
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள தனித்தொகுதி ஒன்றில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் மாமன்னன்(வடிவேலு). அதே கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ள ரத்னவேல்(ஃபஹத் ஃபாசில்) உயர்சாதியைச் சேர்ந்தவர். தன் ஆதிக்கத்தின் கீழ்தான் பட்டியல் சமூகத்தினர் இருக்க வேண்டும் என்கிற மனநிலையில் தன்னுடைய சக்தியை முழுவதும் பயன்படுத்துகிறார். மாமன்னனின் மகனான அதிவீரன்(உதயநிதி ஸ்டாலின்) தந்தையின் அரசியல் விவகாரங்களில் தலையிடாமலும் அவருடன் பேசாமலும் தற்காப்புப் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதிவீரனின் கல்லூரித் தோழியான லீலா(கீர்த்தி சுரேஷ்) அதே பகுதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு இலவசமாக போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தை நடத்துகிறார். இலவசமாக நடத்துவதால் தன் பயிற்சி மையத்தில் சேர்க்கைக் குறைகிறது என ரத்னவேலுவின் அண்ணன், லீலாவுக்கு அதிவீரன் கொடுத்த இடத்தை தாக்குகிறார். ஆத்திரமடைந்த அதிவீரன் தன் நண்பர்களுடன் சேர்ந்து எதிர்த்தரப்பின் மீது தாக்குதல் நடத்துகிறார்.
பிரச்னையை முடிக்க ரத்னவேல் மாமன்னனை அழைத்து பேசும்போது அங்கும் அடிதடி நடக்கிறது. தன் குடும்பத்திற்குக் கீழ் இத்தனை ஆண்டுகள் கைகட்டி நின்றவர்கள், தன் எதிரே உட்கார்ந்து பேசும் அளவிற்கு தைரியமாக வந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியாத ரத்னவேல் அரசியல் ரீதியாகவும் சாதி ரீதியாகவும் மாமன்னனைப் பழிவாங்க துவங்குகிறார். இந்த ஆதிக்கத்திலிருந்து மாமன்னன் தப்பினாரா? என்பது மீதிக்கதை.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களில் சமூக ரீதியாக தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு கொடுமைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதைப் பேசிய மாரி செல்வராஜ், அரசியல் அதிகாரம் இருந்தாலும் ஆதிக்க சாதியின் மறைமுகத் தாக்குதல்கள் எப்படியெல்லாம் வேலை செய்கிறது என்பதை மாமன்னன் மூலம் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.
சமூகநீதியைக் கொள்கையாக வைத்திருக்கும் கட்சியிலேயே இந்த சாதி ஆதிக்க மனநிலை கொண்டவர்களே அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதைக் கேட்டும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட உதயநிதியை பாராட்ட வேண்டும்.
நீண்ட இடைவேளைக்குப் பின் சினிமாவிற்குள் நுழைந்தாலும் நடிகர் வடிவேலுவுக்கு சரியாக எந்தப் படங்களும் அமையவில்லை. அந்தக் குறையை ’மாமன்னன்’ களைந்திருக்கிறது. ஒரு சிறந்த நடிகராக வடிவேலுவை நினைவு கூறத்தக்க படங்களில் மாமன்னனுக்கு தனி இடம் உண்டு. முக்கியமாக, சாதியக் கொடுமைகளைக் கண்டு தன் இயலாமையை வெளிப்படுத்தும் காட்சிகளில் கலங்க வைப்பதோடு ஒரு அரசியல்வாதியின் கம்பீரமும் நிதானமுமாக ஒவ்வொரு பிரேம்களுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் வடிவேலு.
இதையும் படிக்க: மாமன்னன் படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்!
தன் முந்தைய படங்களைப்போல குறியீட்டுக் காட்சிகளைக் கொண்டு திரைக்கதையை அமைத்த மாரி செல்வராஜ், இந்தப் படத்திலும் அதே உத்தியைக் கையாண்டது சில இடங்களில் கதையைவிட்டு விலகச் செய்கிறது. முதல்பாதியிலும் இரண்டாம் பாதியிலும் இதனாலேயே சில தேக்கங்கள். ரஹ்மானின் பின்னணி இசை கதைக்குத் தேவைப்படும் அளவிற்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘ராசாக் கண்ணு’, ‘நெஞ்சமே நெஞ்சமே’ பாடல்களில் இருந்த மென்மையான இசை கதைக்கு வலுவைக் கொடுத்திருக்கிறது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, நன்றாக வந்திருக்க வேண்டிய இடைவேளைக் காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.
உதயநிதிக்கு எதிர்கால அரசியல் சார்ந்தும் முக்கியமான படமாக இது இருக்கும். அவருடைய திரைவாழ்வில் சிறப்பான நடிப்பு வெளிப்பட்ட படம் இதுதான்!
ஃபகத் ஃபாசிலின் உடல்மொழி காட்சிக்குக் காட்சி வலுவாகிக்கொண்டே செல்கிறது. முதல்வராக வரும் லால், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பும் சரியாகக் கைகொடுத்திருக்கிறது.
தனித்தொகுதியில் நடக்கும் அரசியல் போக்குகள், அதிகாரங்கள் செயல்படும் விதம் என தேர்தல் அரசியலில் நிகழும் எதார்த்தத்தைப் பேசியதற்காகவே மாமன்னன் தனித்து நிற்கிறது.
அனைத்துத் தடைகளையும் தாண்டி மாமன்னன் மீண்டும் சட்டப்பேரவையில் ஒரு எம்எல்ஏவாக நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட கிளைமேக்ஸில் அசத்தலான திருப்பத்தைக் கொடுத்து “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” குறளை மாமன்னன் கூறும்போது ஒட்டுமொத்த திரையரங்கமும் அதிரும் கைத்தட்டல்களைப் பெற வைத்திருக்கிறார் இயக்குநர். இப்படத்தின் வெற்றி அந்தக் காட்சியில் உறுதிசெய்யப்பட்டது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.