’நினைவுகளும் குற்றமும்...’ மெமரீஸ் - திரைவிமர்சனம்

நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம் ‘மெமரீஸ்’.
’நினைவுகளும் குற்றமும்...’ மெமரீஸ் - திரைவிமர்சனம்
Published on
Updated on
2 min read

நடிகர் வெற்றி நடிப்பில், இயக்குநர்கள் ஷியாம் மற்றும் ப்ரவீன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம் ‘மெமரீஸ்’.

ஆள்கள் இல்லாத மலைப்பகுதி ஒன்றில் மயக்க நிலையிலிருக்கும் வெங்கி(வெற்றி) சுயநினைவுக்குத் திரும்பியதும் தனக்கு என்ன ஆனது? எங்கிருக்கிறோம்? என தவிக்கிறார். அப்போது, அவர் இருக்கும் இடத்திற்கு வரும்  ராமானுஜன் ‘நீ யாருன்னு அடுத்த 17 மணி நேரத்துக்குள்ள கண்டுபிடி’ என்கிறார். பின் தற்செயலாக, இரண்டு கொலைகளைச் செய்துவிட்டு குற்றவாளி தப்பியோட்டம் என்கிற செய்தியில் குற்றவாளியாக தன் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றதைக் கண்டு வெங்கி அதிர்ச்சியடைகிறார்.

அதற்குள் காவலர்கள் தன்னை துரத்தி வருவதை அறிந்த வெங்கி மலைப்பகுதியில் ஓட ஆரம்பிக்கிறார். அவரின் நண்பர் சரவணன்(ரமேஷ் திலக்) வெங்கியைக் காப்பாற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், வெங்கிக்கு சரவணன் யார் என்பதும் நினைவில் இல்லை. சரவணன் சில நினைவுகளையும் தெரிந்தவர்களின் பெயர்களைச் சொல்லியும் ஞாபகத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஆனாலும் வெங்கி யாரையும் நான் கொலை செய்யவில்லை என்றே கூறுகிறார்.

மீண்டும் மற்றொரு இடத்தில் ராமானுஜன் வெங்கியைச் சந்தித்து, ‘நீதான் இந்தக் கொலைகளைச் செய்தாய். கொலை செய்துவிட்டு தப்பிக்கும்போது விபத்தில் சிக்கி உன் நினைவுகளை இழந்துவிட்டாய்’ என அவரை நம்பவைக்கிறார். அதை நம்பும் வெங்கி குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஆனால், ஒருகட்டத்தில் நம்மை திட்டமிட்டு கொலை வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்கள் என உணரும் வெங்கி அதிலிருந்து தப்பித்தாரா? இல்லையா? ராமானுஜனும் சரவணனும் யார்? என்கிற மீதிக்கதையே ‘மெமரீஸ்’.

சாதாரண பலிவாங்கல் கதையில் கொஞ்சம் திரில்லரை இணைந்தால் என்ன நடக்கும்? அடிபட்டு உதைபட்டு இறுதியில் நாயகன் தான் நல்லவன் என நம்பவைத்திவிடுவான். ஆனால், இப்படத்தில் இயக்குநர்கள் நம்ப முடியாத டுவிஸ்ட் ஒன்றை வைத்து பார்வையாளர்களின் கவனம் திரையைவிட்டு நகராத அளவிற்குக் கட்டிப்போடுகிறார்கள்.

ஒரு மனிதனின் நினைவுகளை அழித்துவிட்டு புதிய நினைவுகளை அவனுக்குள் புகுத்தி வேறு ஒருவனாக 17 மணிநேரம் வரை வைத்திருக்கலாம். அதற்குப் பின் அவனுக்கு பழைய நினைவுகள் வந்துவிடும் என்கிற கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதையில் எதிர்பார்க்காத திருப்பங்களைக் கொடுத்து சிக்கலான ஒரு ‘திரில்லர்’ கதையை சொல்ல முயன்றதற்கே இயக்குநர்களைப் பாராட்டலாம். முக்கியமாக, படம் பார்க்கும் நமக்கே சில இடங்களில் நினைவாற்றல் குறித்து அச்சம் ஏற்படுகிறது.

ஆனால், நல்ல கதையும் திரைக்கதையையும் மோசமான ஒளிப்பதிவால், கலை இயக்குநரின் தவறால்  சுமாரான படமாக மாறிவிடும் என்பதற்கு இப்படமே சான்று. இயக்குநர்கள் கதையில் காட்டிய உழைப்பை மற்ற தொழில்நுட்ப விசயங்களில் காட்ட தவறிவிட்டனர்.

இணையத் தொடராக எடுக்கும் அளவிற்கு சிறப்பான கதையை இரண்டு மணி நேர திரைப்படமாக உருவாக்கும்போது ஒளிப்பதிவு, வசனம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். 

பிண்ணனி இசை, சைக்கோ கதாபாத்திரத்தில் வெற்றியின் நடிப்பு சில இடங்களில் கைகொடுத்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான காட்சிகளில் துணை நடிகர்களின் செயற்கையான நடிப்பும் வசனமும் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுக்கிறது. குறிப்பாக, பரபரப்பாக செல்லும் காட்சிகளுக்கு இடையே காதல் பாடலை வைத்து திரைக்கதையில் சொதப்பியுள்ளனர்.   

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி ’மெமரீஸ்’ படத்தின் மூலம் திரில்லர் வகை கதைகளின் நாயகனாக மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், நடிப்பில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. எதிர்பார்பில்லாமல் சென்றால் நல்ல ‘மெமரீஸ்’ உடன் வெளியே வரலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com