போதை நெடியும், அடிதடி கதையும்: ஃபைட் கிளப் திரை விமர்சனம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் நடிகரும் இயக்குனருமான விஜய்குமார் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் பைட் கிளப்.
போதை நெடியும், அடிதடி கதையும்: ஃபைட் கிளப் திரை விமர்சனம்
போதை நெடியும், அடிதடி கதையும்: ஃபைட் கிளப் திரை விமர்சனம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில் நடிகரும் இயக்குனருமான விஜய்குமார் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் பைட் கிளப்.

சென்னையை அடுத்த பழவேற்காடு பகுதியைக் கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அப்பாஸ் ரஹ்மத்  இயக்கியுள்ளார்.

சிறந்த குத்துச்சண்டை வீரராக ஏரியாவில் வலம் வரும் பெஞ்சமினுக்கு தன்னுடைய ஏரியாவில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக்க ஆசை. ஆனால் அதற்கு எதிராக சிறுவர்களுக்கு போதைப் பொருள் கொடுத்து தொழில் நடத்தி வருகிறார் கிருபாகரன். கிருபாவுடன் சேரும் ஜோசப் தனது அண்ணன் பெஞ்சமினைக் கொலை செய்கிறார். 

ஒரு கட்டத்தில் ஜோசப் ஏமாற்றப்பட கிருபா அரசியல்வாதியாக மாறி ஏரியாவைக் கைப்பற்றுகிறார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜோசப், இளைஞன் செல்வத்தைத் (விஜய்குமார்) தூண்டிவிட்டு கிருபாவை பழிவாங்கத் திட்டம் போடுகிறார். கிருபா கொல்லப்பட்டாரா? இல்லையா? விளையாட்டு வீரராக நினைத்த செல்வத்தின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே திரைப்படத்தின் கதை. 

இளைஞர்களின் வாழ்வில் போதைப் பொருளும் அதன் அரசியலும் நுழைந்தால் என்ன ஆகும் என காட்டியிருக்கிறது பைட் கிளப். உறியடி திரைப்படத்தின் மூலம் சாதிய அரசியலுக்கு எதிராகப் பேசி கவனம் ஈர்த்த விஜய்குமார் அதே பாணியிலான கல்லூரி கால சண்டைகள் மூலம் மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். ஆக்ரோஷ இளைஞராக ஸ்கோர் செய்திருக்கிறார். நாம் அவ்வப்போது செய்திகளில் காணும் பேருந்து பயண சண்டைகள், பஸ் டே சண்டைகள் போன்றவற்றின் மற்றுமொரு பக்கத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். அடிதடி கதை என்பதால் படத்தில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கையும் அதிகம். அதேசமயம் அதிகம் பரிட்சயப்படாத முகங்கள். ஆனால் அதற்கெல்லாம் சலைக்காமல் தேர்ந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறது துணைநடிகர்கள் பட்டாளம்.

கார்த்தியாக வரும் சரவணவேல், பழிவாங்கும் வில்லனாக வரும் ஜோசப் எனும் அவினாஷ் ரகுதேவன், அரசியல்வாதியாக மாறும் கஞ்சா வியாபாரி சங்கர்தாஸ் என பலரும் படம் முழுக்க நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர். விரோதம் கொண்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் அவினாஷ். அரசியல்வாதி கிருபாவைக் கொல்ல அவர் போடும் திட்டங்கள் அவரின் வில்லத்தனத்தை மெருகேற்றுகின்றன. முதல் பாதியில் மட்டும் வரும் நடிகை மோனிஷா மோகன் படத்திற்கு எதற்கு எனும் கேள்வி எழுந்தாலும் ஆடுகளம் திரைப்பட பாணியில் வந்த காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. 

படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டி வென்றிருக்கிறார் கேமரா மேன் பிரிட்டோ. காட்சிகள் விரிய விரிய தனது விந்தையான கேமராவால் விளையாடியிருக்கிறார் அவர். பழவேற்காட்டைக் காட்சிப்படுத்துவதில் இருந்து ரத்தமும் சதையுமான சண்டைக் காட்சிகளைப் படமாக்கியது வரை அவரது உழைப்பு திரையில் தெரிகிறது. அவருக்கு சலைக்காமல் போட்டி போட்டிருக்கிறார் கோவிந்த் வசந்தா. பின்னணி இசையில் அவரது பணி அதிரடியாக இருக்கிறது. பழைய பாடல்களும், அவற்றின் பின்னணி இசைகளும் ரசிக்கச் செய்கின்றன. சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் விண்டேஜ் ரசனையாக வரும் பின்னணி இசை கவர்கின்றன. யாரும் காணாத.. பாடல் ஏற்கெனவே வெளியாகியிருந்தாலும் திரையில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. 

முதல்பாதி முழுக்க விறுவிறுப்பான திரைக்கதையாலும், அதன் உருவாக்கமும் நம்மை திரையரங்கில் அமரச் செய்திருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி யூகிக்கக் கூடிய காட்சிகளால் நம்மை தேங்கச் செய்கிறது. ஒரே கிணற்றுக்குள் இருக்கும் தவளையாக ஒரே வட்டத்திற்குள் சுழலும் இரண்டாம் பாதி தொய்வைத் தருகிறது. ஒரு கும்பல் மற்றொரு கும்பலைத் தாக்குகிறது. இது தொடர்கிறது...தொடர்கிறது...தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தனது அண்ணனைத் தாண்டி பெஞ்சமின் மீது செல்வத்திற்கு இருக்கும் அன்பை இன்னும்கூட காட்டியிருக்கலாம். கோபக்கார இளைஞனின் வாழ்க்கைக்குள் வரும் அரசியல்வாதி சண்டையிலிருந்து விலகி விலகி ஓடுகிறார். அவரை அவ்வளவு பெரிய வில்லனாகக் காட்ட வேண்டிய அவசியம் அங்கேயே கேள்விக்குள்ளாகிறது. அவ்வப்போது வடசென்னை திரைப்படத்தின் சாயல் எட்டிப்பார்த்தாலும் வேகமான காட்சியமைப்பு அதை நிலைத்திருக்கச் செய்யவில்லை என்பது ஆறுதல். கிளைமேக்ஸ் காட்சிகள் இதுதான் என முன்னரே தெரிந்துவிடுவதாலேயோ என்னவோ இரண்டாம் பாதி இழுவையாக இருக்கிறது. படம் முழுக்க ரத்த வாடையும், கஞ்சா நெடியும் தூக்கலாக உள்ளது.வடசென்னை குறித்த பார்வை சினிமாக்காரர்களுக்கு எப்போதும் மாறாது போல...

ஏற்கெனவே பழக்கப்பட்ட கதையில் வழக்கமான காட்சிகளால் அடிதடி செய்திருக்கிறது Fight Club. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com