'இடியட்' - திரை விமர்சனம் : படம் எப்படி இருக்கிறது ?

ராம் பாலா இயக்கத்தில் சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள இடியட் திரை விமர்சனம்
'இடியட்' - திரை விமர்சனம் : படம் எப்படி இருக்கிறது ?

'தில்லுக்கு துட்டு', 'தில்லுக்கு துட்டு 2' படங்களின் இயக்குநர் ராம் பாலா இயக்கிய 3வது படம் 'இடியட்'. சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீன் ஸ்கிரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. 

சந்தானம் ஒருவேளை இந்தப் படத்தில் நாயகனாக இருந்திருந்தால் இந்தப் படத்துக்கும் 'தில்லுக்கு துட்டு 3' என பெயர் வைத்திருந்திருப்பார்கள். சிவா நாயகன் என்பதால் தலைப்பை மாற்றியிற்றிருக்கிறார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு தில்லு துட்டு பாணியில்தான் இந்தப் படமும் பேய், பாலடைந்த பங்களா என உருவாக்கப்பட்டிருக்கிறது.

வழக்கமான பேய் படங்களைப் போல இந்தப் படத்துக்கும் சம்பிரதாயமாக ஒரு ஃபிளாஸ்பேக் வந்துபோகிறது. முதல் பகுதி பெரும்பாலும் லொள்ளு சபா பாணியிலான காட்சிகள்தான் இருக்கின்றன. வில் ஸ்மித், கிறிஸ் ராக் விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில் படத்தில் நிறைய உருவக் கேலி வசனங்கள். 

கார் ஒன்றில் பெண் அணியும் துப்பட்டா இருக்கிறது. நகைச்சுவை நடிகர், 'பாஸ் துப்பட்டா' என்கிறார். அதற்கு மற்றொருவர் 'இங்கே துப்பாத, கொஞ்சம் தள்ளி துப்பு'' என பதிலளிக்கிறார். இந்த பாணியில்தான் படம் முழுக்க பேசுகிறார்கள். 

முதல் பகுதியை ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியில் சில இடங்களில் நகைச்சுவை ஓரளவுக்கு கைகொடுத்திருக்கிறது. இடியட் என்ற படத்தின் பெயருக்கேற்ப எல்லோரும் முட்டாள்களாக இருக்கிறார்கள். படத்தின் ஒருவரின் அறியாமையை வைத்து நம்மை சிரிக்கை வைக்க முயற்சிக்கிறார்கள். 

கதை என்ற ஒன்றை மறந்துவிட்டு திக்கெட்டு அலைகிறது திரைக்கதை. ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் துளியும் சம்மந்தமில்லாமல் இருக்கிறது. கதாப்பாத்திர வடிவமைப்பும் மிக மோசமாக இருந்தது. ராம்பாலாவின் முந்தைய படங்களும் அப்படித்தான் இருக்கும் என்பதால் அது ஒரு பெரிய குறையாக இல்லை.

லொள்ளு சபா நிகழ்ச்சிபோல பேய் படங்களை கேலி செய்திருப்பதுதான் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 படங்களின் சிறப்பு. இந்தப் படத்திலும் அதனை முயற்சித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் பெரிதும் கைகொடுக்கவில்லை. இரண்டாம் பாதியில் ஆனந்தராஜ், ஊர்வசியின் நடிப்பு படத்துக்கு பெரிதும் பலம் சேர்த்துள்ளது. அவர்கள் வரும் காட்சிகள் சிரிக்கும்படி இருந்தன.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டசார்ஜியும், இசையமைப்பாளர் விக்ரம் செல்வாவும் இசையும் ஒரு நகைச்சுவை படத்துக்கு உண்டான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தில் ஒரு பாடல்தான் என்பது ஆறுதல். 

முதலில் சொன்னதுபோல தில்லுக்கு துட்டு பாணியில்தான் இந்தப் படத்தின் திரைக்கதையும் இருக்கிறது. லாஜிக் பற்றி கவலைப்படாமல் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். இருப்பினும் முதல் பகுதியில் நகைச்சுவைக்கு கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் தில்லுக்கு துட்டு பட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com