தந்தையை கண்டடைதல்: அனிமல் - திரைவிமர்சனம்! 

ரன்பீர் கபூர் நடித்துள்ள 'அனிமல்' ஹிந்திப் படம் எனக்கூற முடியாத அளவுக்கு நேர்த்தியாக தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள்.
தந்தையை கண்டடைதல்: அனிமல் - திரைவிமர்சனம்! 

ரன்பீர் கபூர் நடித்துள்ள 'அனிமல்' ஹிந்திப் படம் எனக்கூற முடியாத அளவுக்கு நேர்த்தியாக தமிழில் டப்பிங் செய்திருக்கிறார்கள். பார்க்க நினைப்பவர்கள் தமிழிலேயே பார்க்கலாம். 

படத்தின் கதை மிகவும் எளிமையானது. தந்தை மகன் உறவுச் சிக்கல். ஆனால் படத்தின் மேக்கிங் உலகத் தரத்தில் இருக்கிறது. ஒரு கதாபாத்திரத்தினை உருவாக்கி அதனை ஒரு குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் உலவவிட்டு அதனடிப்படையில் கதையை நகர்த்திச் செல்லும் விதம் அற்புதமாக இருக்கிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் படமாக்கல் பாணி இங்கும் இருக்கிறது. அனிமல் படம் அர்ஜுன் ரெட்டி போல அல்ல; அர்ஜுன் ரெட்டியில் நாயகன் தன்னைத் தானே அழித்துக் கொள்வான். இங்கு நாயகன் குறிக்கோளோடு இயங்குகிறான். மிகவும் பாசிட்டிவிட்டி நிறைந்தவன். தன் உயிரையும் பணயம் வைக்கும் அளவுக்கு தந்தையின் மீது அன்பு வைத்துள்ள கதாபாத்திரம்.  

வில்லன் யார்? வில்லனுக்கும் நாயகனுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதை மிகவும் சுவாரசியமாக அமைத்துள்ளார்கள். உறவுச் சிக்கல் என்பதால் கதையிலேயே ஒரு மோதல் இருப்பது கூடுதல் பலம். பாபி தியோல் வில்லனாக மிரட்டியுள்ளார். ரன்பீர் கபூரை தனது கெத்தான வில்லத்தனம் மூலம் பாபி தியோல் திரையில் முந்தியுள்ளார். ஏனெனில் வில்லனுக்கும் காரணங்கள் வலுவாக இருக்கின்றன. வில்லனது உலகம் அவர் குறித்த விவரணைகள் எல்லாமே அட்டகாசமாக எழுதப்பட்டுள்ளது. அநேகமாக இந்த ஆண்டின் சிறந்த வில்லன் விருது நடிகர் பாபி தியோலுக்குதான்!

நடிகர் பாபி தியோல்
நடிகர் பாபி தியோல்

பெண்களை எவ்வளவு அழகாக, பக்குவமாக, எவ்வளவு நுட்பமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக ராஷ்மிகாவின் கதாபாத்திரமும் ரன்பீர் அம்மாவின் கதாபாத்திரமும் மிகவும் அற்புதமாக கையாளப்பட்டுள்ளது. பெண் அடக்குமுறை- சுதந்திரம் குறித்து விவாதிக்க அதிகம் முனைப்பு காட்டப்பட்டுள்ளது. ராஷ்மிகா தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் கணவர் ரன்பீரை நோக்கி கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் அதிரடியாக இருக்கிறது. அதுதான் படத்தின் ஆண்- பெண் குறித்த சமநிலைப் புள்ளி. இதில் யார் சரி என்பதை இயக்குநர் பார்வையாளர்கர்களிடமே விட்டுவிடுகிறார். நிச்சயமாக பெண்களின் நியாயத்தையும் பேசியுள்ளார்.

எல்லாவற்றிலும் உளவியல் இருக்கிறது. அனிமல் படம் இந்த வகையில் மிகச் சிறப்பானது. தந்தை- மகன், கணவன் -மனைவி, காதலன் -காதலி , அம்மா -மகன், அக்கா -தம்பி இப்படி எல்லா தளங்களிலும் அதகளம் செய்திருக்கிறார் சந்தீப் வங்கா. 

தந்தையின் அன்புக்காக ஏங்கும் நாயகன் இறுதியில் தனக்குள் இருக்கும் தந்தையை கண்டடைதலே படத்தின் மையக் கரு. இதை இறுதிக் காட்சியில் சில ஃப்ரேம்கள் மூலம் வசனங்கள் இன்றி காட்சிப்படுத்தியுள்ளார். மகன்களை தாங்கள் நினைக்கும்படி வளர வேண்டும் என நினைக்கும் தந்தைகளுக்கு மகன்களுக்கெனவும் தனியான பாதை இருப்பதை கவனிக்க முடிவதில்லை. 

2018இல் இயக்குநர் நூரி சைலான் இயக்கத்தில் வெளியான துருக்கிய படமான தி வைல்ட் பியர் ட்ரீ (The wild pear tree) படம் தந்தை-மகன் உறவுச் சிக்கல் குறித்து எடுக்கப்பட்ட படங்களில் மிகச் சிறந்த படமாக அறியப்படுகிறது. இந்தியாவில் மட்டுமன்றி உலக சினிமா அளவிலேயே அனிமல் திரைப்படத்துக்கு அந்தப் படத்தின் வரிசையில் நிற்கும் தகுதி இருக்கிறது. 

தி வைல்ட் பியர் ட்ரீ படத்தின் காட்சி...
தி வைல்ட் பியர் ட்ரீ படத்தின் காட்சி...

காமம் குறித்த காட்சிகள் வருகின்றன. ஆனால் எதுவும் கவர்ச்சியாக படமாக்கப்படவில்லை. ஏ சர்டிபிகேட் இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே மட்டுமே பார்க்கும் வகையில் அதீதமான ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருக்கின்றன. வசனங்களும் வயது வந்தோருக்கானவையாகவே இருக்கின்றன. 

ரன்பீர் தனக்கு இருக்கும் சாக்லேட் பாய் இமேஜை இந்தப் படத்தில் அடித்து உடைத்திருக்கிறார். ஆல்ஃபா ஆணாக நடித்துள்ளார். படத்தின் முதல் காட்சியையும் படம் முடிந்து நன்றி சொல்லும் காட்சிகளையும் பார்க்க தவறாதீர்கள். இரண்டாம் பாகம் எடுப்பதற்கான சுவாரசியமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. 

தமிழில் இருந்து முதன்முறையாக ஹிந்திக்கு சென்றுள்ள பிரபல சீரியல் நடிகர் பப்லு பிரித்திவிராஜ் அதகளம் செய்திருக்கிறார். தமிழ் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகள் அற்புதம். ஆக்ஷன் ரசிகர்களுக்கு இடைவேளைக்கு முன்னதான 30 நிமிடங்கள் விருந்து என்றே சொல்லாம்! 

இசை குறித்து தனியாக சொல்லியே ஆக வேண்டும். தந்தை -மகன் குறித்து ஒரு பின்னணி இசை படம் நெடுக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் முடிந்து வீடு திரும்பினாலும் அந்த மெல்லிசை மனதுக்குள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. படத்தில் இடைவேளையின்போது வரும் பஞ்சாபி பாடல் அசலான ஒரு நாட்டுப் புற பாடல். எந்த மண்ணில் இருந்தும் ஒரு அசலான நாட்டுப்புற பாடல் உருவானால் அது மக்களின் மனதை தொடும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு உதாரணம். நிச்சயமாக இந்தப் பாடல் இந்தியா முழுவதும் ஒலிக்கும். காதல் பாடல்கள் மான்டேஜ் சீன்களாக வருவதால் பெரிதாக கவனிக்க முடியவில்லை. 

அடுத்து ஒளிப்பதிவு. இளமைப் பருவம், முதிர் பருவம், குழந்தைப் பருவம் என் நாயகனின் பல கட்ட வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார்கள். முதன்முறை ராஷ்மிகாவை பார்க்கும் நாயகன் மீது படும் வெயில். தன் அம்மாவிடம் அப்பா குறித்து கேட்கும் மகனின் முகம் என பிரேம்களில் தனித்துவம் மிளிர்கிறது. 

ஒரு கதையை எங்கு கட் செய்து அதன் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் எங்கு வரவேண்டும் என்பது படத்தின் திரைக்கதையிலேயே இருந்தால் நலம். இதில் இயக்குநரே எடிட்டர் என்பதால் அதனை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஒரு காட்சியை எங்கு துவங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்ற தெளிவு எடிட்டர் சந்தீப் வங்காவுக்கு இருக்கிறது. 

நேர்த்தியாக எழுதப்பட்ட டிராமா படத்தின் பலமாக இருக்கிறது. வழக்கமான வெற்றி பெற்ற கமர்ஷியல் (விக்ரம், ஜெயிலர்) சினிமாக்களில் பெரும் குறையாக இருந்த எமோஷனல் காட்சிகள் இதில் வலுவாக எழுதப்பட்டுள்ளது. படம் வேகமாக மட்டுமே பயணிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படத்தின் நீளம் மிகப்பெரிய குறையாக இருக்கலாம். 3 மணி நேரம் 21 நிமிஷம் சாதாரண பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். வன்முறை நிறைந்த ஆண்மையை குறித்த நாயகனின் வசனங்கள் சர்ச்சையை உண்டாக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், இவ்வளவு குண்டுகள் உடலில் பட்டும் ஒருவன் பிழைக்கும் லாஜிக்குகள் குறித்து கேள்வி எழுப்பலாம். ஸ்பாய்லர் ஆகக் கூடாது என்பதால் விவரிக்காமல் விட்டுவிடுகிறேன். ஆனால் எல்லாவற்றுக்கும்  இயக்குநர் சந்தீப், படத்தில் நியாயம் சேர்த்திருக்கிறார்‌.

3 மணி நேரம் 21 நிமிஷம் ஒரு உலகத்தினை உருவாக்கி அதில் பார்வையாளர்களை விருவிருப்பாக பார்க்க வைத்ததிலும் தந்தை- மகன் குறித்த மையக் கருவை அற்புதமாக கையாண்ட விதத்துக்கும், மேக்கிங்கிற்கும் அனிமல் படத்தினை உலக சினிமா அளவுக்கு நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரே மாதிரியான சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களுக்கு மத்தியில் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட வித்தியாசமான அனுபவத்தை தந்ததற்கு இயக்குநர்- எழுத்தாளர்- எடிட்டர் சந்தீப் வங்காவுக்கு சல்யூட்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com