லால் சலாம் பேசும் மதநல்லிணக்கம் எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்

ஒரே கிராமத்திற்குள் எந்த சண்டை சச்சரவுகளுமின்றி வாழ்ந்து வரும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் அரசியல் நுழைந்தால் என்ன ஆகும் என்பதே லால்சலாம். 
மதநல்லிணக்கம் பேசும் லால்சலாம் எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்
மதநல்லிணக்கம் பேசும் லால்சலாம் எப்படி இருக்கிறது? திரைவிமர்சனம்

ஒரே கிராமத்திற்குள் எந்த சண்டை சச்சரவுகளுமின்றி வாழ்ந்து வரும் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையில் அரசியல் நுழைந்தால் என்ன ஆகும் என்பதே லால்சலாம். 

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் செந்தில், தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், விவேக் பிரசன்னா, தங்கதுரை, ஜீவிதா மற்றும் சிறப்புத் தோற்றமாக கபில்தேவ் என பலர் இடம்பெற்றுள்ளனர். 

தனது நண்பன் லிவிங்ஸ்டனின் குடும்பத்தை தனது குடும்பமாக நினைத்து வாழ்ந்துவரும் ரஜினிகாந்த் மும்பையின் ஆளுமைமிக்க ஜவுளித்தொழில் அதிபர். அவரது மகனாக நடித்திருக்கிறார் விக்ராந்த். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட விக்ராந்த் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என கடுமையாக முயன்று வருகிறார்.

இந்நிலையில் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தில் இந்து, இஸ்லாமியர்கள் என கிரிக்கெட் அணிகள் பிரிந்து கிடக்கிறது. இஸ்லாமிய அணியை வெல்ல வைக்க ஊருக்குத் திரும்புகிறார் விக்ராந்த். அங்கு விஷ்ணு விஷாலுக்கும், விக்ராந்துக்கும் இடையே மோதல் வர கலவரம் வெடிக்கிறது. அதுவரை ஒற்றுமையாக இருந்த கிராமம் இந்து, இஸ்லாமியர்கள் என பிரிகிறது. கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்பால் விக்ராந்தின் கனவு நிறைவேறாமல் போக கிராம மக்கள் மீண்டும் சேர்ந்தனரா? இல்லையா? என்பதே லால் சலாம் திரைப்படத்தின் கதை. 

சிறப்புத் தோற்றம் என சொல்லப்பட்டாலும் படம் முழுக்க வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இஸ்லாமியராக நடித்திருக்கும் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் அவசியமானவை. பெரும்பாலும் விக்ராந்த், விஷ்ணு விஷாலை சுற்றியே கதை நகர்வதால் ரஜினிகாந்துக்கு என பில்டப் காட்சிகளை நிரப்பி பார்வையாளர்களை திணறச் செய்வதைத் தவிர்த்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மொய்தீன் பாயின் காட்சிகள் இரண்டாம் பாதியை ஆக்கிரமித்திருக்கின்றன. கோபக்கார இளைஞராக வரும் விஷ்ணு விஷாலும், கனவை இழந்த வலியில் ஆத்திரமடையும் விக்ராந்தும் ஆறுதலான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு செந்திலை திரையில் காட்டியிருக்கின்றனர். நகைச்சுவையாக இல்லாமல் சீரியஸான காட்சிகளுக்கு மெனக்கெட்டிருக்கிறார் அவர்.

இவர்களைத் தவிர நடிகர்கள் தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, தங்கதுரை என பலரும் ஆறுதலான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். மதங்கள் வேறு வேறு என்றாலும் வாழும் இந்த பூமியில் நமக்குள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய ஒற்றுமை எந்தளவு முக்கியம் என்பதை வசனங்களில் பேசியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா. இந்துக்களின் பண்டிகைகளை இஸ்லாமியர்கள் தொடங்கி வைப்பதும், இஸ்லாமியர்களின் விழாக்களில் இந்துக்கள் கலந்து கொள்வதுமாக இருக்கும் சமூகத்தில் அரசியல் கலப்பது என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பது யோசிக்கப்பட வேண்டியது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த கதை தேர்வு பாராட்டுக்குரியது. 

அதேசமயம் நல்ல கதையான இதற்கு இன்னும் கூடுதல் மெனக்கெட்டிருந்தால் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருக்கலாம். குறிப்பாக முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது. ஒரு கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட கலவரத்தை மீண்டும் மீண்டும் பிளாஸ்பேக் காட்சிகளாக விரிப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆரம்பத்தில் யார் இந்து, யார் இஸ்லாமியர், விவேக் பிரசன்னா எந்த மதத்தைச் சேர்ந்தவர், என்ன நடக்கிறது? என புரியாமல் படம் பார்ப்பது போல் இருந்தது.

இரு சமூகத்திற்கு இடையில் குறுக்கிடும் அரசியல் எவ்வளவு விஷத்தன்மை வாய்ந்தது என்பதை இன்னும் ஆழமாக பேசியிருக்க முடியும். அதை தவறவிட்டிருக்கிறார் இயக்குநர். மொய்தீன் பாய்க்கு வரும் பின்னணி இசையைத் தவிர்த்து வேறு எந்த இசையும் ஈர்க்கவில்லை. ரஹ்மான் ஏமாற்றிவிட்டார். ஒளிப்பதிவுக்கும், படத்தொகுப்புக்கும் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம். இவைகளைத் தவிர லாஜிக் மீறல்கள் தனி.  

இருந்தாலும் சமூக ஒற்றுமையை வலியுறுத்திய வகையில் லால் சலாம் மாதிரியான திரைப்படங்களை வரவேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com