12த் மேன்: ரகசியங்கள் உடையும் தருணம் - திரை விமர்சனம்

த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி மீண்டும் இணைந்து எடுத்துள்ள படம் ‘12த் மேன்’. ஓடிடியில் வெளியான மலையாளப் படம்.
12த் மேன்:  ரகசியங்கள் உடையும் தருணம் - திரை விமர்சனம்

த்ரிஷ்யம் புகழ் ஜீத்து ஜோசப் - மோகன்லால் கூட்டணி மீண்டும் இணைந்து எடுத்துள்ள படம் ‘12த் மேன்’. ஓடிடியில் வெளியான மலையாளப் படம்.

மோகன்லாலுடன் சாஜி குருப், உண்ணி முகுந்தன், அனுஸ்ரீ, அனு சித்தாரா, அதிதி ரவி, ஷிவாதா, அனு மோகன், ப்ரியங்கா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பள்ளி நண்பர்களும் அவர்களின் மனைவியருமாக சேர்த்து 11 பேர். ஒருவர் மட்டும் துணையைப் பிரிந்த நிலையில் இருப்பதால் 11 ஆக இருக்கிறார்கள். அவர்களில் கடைசியாக இணையப் போகும் ஒருவனுடைய திருமண  பேச்சிலர் பார்டிக்கு எல்லா நண்பர்களுமாக ஒரு மலைப்பிரதேச விடுதிக்குச் செல்கிறார்கள். அங்கு 12வது ஆளாக வருகிறார், அந்த விடுதி உரிமையாளரின் நண்பராகக் குடிகாரர் கதாபாத்திரத்தில் மோகன்லால். 

இந்த நண்பர் கூட்டத்திலுள்ள 11 பேரில் ஒருவர் இறந்து விடுகிறார். அது கொலையா, தற்கொலையா, கொலையெனில் அதைச் செய்தது யாரென ஒரே இரவில் ஒரே இடத்தில் உட்கார வைத்து விசாரித்துக் கண்டுபிடிக்கும் ஒரு திரில்லர் கதைதான் படம்.

அதைக் கண்டுபிடிக்கப் போவது யார்? என்பது எல்லாருக்கும் தெரியும் என்றாலும் திரைக்கதையின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார் இயக்குநர்.

முதல் 30 நிமிடங்கள் மெதுவாகச் செல்வது படத்திலிருந்து கவனத்தை விலக்கினாலும் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் மற்றும் அவர்களின் உலகத்தில் ரசிகர்கள் நுழைவதற்குத் தேவையானதாக இருக்கிறது. மெல்ல மெல்ல த்ரில்லர் கதைக்குள் திரைக்கதை வடிவம் நுழைகிறது.

இந்த படம் த்ரில்லர் என்பதாக வகைப்படுத்தப்பட்டாலும் உறவுச்சிக்கல்கள் நிறைந்த கதாபாத்திரங்கள், திருமணம், பிரிவு, வாழ்க்கை முறை என்று வாழ்க்கையின் பக்கங்களைத் தொட்டுச் செல்கிறது. கணவனைப் பிரிந்து இருக்கும் பெண்கள், மற்ற‌ பெண்கள் மத்தியில் எவ்வாறெல்லாம் அலட்சியப்படுத்தப்படுகிறார்கள் என்ற காட்சியமைப்புகள் வலுவாகவே பதியப்பட்டுள்ளன. குடும்ப பெண்களின் நடிப்புகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. மனிதர்களின் கௌரவம், நம்பிக்கைகள், இரட்டைத் தனங்கள் மற்றும் ரகசியங்கள் எல்லோர் மத்தியிலும் உடையும் தருணங்கள் படத்தைச் சாதாரண த்ரில்லரில் இருந்து வேறு தளத்திற்குக் கொண்டுசெல்கிறது. 

கரோனா காலகட்டத்தில் படம் எடுத்திருக்கிறார்கள்.‌ 90% படம் ஒரே இடத்தில்தான். ஆனால், திரைக்கதை விரிவாக 11 பேரின் உலகங்களுக்குள் செல்கிறது. முதல் முப்பது நிமிடங்களைப் படம் முடிந்த பிறகு மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தந்த கதாபாத்திரத்தின் மனங்களை, அவர்களின் தேவைகளை, நியாயங்களை ஆரம்பத்திலேயே குறிப்பாகத் தந்திருக்கிறார்கள். 

த்ரில்லர்களில் புகழ்பெற்ற ஹிட்ச்காக்கின் ரோப் (1948) என்ற திரைப்படத்தின் கதையும் ஒரே அறையில் நடப்பதுதான். கொலையாளியைக் கண்டறியும் கதை. இந்தப் படத்தைக் கிட்டத்தட்ட அந்த படத்தின் வரிசையில் வைக்கலாம்.‌

படத்தின் கதை ஒரே இடத்தில் இருந்துகொண்டே கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் பயணிப்பதாக இருக்கிறது. இது முன்னரே வேறு சில படங்களில் பயன்படுத்தியிருந்தாலும் இந்தப் படத்தில் அருமையாக கையாளப்பட்டு கதைக்குள் நாமே பயணிக்கும் அனுபவத்தைத் தருகிறது.

நடிப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு என்ற எதையும் கவனிக்க முடியாத  அளவுக்கு படத்தின் திரைக்கதை நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது. 

2013 இல் வெளியான ஜீத்து ஜோசப்பின் மெமரிஸ் படத்திலும் இதேபோல ஒரு ஓபனிங். ஆங்கில பாடல் மூலம் கதாபாத்திரங்களின் சிறிய அறிமுகம். இது இவருடைய பாணி போல. பெரிய படம் என்றாலும் படத்தில் பாடல்கள் இல்லை. இந்தப் படத்திற்குத் திரைக்கதை ஜித்து ஜோசப் அல்ல, கே.ஆர். கிருஷ்ணகுமார். ஒட்டுமொத்த பாராட்டுகளும் இவரைச் சேரும்.

த்ரிஷ்யம் படம் எப்படி நல்ல திரில்லர் அனுபவத்தைக் கொடுத்ததோ அதேவகையில் இந்த படமும்  சமூகம், பெண்கள், வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசியுள்ளது.  தொடக்கத்தில் நிதானமாகச் சென்றாலும் பின்னர் பரபரப்படைகிறது. திரையரங்குகளில் வெளிவந்து இருந்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com