ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஆர்ஆர்ஆர். தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகிய இரு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. சீதாராம ராஜுவாக ராம் சரணும், கொமரம் பீமாக ஜுனியர் என்டிஆரும் நடித்துள்ளனர். ஒருவர் நீர், மற்றொருவர் நெருப்பு என கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி.
படத்தில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் இருந்தாலும் படம் முழுக்க ராம் சரணும், ஜூனியர் என்டிஆர் மட்டுமே பிரதானமாக வருகிறார்கள். வலுவான வேடத்தை ஏற்றுள்ள இருவரும் தங்களது பங்கிற்கு நியாயம் செய்துள்ளனர். குறிப்பாக சண்டைக்காட்சிகள் உட்பட சாகச காட்சிகளில் மிரட்டுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் செந்தில் குமார், கலை இயக்குநர் சாபு சிரில், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் இணைந்து உலகத் தரமான படத்தை அளித்திருக்கிறார்கள்.
வரலாற்றுப் பின்னணி கொண்ட படம் என்பதால், சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பான இந்தியாவைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக அமைத்துக் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்கள். பெரிய திரையில் கண்டால் மட்டுமே முழுமையான அனுபவம் கிடைக்கும்.
தங்கை பாசம், பிரிந்த அண்ணன் தம்பி ஒன்று சேருவது என மிகவும் பழைய பாணி கதை அமைப்பு, முன்பே கணிக்கக் கூடிய காட்சிகள் என வழக்கமான தெலுங்குப் படங்களை நினைவுபடுத்தினாலும், அதனை தனது பிரமாண்டமான காட்சியமைப்பின் மூலம் மறக்கடிக்கிறார் இயக்குநர் ராஜமௌலி. இயக்குநர் ராஜமௌலிதான் படத்தின் நாயகன்.
முதல் பாதி முழுக்க சில சுவாரசியமான காட்சிகள் இருந்தாலும் படம் மெதுவாகவே நகர்கிறது. ராம் சரண் ஏன் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என்ற ஒற்றைக் கேள்வி படத்தை கவனத்துடன் பார்க்க உதவியிருக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அதற்கான விளக்கம் கிடைத்தவுடன் படம் மிக வழக்கமான பாணிக்கு மாறுகிறது. மேலும் இறுதிக்காட்சி மிகச் சாதாரணமாக இருக்கிறது. அதனை இன்னும் சுவாரசியமாக படமாக்கியிருக்கலாம்.
ஒலிவியா மோரிஸை ஈர்க்க ஜூனியர் என்டிஆர் எடுக்கும் முயற்சி, அதற்கு ராம் சரண் உதவும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. நாட்டு நாட்டு பாடலும் அதனையொட்டிய காட்சிகளும் சுவாரசியமாக இருக்கின்றன.
தமிழ்ப் பதிப்பில் ஜூனியர் என்டிஆர், ராம் சரணை சில காட்சிகளில் அண்ணா என்கிறார், சில காட்சிகளில் பையா என்கிறார். இப்படித்தான் வசனங்களில் ஆங்காங்கே சில முரண்கள் இருக்கின்றன. இவையெல்லாம் படத்தை அப்படியே தமிழுக்கு ஏற்றார்போல மாற்றுவதில் மதன் கார்க்கிக்கு குழப்பம் இருந்ததைக் காட்டுகின்றன.
படம் உணர்வுபூர்வமாக அனைவரையும் ஈர்க்குமா என்பது சந்தேகமாகத் தோன்றினாலும், பிரமாண்டமான காட்சி அனுபவம், மிரட்டலான சண்டைக் காட்சிகள் என அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமானதாக இருக்கிறது ஆர்ஆர்ஆர்!