ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகியுள்ளது ரத்னம் திரைப்படம்.
ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

இயக்குநர் ஹரி - நடிகர் விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ரத்னம். தொடர்ந்து, ஆக்சன் பாணியில் திரைப்படங்களை இயக்கிவரும் ஹரி, ரத்னம் திரைப்படத்திலும் முழுக்க முழுக்க சண்டை, ரத்தம் என்றே படத்தை உருவாக்கியிருக்கிறார்.

வேலூர் மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினரான பன்னீரின் (சமுத்திரக்கனி) வலது கரமாக இருப்பவர் ரத்னம் (விஷால்), சிறுவயதில் பன்னீரின் உயிரைக் காப்பாற்றியதால், பெற்றோர் இல்லாத ரத்னத்தை தன் மகனைப்போல் பார்த்துக்கொள்கிறார். பன்னீர் மக்களிடம் செல்வாக்குடன் இருக்கும் அரசியல்வாதி என்பதால் எங்காவது தவறு நடந்தால் தட்டிக்கேட்க ரத்னத்தை அனுப்பி வைத்து பிரச்னைகளை முடிக்கிறார்.

அதேநேரம், திருத்தணியிலிருந்து படிப்பிற்காக வேலூர் வரும் மல்லிகாவை (பிரியா பவானி சங்கர்) ஒரு கும்பல் கொலை செய்ய திட்டமிட்டு அவரைப் பின்தொடர்கின்றனர். மல்லிகாவின் முகத்தை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறது என ரத்னமும் ஆபத்தில் சிக்கிய மல்லிகாவைக் காப்பாற்றப் போராடுகிறார்.

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!
கவினின் ‘ஸ்டார்’ பட டிரைலர்!

மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மல்லிகாவை எதிரிகள் ஏன் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்? தனக்குத் தொடர்பே இல்லாத மல்லிகாவுக்கு ஏன் ரத்னம் உதவ வேண்டும்? என்கிற கதைக்கு அதிரடியான சண்டைக்காட்சிகளில் பதில் சொல்லியிருக்கிறார் ஹரி.

முதலில் கேட்க வேண்டிய கேள்வி.. இயக்குநர் ஹரிக்கு என்ன ஆனது? அருள், சாமி, ஆறு, சிங்கம் என பல நல்ல ஆக்சன் கமர்ஷியல் படங்களை எடுத்து ஆச்சரியப்படுத்தியவர் ரத்னத்தில் சொதப்பியிருக்கிறார். படம் பார்க்கும்போதே இது, நடிகர் கரண் நடிப்பில் வெளிவந்த ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ கதையைப்போல் உள்ளதே என்கிற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

சில காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக வந்திருக்க வேண்டிய இடங்களைப் பரபரப்பாக கொண்டு செல்கிறேன் என நல்ல காட்சிகளையும் வீணடித்திருக்கிறார். சமீப காலமாக, இந்தியளவில் ஆக்சனை நம்பியே பெரும்பாலான திரைப்படங்கள் உருவாகின்றன. அந்தப் படங்களை முறையாகக் கவனித்திருந்தாலே மேக்கிங்கில் சில மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஒரு காட்சியைக் காப்பாற்ற மீண்டும் மீண்டும் அடிதடி, ரத்தம் என்றே மொத்த படத்தையும் உருவாக்கியிருப்பது சலிப்பையே தருகிறது.

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!
நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

அதுவும், விஷால் பேசும் சில ஆக்ரோஷ வசனங்கள் சிரிப்பை வரவழைப்பதெல்லாம் கொடுமை. உண்மையில், சண்டைப் பயிற்சியாளர்களின் உழைப்பு நன்றாகத் தெரிகிறது. கடுமையாக சிரமப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அந்த உழைப்பெல்லாம் மோசமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்டிருக்கிறது.

கதையாகவும் நாயகன் நாயகிக்கு உண்டான உறவைக் குறித்து எடுக்கப்பட்ட காட்சிகள் அடுத்தது என்ன என்கிற ஆவலை ஏற்படுத்தியது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியும் இடைவேளைக்குப் பின்பான நெடுஞ்சாலை சண்டைக்காட்சியும் நன்றாக எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் பலமான இடங்கள் இவைதான். கிளைமேக்ஸில் பெரிய வில்லனைப் பழிவாங்கும் இடத்திலும் நம்புமுடியாத காட்சி ஒன்றைத் திணித்தது மோசமான முடிவு. படத்தில் எதார்த்தத்தை பல இடங்களில் காண முடியாததும் பலவீனம்.

தாமிரபரணியில் பாதி, பூஜையில் பாதி என அதே பார்த்து சலித்த கதாபாத்திரமே விஷாலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆக்சன் காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் விஷாலும் ஏமாற்றத்தையே அளித்திருக்கிறார். கொஞ்சம் ஆறுதலான முகம் பிரியா பவானி சங்கர்தான். சில இடங்களில் சோதித்தாலும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக மனதில் நிற்கிறார். சமுத்திரக்கனியும் வில்லன் முரளி சர்மாவும் நல்ல தேர்வுகள்.

ஒரு காட்சியில் வந்தாலும் விசிலடிக்க வைத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இளவயது வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கேகே ஒரு சில காட்சிகளில் வந்தாலும் பயத்தை ஏற்படுத்துகிறார்.

சண்டை இயக்குநர்களைப் பாராட்டலாம். படப்பிடிப்பின்போதே எத்தனை பேருக்கு கை, கால் உடைந்திருக்குமோ? திருத்தணியில் மல்லிகாவைக் கொலை செய்ய வரும் காட்சிகளில் ஒளிப்பதிவும் நன்றாக இருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தொந்தரவு செய்கிறது. படத்தின் பெரிய பலவீனம் இசைதான். ஆக்சனுக்கான பின்னணி இசை என்றாலும் ரசிகர்களின் காதுகளை நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இயக்குநர் ஹரியின் பெரும்பாலான வெற்றிப்படங்களைக் கணக்கில் கொண்டால், இதுவே அவர் இயக்கிய படங்களில் சுமாரானது.

வெறும் ஆயுதத்தையும் ரத்தத்தெறிப்புகளையும் மட்டுமே நம்பி இனி கதை எழுதினால் என்ன ஆகும் என்பதற்கு ரத்னம் ஒரு உதாரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com