வெறுப்பை உமிழும் தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.
வெறுப்பை உமிழும் தி கேரளா ஸ்டோரி - திரைவிமர்சனம்
Published on
Updated on
3 min read

சுதிப்தோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ளது.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து செவிலியர் படிப்பிற்காக கல்லூரியில் இணையும் நாயகிகளான ஷாலினி(ஆதா ஷர்மா), கீதாஞ்சலி(சித்தி இத்னானி), நிமா(யோகிதா பிகானி), ஆசிஃபா (சோனியா பலானி) ஆகியோர் விடுதியில் சந்தித்துக்கொள்கின்றனர். இதில் ஆசிஃபா இஸ்லாம் மத நெறிகளைக் கடுமையாகப் பின்பற்றுபவராக இருக்கிறார். நாளடைவில் நெருக்கமாகும் தன் தோழிகளிடமும் இஸ்லாம் மதத்தின் தேவை குறித்தும் அல்லா ஒருவனே இறைவன், மற்ற தெய்வங்கள் கோழைகள் என அவர்களிடம் கூறுகிறார். அதைப் அப்பெண்கள் விளையாட்டாக கடந்துசெல்கின்றனர். ஆனால், ஆசிஃபா அவர்களை பல்வேறு வழிகளில் மூளைச்சலவை செய்து இஸ்லாம்தான் பெண்களைப் பாதுகாக்கிறது என நம்பவைக்கிறார்.

இந்துக் கடவுகள் குறித்து கடுமையாக கேள்விகளை எழுப்பும் ஆசிஃபாவிற்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஷாலினியும் கீதாஞ்சலியும் புர்கா அணியவும் ஓரளவு இஸ்லாம் குறித்தும் அறிந்து கொள்கின்றனர்.

இதற்கிடையே ஆசிஃபா தான் சார்ந்திருக்கும் இஸ்லாம் மத அடிப்படைவாத கும்பலிடம் தன் தோழிகளின் புகைப்படங்களை அனுப்பிவைக்கிறார். அக்குழுவின் வேலை, மாற்று மதப் பெண்களை இஸ்லாமியராக மாற்றி ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புக்கு பாலியல் அடிமைகளாக அனுப்பி வைப்பது.

இந்த வலையில் அப்பெண்களைச் சிக்க வைக்க இரு இஸ்லாமிய இளைஞர்கள் ஷாலினி மற்றும் கீதாஞ்சலியிடம் நெருக்கமாக பழகுகிறார்கள். ஒருகட்டத்தில் அது காதலாக மாறி உடலுறவும் நடக்கிறது. இதில் ஷாலினி கர்ப்பம் அடைகிறார். கீதாஞ்சலியின் நிர்வாணப் படங்களையும் விடியோக்களையும் அவரின் காதலன் பதிவு செய்கிறான். கர்ப்பமான ஷாலினி என்னைத் திருமணம் செய்துகொள் என தன் காதலன் ரமீஸிடம் சொல்கிறாள். அவன் மறுத்து தலைமறைவாகிறான். உடனே, ஷாலினி ரமீஸை அறிந்த இமாம் ஒருவரிடம் தன் நிலையைக் கூறுகிறாள். இதைக் கேட்ட இமாம் ‘ரமீஸுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இன்னொருத்தியின் கணவன் மீது நீ ஆசைப்பட்டது இஸ்லாம் நெறிகளுக்கு எதிரானது. இந்தப் பாவத்தைக் கழுவ  நான் சொல்கிற இஸ்லாமியனைத் திருமணம் செய்துகொண்டு சிரியா செல். அங்கு சேவை செய்து புண்ணியத்தைத் தேடிக்கொள்’ என்கிறார். ஷாலினி ஃபாத்திமாவாக மாறி இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டு சிரியா செல்கிறாள். அங்கு அவளுக்கு என்ன நடந்தது? நிமாவும் கீதாஞ்சலியும் என்ன ஆனார்கள்? என்பது மீதிக்கதை.

இப்படம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. ஆனால், பாதிக்கப்பட்ட சிலரின் வாழ்க்கையைக் கொண்டு ஒட்டுமொத்த இஸ்லாம் மதத்தையும் கடுமையாக சித்திரித்துள்ளார் இயக்குநர். ஒவ்வொரு காட்சியிலும் இஸ்லாமியர்கள் மிகக் கேவலமான சிந்தனையாளர்கள் என்பதைப் போல நிறுவ முயன்றிருக்கிறார்கள். குறிப்பாக, படத்தின் ஆரம்ப காட்சியில் கல்லூரி சுவரில் ‘காஷ்மீருக்கு விடுதலை வேண்டும்’, ‘தேசியவாதம் ஹராம். இஸ்லாம் ஒன்றே அடையாளம்’ போன்ற பிரிவினைக் கருத்துக்களை கேரள இஸ்லாமியர்கள் கூறுவதைப் போல் காட்சிப்படுத்தியுள்ளனர்.

கதையின் போக்கில் கிறிஸ்துவப் பெண்ணான நிமா கழற்றிவிடப்பட்டு இந்துப் பெண்களான ஷாலினி, கீதாஞ்சலி மட்டுமே இஸ்லாம் மதவாதிகளுக்குத் தேவை என்பதைப் போல திரைக்கதை நகர்கிறது. காட்சிகள் மாற மாற இந்துத்துவ அரசியலின் கை ஓங்கி, இஸ்லாமியர்களின் அடிப்படைவாதத்தைக் கேள்வி கேட்பதாக நினைத்து ஒரு இஸ்லாமியப் பெண்ணோடு மற்ற மதப் பெண்கள் பழகினால் இப்படித்தான் மூளைச்சலவைக்கு ஆளாவார்கள் எனக் கூறுகிறார்கள்.

உச்சகட்டமாக இப்படத்தில் இஸ்லாம் மதத்துடன் இடதுசாரிகளையும் சேர்த்துச் சாடியுள்ளார் இயக்குநர். ஒரு காட்சியில் கீதாஞ்சலி சொல்கிறாள், ‘கம்யூனிஸ்ட்களைப் போல் பெண் வெறுப்பாளர்கள் யாரும் இல்லை’ என. கிளைமேக்ஸ்க்கு முன் தான் பாதிக்கப்பட்டதை உணர்ந்த அதே கீதாஞ்சலி கம்யூனிஸ்ட்டான தன் தந்தையிடம் அழுதுகொண்டே சொல்கிறாள், ‘நீ நாத்திகம், கம்யூனிசம் பேசியதற்கு நம் நாட்டின் கலாச்சாரத்தையும் மதப்பெருமைகளையும் பேசியிருக்கலாம்’. எப்படியிருக்கிறது உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான திரைப்படம்?

இது கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பெண்களின் கதைதான் என்றும் எனக்கு எந்த அரசியலும் தெரியாது என்றும் இயக்குநர் கூறியிருந்தார். ஆனால், இது இஸ்லாமுக்கு எதிராக அவர்களை வெறுப்பவர்களுக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட படம் என எளிய பார்வையாளன் கூட கண்டுகொள்வான்.

எவ்வளவு மோசமாக ஒரு திரைப்படத்தை எடுத்தாலும் யாரை நாம் தவறானவர்கள் எனக்காட்டுகிறோமோ அவர்கள் கூட்டத்தில் ஒரு நல்லவரையாவது காட்டுவார்கள். இப்படத்தில் அதுவும் இல்லை. காசர்கோடு, இலங்கை, சிரியா வரை நீளும் கதையில் இடம்பெற்ற இஸ்லாமியர்களில் ஒருவர் கூட நல்லவர் இல்லை!

எல்லாவற்றையும் விட முழுப்படமும் குறிப்பிட்ட சமுதாயத்தை மோசமாக சித்திரித்தை மத்திய தணிக்கைக் குழு கண்டுகொள்ளாமல் விட்டதுதான் வேடிக்கையான ஒன்று. கவனிக்காமல் விட்டார்களா கவனித்ததால் விட்டார்களா எனத் தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லது செய்கிறேன் என புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளனர். சினிமா மிகப்பெரிய ஊடகம். நம் கருத்துக்கள் பல கோடி மக்களைச் சேர்கிறது என தன்னுணர்வு ஒவ்வொரு இயக்குநருக்கும் தேவை. இத்தனை வெறுப்பை உமிழ்ந்த படத்தைப் பார்த்து முடிந்தததும்  மக்கள் அமைதியாக கலைவார்கள் என நினைத்தால் சிலர் கைதட்டி விசில் அடிக்கிறார்கள்.

அத்தனை தடைகளை மீறி வெளியான தி கேரளா ஸ்டோரி ‘உண்மையில்’ யாருக்காக எடுக்கப்பட்டதோ அவர்களைச் சென்றடைந்துவிடும் என்றே தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.