சமுத்திரக்கனியின் 'சாட்டை' திரைப்படத்தைப் பார்த்து, இந்தப் படத்தில் ஹீரோவாக வரும் சமுத்திரக்கனி வில்லனாக நடித்தால் எப்படியிருக்கும் என்ற அரியவகை யோசனை எழுந்தால், 'வாத்தி' உங்களுக்கானது.
தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியிருக்கிற திரைப்படம் 'வாத்தி'. டிரெய்லரில் பார்த்ததுபோலவே, படத்தின் தொடக்கத்திலிருந்தே கல்வியை வியாபாரமாகப் பார்க்க வேண்டும் என வருகிற, போகிறவர்களிடமெல்லாம் வில்லனாகப் போதிக்கிறார் திருப்பதி கதாபாத்திரத்தில் வரும் சமுத்திரக்கனி. அவரது கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக வேலை பார்ப்பவர்தான் பாலமுருகன் 'வாத்தி'யாராக வரும் தனுஷ்.
சமுத்திரக்கனியின் கல்வி நிறுவனத்திலேயே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் தனுஷ், எதற்காக அவரை எதிர்க்கிறார்? இறுதியில் சமுத்திரக்கனியை வெல்கிறாரா இல்லையா என்பதுதான் 'வாத்தி' படத்தினுடைய கதை, திரைக்கதை.
உலகமயமாக்கலின் தாக்கத்தால், கல்வி எப்படி வியாபாரமாக்கப்பட்டது என்பதிலிருந்து 'வாத்தி'யின் கதை தொடங்குகிறது. ஆனால், கல்வி வியாபாரத்துக்கானதல்ல என்பதை உணர்த்துவதற்காக 1999-க்கு சென்று 'வாத்தி'யாக வகுப்பெடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லுரி.
கல்வியின் முக்கியத்துவத்தைப் போற்ற படமெடுப்பது எந்தக் காலத்துக்கும் அவசியமானது, பாராட்டுக்குரியதுதான் என்றாலும், 'சாட்டை' திரைப்படத்தில் சமுத்திரக்கனி சுழற்றிய அதே 'சாட்டை'யை, தனுஷ் கையில் கொடுத்திருப்பதுதான் பின்னடைவாக அமைந்துள்ளது.
'சாட்டை' மட்டுமல்ல.. விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா என கல்வியை வலியுறுத்தி இதற்கு முன்பு எடுக்கப்பட்ட பல படங்கள் நம் கண்முன் வந்துபோகின்றன.
படத்தில் பேசப்பட்டுள்ள மையக் கரு, பணமில்லாதவனுக்குக் கல்வி மறுக்கப்படுகிறது.
கல்வி வியாபாரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லையென்றாலும்கூட, அதைக் காண்பித்த விதத்தில் சில அடிப்படைக் கேள்விகள் எழுகின்றன. கதையில் ஊர் எல்லையில் ஒதுக்கிவைக்கப்பட்ட செருப்பு தைப்பவரின் மகனுக்கும் கல்வி மறுக்கப்படுகிறது, கோயிலில் பூஜை செய்பவரின் மகனுக்கும் கல்வி மறுக்கப்படுகிறது. இந்த இரண்டு வெவ்வேறு பின்னணி உடையவர்களை ஒரேதட்டில் வைத்து பார்க்கும் பார்வை தமிழ்ச் சூழல் / இந்தியச் சூழலுக்கு உகந்ததுதானா என்கிற எண்ணம் எழுகிறது.
கமர்ஷியல் திரைப்படத்துக்கு நாயக பிம்பம் தேவைதான் என்றாலும், அதுவே கதையின் கருவுக்கு எதிராக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கலாம். கல்வி மரியாதையைப் பெற்றுத் தரும் என்பதை வலியுறுத்தும் 'வாத்தி'யாருக்கே, செருப்பு தைப்பவரின் மகனைக் கொண்டு செருப்பு தைக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
அதேசமயம், கல்வி மரியாதையைப் பெற்றுத் தரும் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தது, காரியம் ஆக வேண்டும் என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் தேவை, மற்ற நேரங்களிலெல்லாம் தீண்டாமைதான் தேவை என்கிற சாதியக் கண்ணோட்டத்தை தோலுறித்ததெல்லாம் இந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவைதான்.
காட்சி உருவாக்கங்களிலும், பழைய ஃபார்முலாவே பின்பற்றப்பட்டுள்ளது. இதனால், 'அட போதுமப்பா, அடுத்த சீனுக்கு போங்க', என பல இடங்களில் ரசிகர்களை 'உச்' கொட்ட வைக்கிறது. உதாரணம், 'வாத்தி'யாக வரும் தனுஷ் பெரும் காயங்களுடன் வெறும் காலில் கடும் வெயிலில் நடக்க முடியாமல் நடந்துகொண்டிருப்பார். உடனே, அடிபம்ப்பில் அடிக்கப்படும் தண்ணீர் தனுஷ் கால்களுக்கு ஓடிச் செல்ல, அவர் கால்கள் குளிருதாம்.
தவிர, சில காட்சிகளில் பில்டப்புகள் பயங்கரமாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுக்காகவா இவ்வளவு பில்டப் என கேட்கும் அளவுக்கே அந்தக் காட்சிகள் எழுதப்பட்டுள்ளன. அவை ரீவைன்ட் செய்து வேற காண்பிக்கப்படுகின்றன.
தனுஷ் நடிப்பு வழக்கம்போலத்தான். அவரால் முடிந்தவற்றை அவர் செய்திருக்கிறார். பல இடங்களில் காட்சியின் உணர்வைக் கடத்த ஜி.வி. பிரகாஷ் பெரும் மெனக்கெடலைப் போட்டிருக்கிறார். ஆனால், படம் முடிந்த பிறகும் மனதில் நிற்கக்கூடிய அளவுக்கு அவரது பின்னணி இசை குறிப்பிடத்தக்க அளவில் கைகொடுக்கவில்லை.
படத்தின் கதை 1999-இல் நடக்கிறது. ஒருவேளை இந்தப் படம் உண்மையில் 1999-ம் ஆண்டு வெளிவந்திருந்தால்கூட வெற்றி பெறுவது கடினம் என்கிற எண்ணம் எழும் அளவுக்கே ''வாத்தி'' நமக்கு வகுப்பெடுக்கிறது.
இது மாதிரி இன்னமும் இரண்டு படங்கள், அல்ல, ஒரு படம் வந்தாலே போதும், தனுஷ் சினி சாப்டர் ஓவர்!