யூடியூபர்கள் நடிகர்களானால்... நண்பன் ஒருவன் வந்த பிறகு - திரை விமர்சனம்!

’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்பட விமர்சனம்!
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்
Published on
Updated on
2 min read

மீசைய முறுக்கு பட நடிகர் ஆனந்த் ராம் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’.

இயக்குநர் வெங்கட் பிரபு வழங்கியுள்ள இந்தப் படத்தை ஐஸ்வர்யா. எம் மற்றும் சுதா. ஆர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

விஸ்காம் படிக்க ஆசைப்பட்டு குடும்பத்தின் கட்டாயத்தால் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்கும் கதாநாயகன், படிப்பு முடிந்ததும் தனது நண்பர்களுடன் இணைந்து ’நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு செய்யும் நிறுவனம்’ ஒன்றை ஆரம்பிக்கிறார். அதில், சில பிரச்னைகள் ஏற்படவே நண்பர்களுக்குள் பிரிவு ஏற்படுகிறது. பின்னர் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்த நண்பர்களை மீண்டும் ஒன்றிணைத்த நாயகன் அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தினாரா, இல்லையா என்பதே 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்.

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்பட போஸ்டர்
'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்பட போஸ்டர்

நட்பு, காதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், தன் வாழ்வின் இலக்கை அடைய முடியாமல் தவிக்கும் இளைஞன் நண்பர்கள் துணையுடன் அதனை செயல்படுத்திக் காட்டுவதையும் திரைப்படமாக ஆக்கியுள்ளார் இயக்குநர் ஆனந்த் ராம்.

சிறுவயது நினைவுகளான பள்ளிப் பருவம், ஐபிஎல் சண்டைகள், குத்துச்சண்டை கார்டுகள், செவன் ஸ்டோன்ஸ் என பலவற்றை திரையில் கொண்டு வந்துள்ளார் இயக்குநர். ஆனால், காட்சிகளில் இருக்கும் நாடகத் தன்மை அவற்றை ரசிக்கும்படியாக மாற்றவில்லை.

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்
அர்ஜுனனாக விரும்பும் திரௌபதி... ஜமா - திரை விமர்சனம்!

கதாநாயகனாக வரும் இயக்குநர் ஆனந்த் ராம் நடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார். நாயகியாக வரும் பவானி ஸ்ரீ, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினராக வரும் குமரவேல், ஆர்ஜே விஜய், ஆர்ஜே ஆனந்தி, இர்ஃபான், பாலா, வினோத், வில் ஸ்பாட் ஆகியோர் அளவான நடிப்பை வழங்கியிருந்தாலும் கொஞ்சமும் ஈர்க்கத் தவறுகின்றனர்.

தன் வாழ்க்கையில் வெவ்வேறு காலகட்டத்தில் கிடைக்கும் நண்பர்கள் மூலம் தனக்கான ஒரு பாதையை நாயகன் கண்டடைவதையும், நண்பர்களின் பாசத்தையும் அத்தியாயங்களாக காட்டும்படி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில் சுவாரஸ்யமான காட்சிகள் ஏதுமின்றி நகர்வதால் பார்வையாளர்கள் படத்துடன் ஒன்ற முடியவில்லை.

ஆனந்த் ராம் மற்றும் பவானி ஸ்ரீ
ஆனந்த் ராம் மற்றும் பவானி ஸ்ரீ

வழக்கமான மிடில் கிளாஸ் குடும்பம், நண்பர்கள் குழு, கல்லூரி வாழ்க்கை, காதல் என புதிய காட்சிகளோ, வசனங்களோ இன்றி திரைக்கதை மிகவும் தடுமாறுகிறது. இதற்கு முன்னர் இதே பாணியில் வெளியான மீசைய முறுக்கு, ஹிருதயம் போன்ற பல திரைப்படங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகள்கூட அதற்கான அழுத்தம் ஏதுமின்றி இருப்பதால், முழுநீள யூடியூப் விடியோ பார்ப்பதைப் போன்று அயற்சியை ஏற்படுத்துகின்றன.

இன்ஸ்டாகிராம், யூடியூப் பிரபலங்கள் பலரையும் நடிக்க வைத்துள்ள இயக்குநர் திரைக்கதையிலும், காட்சியமைப்பிலும் இன்னும் அதிக உழைப்பு செலுத்தியிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

'நண்பன் ஒருவன் வந்த பிறகு' திரைப்படம்
ஜப்பானின் குண்டு.. என்ன ஆனது யோகிபாபுவின் போட்? - திரை விமர்சனம்

இசையமைப்பாளர் ஏ.ஹெச். காசிப் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. பின்னணி இசையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் எடிட்டர் ஃபென்னி ஆலிவரும் படத்தை ஓரளவேனும் தூக்கிப் பிடிக்க முயற்சித்துள்ளனர்.

படத்தில் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட ஏ.ஆர். ரகுமான் பாடல்கள் கொடுக்கும் உணர்ச்சியை படம் தர மறுக்கிறது. ஒரு ஃபீல்குட் திரைப்படமாக மாறியிருக்க வேண்டிய ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ அரதப்பழசான காட்சிகளால் ஒரு முழுமையான திரையனுபவத்தை மறுக்கிறது. பெரிய திரை என்பதை மனதில் வைத்து இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com