ஓங்கி ஒலிக்கிறதா சைரன் சப்தம்? திரைவிமர்சனம்

ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சைரன் திரைப்படத்தின் விமர்சனம்.
ஓங்கி ஒலிக்கிறதா சைரன் சப்தம்? திரைவிமர்சனம்

இயக்குநர் அந்தோனி பாக்யராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த வாரம் வெளியாகியிருக்கிறது சைரன் 108.

நடிகர் ஜெயம்ரவி பெப்பர் சால்ட் உருவத்தில் தோன்றியிருக்கும் இந்தத் திரைப்படம் பழிவாங்கல் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் ஜெயம் ரவி வில்லன்களால் பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கொலை வழக்கில் 14 ஆண்டுகள் சிறைதண்டனை பெறுகிறார். சிறையில் நல்ல பெயரை எடுக்கும் ஜெயம் ரவி 2 வார பரோலில் வெளியில் வருகிறார். அவர் வெளிவந்த நேரம் அவரைச் சுற்றி கொலைகள் அரங்கேறுகின்றன. கொலையானவர்களுக்கும், ஜெயம்ரவிக்கும் என்ன தொடர்பு? லாக்கப் மரணத்தால் ஏற்கெனவே கெட்ட பெயரை சம்பாதித்த காவல் அதிகாரி கீர்த்தி சுரேஷ் இந்த கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே சைரன் திரைப்படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் பழிவாங்கல் கதைகளுக்கு பஞ்சமில்லை. வித்தியாச வித்தியாசமாக பல காட்சிகளைப் பார்த்திருந்தாலும் கதை என்பது ஒரே சாரம்சத்தை அடிப்படையாக மட்டுமே கொண்டிருக்கும். சைரன் திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல. தனது குடும்பத்தை நிலை குலையச் செய்த வில்லன்களை பழிவாங்குவாரா ஜெயம்ரவி? அதை எப்படி மாட்டிக் கொள்ளாமல் செய்கிறார்? எனும் சஸ்பென்ஸை கூடுமானவரை காப்பாற்ற முயற்சித்திருக்கிறது சைரன். ஒட்டுமொத்த திரைப்படத்திற்குமான காட்சிகளைத் தாங்கும் பொறுப்பு நடிகர் ஜெயம்ரவி உடையது. அவரைச் சுற்றியே கதை இருப்பதால் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கட்டிப்போடும் பொறுப்பும், சுமையும் அவருக்கே உள்ளது. அதற்கேற்றார்போல் நன்றாக நடித்திருக்கிறார் ஜெயம்ரவி. தனது மகளை மறைந்திருந்து காணும் இடங்களில் கலங்கச் செய்யும் ஜெயம்ரவி வில்லன்களைப் பழிவாங்கும் இடங்களில் ரெளத்திரம் காட்டுகிறார். பொறுமையான நிதானமான நடிப்பைக் கொடுத்து சென்றிருக்கிறார் அவர். ஜெயம் ரவிக்கு இணையாக திரையை ஆக்கிரமித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். காவல்துறை அதிகாரி என்பதால் மிடுக்காகக் காட்டிக்கொள்ள முயற்சித்திருக்கிறார். இவர்களைத் தவிர யோகிபாபு, அனுபமா, சமுத்திரக்கனி, சச்சு என பலர் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாமல் பிளாஷ்பேக்கின் சில காட்சிகளில் மட்டும் வரும் அனுபமா கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். கீர்த்தி சுரேஷிடம் எகிறும் இடங்களிலும், சாதிபெருமை கொண்ட காவல்துறை உயரதிகாரியாகவும் சமுத்திரக்கனி சிறப்பாக செய்திருக்கிறார். ஜெயம் ரவியுடன் வரும் யோகிபாபி சிரிக்க வைக்கத் தவறுவதில்லை.

பழக்கப்பட்ட கதையை அயற்சியில்லாமல் கொண்டு செல்வது சவாலான பணி. அதை கூடுமானவரை நேர்மையாக நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர். கதைக்குள் கிளைக் கதை என விரியும் இடங்களில் சாமர்த்தியமாகக் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர். வேகமாக நகரும் திரைக்கதை அமைப்பும் படத்திற்கு பெரும்பலம். அதேசமயம் படத்தில் குறைகளும் இருக்கவே செய்கின்றன. ஜெயம்ரவியின் மேல் காவல்துறைக்கு சந்தேகம் வந்த பிறகும் யோகிபாபுவையே மீண்டும் எதற்காக அவருக்கு பாதுகாப்பாளராக பணியமர்த்துவது, தகரத்தைத் தேய்ந்து வில்லனைக் கொல்வது என சில லாஜிக் குறைகள் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. கண்ணம்மா பாடலும், நேற்றுவரை ஆகிய பாடல்கள் கதை ஓட்டத்துடன் ரசிக்கச் செய்திருக்கின்றன. சில முன்கணிக்கக் கூடிய காட்சிகளைத் தவிர்த்திருந்தால் இன்னும்கூட விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். செல்வகுமாரின் கேமராவும் மற்றும் ஜிவி பிரகாஷ்குமாரின் இசையும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.

ஏற்கெனவே பழக்கப்பட்ட கதையாக இருந்தாலும் திரைக்கதை உருவாக்கத்தில் எடுத்துக் கொண்ட மெனக்கெடலால் ஓங்கி ஒலித்திருக்கிறது சைரன் 108.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com