காதல் சிக்கல்களுக்கு மருந்திடுகிறதா லவ்வர்? திரைவிமர்சனம்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணா ரவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் லவ்வர்.
காதல் சிக்கல்களுக்கு மருந்திடும் லவ்வர்: திரைவிமர்சனம்
காதல் சிக்கல்களுக்கு மருந்திடும் லவ்வர்: திரைவிமர்சனம்
Published on
Updated on
2 min read

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், கெளரி ப்ரியா, கண்ணா ரவி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் லவ்வர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.  படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒரு காதல் ஜோடிக்கு இடையில் ஏற்படும் சிக்கல்களே கதைக்களம். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என காத்திருக்கும் இளைஞனாக வருகிறார் அருண் (மணிகண்டன்). அவருக்கு திவ்யா எனும் காதலி (கெளரி ப்ரியா). வழக்கமாக ஒரு காதல் ஜோடிக்குள் வரும் சந்தேக சண்டைகள், மோதல்களை படம் முழுக்க வைத்து அதில் பேச வேண்டியவற்றை பேச முயற்சித்திருக்கிறது லவ்வர். 

காதலன் காதலியை ஏமாற்றி விட்டதாகவோ அல்லது காதலி காதலனை ஏமாற்றியதாகவோ நமது நட்பு வட்டத்தில் சொல்லக் கேட்டிருக்கும் ஒரு கதையில் என்ன நடந்திருக்கும் என்பதை ஒருபோதும் நாம் யோசிப்பதில்லை. தனது காதலி தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் இதர அலுவலக ஆண்களிடம் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாத அருண் (மணிகண்டன்) திவ்யாவை (கெளரி ப்ரியா) டார்ச்சர் செய்கிறார். யாருடன் பேச வேண்டும், பேசினால் அனுமதி வாங்க வேண்டும் என அவர் நடந்த கொள்வது திவ்யாவுக்கு ஒருவித எரிச்சலைத் தருகிறது. அதனால் ஏற்பட்ட சண்டைகள் என்ன ஆனது என்பதே லவ்வர் திரைப்படத்தின் கதை. தற்போதைய காலத்தில் காதலர்களுக்குள் நடக்கும் இந்த சண்டைகளை காட்சிகளில் விரித்திருக்கிறார் இயக்குனர். 

ஜெய்பீம், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, குட் நைட் என கலக்கிய மணிகண்டன் இந்தத் திரைப்படத்திலும் தான் ஏற்றுக் கொண்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காதலியிடம் கோபம் கொள்கிறார், சண்டை செய்கிறார், கெஞ்சுகிறார், மன்னிப்பு கேட்கிறார், குடிக்கிறார்....மீண்டும் மீண்டும் இதே தொடர்ந்தாலும் இறுதிவரை பார்வையாளர்களை தன்னுடன் காட்சிகளுக்கு காட்சி அழைத்து சென்றிருக்கிறார் மணிகண்டன்.

மாடர்ன் லவ் சென்னை படத்தில் கவனம் ஈர்த்த கெளரி ப்ரியா இதில் நாயகியாக நடித்திருக்கிறார். கதாநாயகியை மையமிட்ட கதைக்களம் என்பதால் அதன் சுமையை சுமப்பது சாதாரணமானது அல்ல. அந்த சுமையை அனுபவம் வாய்ந்த நடிகை போல அசால்ட்டாக சுமந்திருக்கிறார் கெளரி. பல காட்சிகளில் நமக்கு தெரிந்த பெண்ணைப் போல இருக்கிறார் கதாநாயகி. படம் முழுக்க அழுதாலும் மணிகண்டனை தூக்கி சாப்பிட்டிருக்கிறார். 

இவர்களைத் தவிர கண்ணாரவி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாய் பெஸ்டி எனும் சொல் இப்போதைய இளம்தலைமுறையினரை எப்படி மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறதோ அதன் பிம்பத்தை காட்டும் வகையில் நடித்திருக்கிறார் அவர். காதலர்களாக இருந்தாலும் நண்பர்களாக இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது துணைக் கதாபாத்திரங்கள். தாயாக நடித்த கீதா கைலாசத்தின் நடிப்பும் நம்பிக்கை தருகிறது. அதேபோல் புகைப்பிடிப்பதன் மூலம் நண்பர்களாகிக் கொள்ளும் ஹரீஸும், மணிகண்டனும் ரசிக்கச் செய்கிறார்கள். 

காதலர்கள் எனும் பெயரில் இளம் தலைமுறையினரைப் பீடித்திருக்கும் சந்தேகங்கள் எப்படி ஒரு உறவை சிதைக்கிறது என்பதை திரைக்கதை மூலம் கடத்தியிருக்கிறார் இயக்குநர். பல காதலர்களுக்கும் பொருந்திப் போகின்ற காட்சிகள் படத்திற்கு நல்ல பலம். ஏதாவதொரு இடத்தில் நாம் இப்படித் தானே நடந்து கொண்டோம் எனும் எண்ணம் படத்தைப் பார்க்கும் இளைஞர்களுக்கு கட்டாயம் எழும்.

தனது தந்தையிடம் கோபப்படும் மணிகண்டன் கிளைமேக்ஸ் காட்சியில் உறைந்து போய் நிற்பது படத்தை வழக்கமான கிளைமேக்ஸ் காட்சிகளிலிருந்து வேறுபடுத்தியுள்ளது. என்ன சண்டையிட்டாலும் இறுதியில் இதுதான் நடக்கும் என்பதைப் போல் இல்லாமல் அவசியமான ஒன்றை கிளைமேக்ஸ் பேசியிருப்பது ஆரோக்கியமானது. அந்த மாற்றம் படம் பார்க்கும் இளைய தலைமுறைக்கும் ஏற்பட்டால் அதுவே படத்தின் வெற்றி. 

திரைக்கதையில் தனியே காமெடிக்கென யாரும் இல்லை. எனினும் காட்சிகள் விரிய விரிய ஆங்காங்கே சிரிப்புகளும் தவறாமல் வந்துவிடுகிறது. வெகுளியாக மணிகண்டன் நடந்துகொள்ளும் இடங்களிலும், கெளரி ப்ரியாவின் நண்பர்கள் அவருக்காக மெனக்கெடும் இடங்களிலும் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. பின்னணி இசையும் சரி, ஒளிப்பதிவும் சரி காட்சிக்குப் பொருத்தமாக வந்திருக்கின்றன. சான் ரோல்டனின் இசை வழக்கம்போல் கதைக்குள் ஒன்றியிருக்கிறது. 

தொடக்கத்தில் சொன்னதைப் போல மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவை ஒருகட்டத்தில் பார்வையாளர்களை சீட்டில் நெழியச் செய்கின்றன. நண்பர்களுக்கு மத்தியில் காதலன் வந்தால் என்ன நடக்கும் எனத் தெரிந்த கெளரி எதற்காக மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறார் என்பது புரியவில்லை. முதல் பாதியில் வரும் பீப் வசனங்கள் படத்தின் ஓட்டத்தைக் குறைக்கிறது. 

நிரூபித்துக் கொண்டே இருப்பதுதான் காதல் எனும் இடத்தில் இருந்த மணிகண்டன் இறுதியில் பேசிய வசனம் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கியிருக்கிறது. உண்மையில் அந்த வசனம் அவசியமானதும்கூட. 

உணர்ந்துகொள்ளப்படாத உறவை காதல் எனச் சொல்லலாமா எனக் கேட்டு அதற்கு விடையும் கொடுத்திருக்கிறது இந்த லவ்வர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com