’உடல்.. பொருள்.. ஆவி..’ நண்பகல் நேரத்து மயக்கம் - திரைவிமர்சனம்

ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
’உடல்.. பொருள்.. ஆவி..’ நண்பகல் நேரத்து மயக்கம் - திரைவிமர்சனம்

ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

இவரது இயக்கத்தில் மம்மூட்டியே தயாரித்து முதன்மை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம்.

கேரளத்திலிருந்து தனி பேருந்தில் தன் மனைவி, மகன், நண்பர்கள் என வேளாங்கண்ணிக்கு சுற்றுப்பயணம் செல்கிறார் ஜேம்ஸ்(மம்மூட்டி). பின், அக்குழுவினர் அங்கிருந்து கிளம்புகிறார்கள். திரும்பும் வழியில் நண்பகல் நேரத்தில் அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். பழனிக்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது திடீரென தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்ளும் ஜேம்ஸ் வண்டியை நிறுத்தச் சொல்லி அவர் மட்டும் இறங்கி தனக்கு நன்கு பழக்கப்பட்ட இடத்திற்குச் செல்வதுபோல தமிழகப் பகுதியான ஒரு ஊருக்குள் நுழைகிறார்.

சில தெருக்களைத் தாண்டி ஓர் வீட்டை அடைந்து  லுங்கியைக் கட்டியபடி மனைவி, அம்மா, அப்பா என அனைவரிடமும் இயல்பாக பேசத் துவங்குகிறார். பின், அவர்கள் எதிர்பாராத தருணத்தில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிவிஎஸ் வண்டியை எடுத்துச் செல்கிறார். திருடன் என நினைத்து சிலர் அவரைத் துரத்துகின்றனர். அதற்குள் ஜேம்ஸின் குடும்பத்தினரும் குழுவினரும் அவரைத் தேடி ஊருக்குள் வருகின்றனர். பலரும் அந்த வீட்டில் காத்திருக்க இரவு ஜேம்ஸ் வருகிறார். 

மனைவியும் மகனும் ஜேம்ஸ்ஸை கிளம்பச் சொல்லி அழைக்கிறார்கள். ஆனால், ஜேம்ஸ், ’நான் சுந்தரம் இதுதான் என் ஊரு’ என்கிறார். இதைக்கேட்டதும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைகிறார்கள்.

மலையாளியான ஜேம்ஸ் எதற்காக தனக்கு தொடர்பில்லாத ஒரு தமிழ் குடும்பத்தைக் காணச் சென்றார்? அந்த நண்பகலில் ஜேம்ஸ்க்கு என்ன நடந்தது? திரும்ப தன் குடும்பத்துடன் அவர் இணைந்தாரா? என்கிற மீதிக்கதையே ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.

மனித மனங்களின் விசித்திரங்களையும் உணர்ச்சிகளின் தடுமாற்றங்களையும் தொடர்ந்து தன் படங்களின் அடிநாதமாகக் கொண்டுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசரி ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திலும் உடல், ஆன்மா, விடுதலை என்கிற அடிப்படையில் கச்சிதமான கதாபாத்திரங்களுடன் சிறந்த படத்தை இயக்கியுள்ளார்.

மம்மூட்டியின் நடிப்பில் புதிய மாற்றங்கள் தென்படவில்லை என்றாலும் இது நம்முடைய முகம் அல்ல என கண்ணாடி முன் சுந்தரம் உணரும் ’குளோஸ் அப்’ காட்சியில் பார்வையால் மம்மூட்டி ஒருகணம் திகைக்க வைக்கிறார்.  

அசோகன், ரம்யா பாண்டியன், பூ ராமு, ஜிஎம் குமார், நமோ நாராயணன் உள்ளிட்டோரின் சில நிமிட காட்சிகளும் உணர்வுப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.

லிஜோ ஜோஸின் தனித்துவமான பார்வையில் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் பழைய தமிழ் பாடல்களும் வசனங்களும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன.  

குறிப்பாக, படத்தின் துவக்கத்தில் வரும் ‘இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையும் ஞானத்தங்கமே..’ பாடலும் இறுதியில் இடம்பெற்ற ‘வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி’ பாடலும் படத்தின் கருவை அழகாக தொட்டுச்செல்கின்றன. 

திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கலாம் எனத் தோன்றும் படி சில காட்சிகள் நிதானமான கையாளப்பட்டுள்ளன.

ஒருவகையில் தன் முந்தைய படமான ‘சுருளி’யிலேயே மாய எதார்த்த பாணி(மேஜிக்கல் ரியலிசம்) முயற்சியில் வெற்றிகண்ட லிஜோ ஜோஸ் இதிலும் அந்த பாணியை எளிமையாகக் கையாண்டுள்ளார்.

அதேநேரம், தன் அசாத்திய இயக்கத்தால்  இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்கிற உண்மையை உடைக்கும் முயற்சிகளில் லிஜோ திரையில் செய்யும் ஜாலங்களை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. நல்ல அனுபவத்திற்காக நிச்சயம் பார்க்க வேண்டிய படம் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com