ச்சியில் ஏற்படும் சண்டைக் காட்சியிலும் தன் அசத்தலான நடிப்பில் பலமாக கைதட்ட வைக்கிறார். கமல்ஹாசனின் உடல்மொழியும் சண்டைக்காட்சிகளில் வெளிப்படும் ஆக்ரோசமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருந்தாலும் படத்தில் அவர் வரும் காட்சிகளின் நீளம் குறைவாக இருப்பது பெரிய ஏமாற்றத்தையே அளிக்கிறது. 

அப்பா, மகன், பேரன் என மூன்று தலைமுறை பாசங்களை இணைத்திருந்தாலும் பெரிதாக அவை ஈர்க்கவில்லை.

இருப்பினும், கைதி மற்றும் பழைய விக்ரம் (1986) திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பல இடங்களில் கைதி திரைப்படத்தின் காட்சியின் சாயல்கள் நினைவிற்கு வராமல் இல்லை.

அன்பறிவின் சண்டைக் காட்சிகள், அனிருத்தின் பின்னணி இசை, கிரிஷ் கங்காதரனின் அபாரமான ஒளிப்பதிவு ஆகியவை படத்திலிருந்து கவனத்தை சிதைக்காமல் பார்த்துக் கொள்கின்றன.

குறிப்பாக, கமல் வீட்டில் இல்லாதபோது ஏற்படும் சண்டையில் அங்கு பணிபுரியும் பெண் யார் என்பதும்  கிளைமேக்ஸ் காட்சியில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் மற்றும் நடிகர் சூர்யாவின் தோற்றமே படம் பார்த்த பின்பும் நினைவில் நிற்கிறது. துணை நடிகர்களான நரேன், செம்பன் வினோத் ஆகியோர் சிறப்பான  நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனக்கான திரைமொழியை அழுத்தமாக பதிவு செய்ததுடன் பெரிய நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் அதிக திரைக்காட்சிகளை மாற்றி வில்லன்களுக்கும் முக்கியத்துவம் தரும் பாணி பாராட்டத்தக்கது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் அதை பூர்த்தி செய்ததா என்கிற கேள்விக்கு இன்னும் கதையில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

திரையரங்க அனுபவத்திற்காக 'விக்ரம்'  படத்தைப் பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com