கமர்ஷியலில் ஒரு கிளாசிக்! சரிபோதா சனிவாரம் - திரை விமர்சனம்!

நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை) படத்தின் விமர்சனம்...
சரிபோதா சனிவாரம் போஸ்டர்.
சரிபோதா சனிவாரம் போஸ்டர். படங்கள்: டிவிவி என்டர்டெயின்மென்ட்ஸ் /எக்ஸ்
Published on
Updated on
3 min read

தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் (தமிழில் சூர்யாவின் சனிக்கிழமை) படத்தின் தலைப்பு தெலுங்கில்தான் மிகவும் கச்சிதமாக அமைந்துள்ளது. ஏனெனில் சனிக்கிழமை மட்டும் போதுமே என்பதுதான் அதன் அர்த்தம்.

டிரைலரில் வெளியாகியுள்ள தகவல்கள் அளவுக்கு மட்டுமே கதையைப் பார்க்கலாம்.

வாரத்தில் ஏழு நாள்களில் சனிக்கிழமையை மட்டுமே தேர்ந்தெடுத்து நாயகன் சண்டை செய்கிறான். மற்ற நாள்களில் சாதாரண ஒருவனாகவே இருக்கிறான்.

நாயகன் ஏன் அப்படி இருக்கிறான் என்பதற்கு மிகவும் வலுவான ஒரு காரணம் படத்தின் துவக்கத்திலேயே சொல்லப்படுகிறது. அது முட்டாள்தனமான அல்லது பிற்போக்கான ஒன்றாக இருந்தாலும் மிகவும் உணர்ச்சிமிக்க ஒன்றாகவே இருக்கிறது. அந்தப் பிற்போக்குத்தனமும் படத்திலேயே கிண்டல் செய்யப்படுவதுதான் படத்தின் பலம்.

மனிதர்கள் இயல்பிலேயே பிற்போக்கானவர்களே. அறிவைவிட உணர்ச்சிகளுக்கே முதன்மையான இடத்தைத் தருகிறார்கள். பின்னர்தான் அனுபவத்தை வைத்து அறிவை மேம்படுத்துகிறார்கள். ஒரு கலைப் படைப்பில் இதை கொண்டுவருவது மிகவும் பாராட்டும்படியாக இருக்கிறது.

படத்தில் நாயகன், வில்லன், வில்லனின் அண்ணன் என்று எல்லோருக்கும் தனித்தனியான கதாபாத்திர வார்ப்புகளை தெளிவாக வடிவமைத்து இருக்கிறார். அதுதான் படத்தின் இதயமாக இருக்கிறது.

பிரியங்கா மோகன்
பிரியங்கா மோகன்

திரைக்கதை முன்னகர்வுக்கு இயக்குநர் பயன்படுத்தி இருக்கும் யுக்தி கதாபாத்திரங்களின் குணாம்சங்களே. அதிலும் எஸ்.ஜே. சூர்யாவுக்கும் அவரது அண்ணன் கதாபாத்திரத்துக்கும் தரப்பட்டுள்ள குணாம்சங்கள் பார்வையாளர்களை வெடித்து சிரிக்க வைக்கின்றன.

எஸ்ஜே‌ சூர்யாவின் அண்ணனாக நடித்திருக்கும் முரளி சர்மா கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கிறது. அந்த மாதிரி வன்மமும் நகைச்சுவையையும் சேர்ந்து நடிக்கும் நடிகர்கள் இந்திய அளவிலேயே மிகவும் குறைவு. அந்தக் கதாபாத்திரத்தை எழுதியதும் அதற்கு முரளி சர்மாவை தேர்ந்தெடுக்கும்போதே படம் பாதி வெற்றி பெற்றுவிட்டது எனுமளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.

முரளி சர்மா
முரளி சர்மா

படத்தில் மொத்தம் 6 பகுதிகள் வருகின்றன. தொடக்கம், திருப்பம், முடிச்சு, பாதை மாறுதல், ஒளிந்து விளையாடுதல், மீட்சி என்று வரிசையாக வருகின்றன. இது ஒருவகையில் காலம் காலமாக இருக்கும் ஒரு கிளாசிக்கல் திரைக்கதை அமைப்புதான். அதை மிகவும் சுவாரசியமாக எடுத்திருப்பதுதான் படத்தின் வெற்றி.

கமர்ஷியல் படங்களுக்கே உண்டான குறைவான லாஜிக் மீறல்களே என்றாலும் எல்லாவற்றுக்கும் இயக்குநர் பதில் செல்லியிருக்கிறார். படத்தின் ஓட்டத்தில் குறைகள் பெரிதாக தெரியவில்லை.

முதல் காட்சியும் இடைவேளை காட்சியும் கிளைமேக்சின் ஒரு காட்சியை வைத்தே தொடங்குகிறார்கள். நாயகனும் வில்லனும் மோதப் போகிறார்கள் என்று காட்டி விடுகிறார்கள். பிறகு எப்படி, ஏன் என்பதுதானே சுவாரசியம்! அதை தனது சிறப்பான திரைக்கதை மூலம் அதை சரியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. ஒரு நல்ல அதிரடியான கமர்ஷியல் படத்துக்கு என்ன தேவையோ அதை சரியாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.

முதலில் நேரமெடுத்தாலும் 170 நிமிடங்கள போனதே தெரியவில்லை. அவ்வளவு விறுவிறுப்பான கதை சொல்லும் பாணி பார்வையாளர்களை திகிலுடனே வைத்திருக்கிறது.

படத்தில் இசை மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஜேக்ஸ் பிஜோய் தீம் மியூசிக்கில் அசத்தியிருக்கிறார்.

படத்தில் முக்கியமான ஓர் இடத்தில் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களை காட்டும் சில காட்சிகள் வருகின்றன. அந்த பிரேம்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஓவியம் மாதிரி இருந்தன.

கிராமத்தின் காட்சி.
கிராமத்தின் காட்சி. dinamani

எஸ்.ஜே.சூர்யா வழக்கமாக மிரட்டியிருக்கிறார். இந்தியன் 2, ராயன் படத்தில் விட்டதை சேர்த்து இந்தப் படத்தில் பிடித்துவிட்டார்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கான உடல் வாகை, கடுமையான முகத்தை அலட்சியமாக கொண்டு வந்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா

பெண்களை ஆபாசமாக காட்டும் ஐட்டம்சாங் கொடுமைகள் இல்லை. ஹீரோயினை துரத்தும் டாக்சிக் காட்சிகளும் இல்லை. அதனால் பெண்களும் குடும்பமாக சென்று பார்த்தாலும் முகம் சுழிக்காமல் பார்க்கும்படியிருக்கிறது.

எது உண்மையான கோபம் என்ற கேள்வி நாயகனை சிறுவயதில் இருந்து துரத்துகிறது. இந்தக் கேள்விக்கு படத்தின் இறுதியில் பதிலும் கிடைக்கிறது. அதேபோல் திரைக்கதையில் நாயகனது மன வளர்ச்சியையும் இது பிரதிபலிக்கிறது. ஒரிஜினல் தெலுங்கில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு ஆங்கிலத்தில் சப்டைட்டில்கள் இருக்கின்றன. கமர்ஷியலில் ஒரு கிளாசிக் என்றேகூட சொல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com