வெற்றி பெற்றதா? ப்ளூ ஸ்டார்- திரை விமர்சனம்! 

அரக்கோணத்தில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்தும் (அசோக் செல்வன்) ராஜேஷும் (சாந்தனு) இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரிய ஆர்வம் உண்டு.
வெற்றி பெற்றதா? ப்ளூ ஸ்டார்- திரை விமர்சனம்! 

அரக்கோணத்தில் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்தும் (அசோக் செல்வன்) ராஜேஷும் (சாந்தனு) இருவருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரிய ஆர்வம் உண்டு. இருவரும் தனித்தனி அணியின் கேப்டனாக இருக்கின்றனர். பல அணியுடன் இவர்கள் விளையாடினாலும் எந்த போட்டியிலும் ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. காரணம், ரஞ்சித்துக்கு முந்தைய தலைமுறையினர் அந்த ஊரில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தில் அடித்துக் கொண்டதும் அதனால் இரு சமூகத்துக்கும் பிரச்னை ஏற்படுகிறது. அதைவிட முக்கியக் காரணம், ரஞ்சித் அந்த ஊரில் இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவரது அணியினரும் அதே காலனி என்பதால் எதிர்த் தரப்பில் இருக்கும்   ராஜேஷ் மற்றும் அவரது அணியினர் ரஞ்சித்துடன் விளையாடுவதில்லை. பல ஆண்டுகளாக இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் விளையாடுவதில்லை என்பதால் கோவில் திருவிழாவில் விளையாட முன் வருகிறார்கள். அந்தப் போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் ரஞ்சித்தின் ப்ளூஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர். மகிழ்ச்சியில் இருக்கும் ராஜேஷ், தான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவரைக் கடுமையாக அவமானப்படுத்தப்படுத்தி அனுப்புகிறார்கள். அதே நேரம் விளையாட்டு கோட்டாவில் அரசுப் பணிக்காக முயலும் ரஞ்சித்தும் வாய்ப்பு மறுக்கப்பட்டு புறக்கணிப்பைச் சந்திக்கிறார். ஒருகட்டத்தில் ப்ளூஸ்டார் அணியும் ஆல்பா அணியும் ஓர் அணியாக மாறுகிறது. எதற்காக இணைந்தார்கள்? இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து யாரை எதிர்கொண்டார்கள்? என்கிற மீதிக்கதையை கிரிக்கெட் போட்டிகளை வைத்தே சுவாரஸ்யமாகக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார்.

விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களின் சவால் தெரிந்த முடிவை நோக்கி காட்சிகளைக் கொண்டு செல்வது. எப்படியும் கதை நாயகர்கள் வென்றுவிடுவார்கள் என்கிற கிளைமேக்ஸ் ஊகங்கள் இருக்கும் என்பதால் அறிமுக இயக்குனரான ஜெயக்குமார் முடிந்தவரை இப்படத்தை சோர்வைத் தராமல் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

போர் தொழில், சபாநாயகன் படத்திற்கு பின் வெற்றியை ருசிக்கும் வேகத்தில் வந்த அசோக் செல்வனுக்கு சொல்லிக் கொள்ளும் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த சாந்தனுவுக்கும் நல்ல கதாபாத்திரமே. இரண்டு பேரின் கதாபாத்திரங்களும் முதல் காட்சியிலிருந்து இறுதிவரை அழுத்தமாக இருக்கிறது. சாக்லேட் பாய்ஸ் என்கிற பிம்பத்தில் இருக்கும் இருவருக்கும் கிராமப் பின்னணியில் இருக்கும் தோற்றம் சரியாகப் பொருந்திருக்கிறது. அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் காதல் காட்சிகள் ரசிக்கும் படியாக அமைக்கப்பட்டிருப்பதும் 'ரயிலின் ஒலிகள்'பாடலும் ரசிக்க வைக்கிறது. ஆதிக்க மன நிலையிலிருந்து மெல்ல விலகி வரும் உடல்மொழியை சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் சாந்தனு. நீண்ட இடைவேளைக்குப் பின் அவருக்கான சரியான படமாக இது அமைத்திருக்கிறது. 

பலமாக அமைந்திருக்க வேண்டிய திரைக்கதை சில இடங்களில் சரிவுவைச் சந்திப்பது படத்தின் வேகத்தை குறைப்பதுடன் சொல்ல வந்த சமத்துவக் கருத்துகளில் இருந்தும் விலக வைக்கிறது. வசனங்கள் முடிந்தவரை கை கொடுத்தாலும் சில இடங்களில் சொன்னதையே சொல்வதுபோல் தோன்றுகிறது.

தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவும் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. முக்கியமாக ஒளிப்பதிவில் அரக்கோணம் ரயில் நிலையம், ரயில் செல்லும் காட்சிகள், கிரிக்கெட் ஆட்டங்கள் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் தொடர்பான விஎப்எஸ் காட்சிகள் நம்பும்படியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கிளைமாக்ஸ்  போட்டியின் வேகத்தை எடிட்டிங்கில் கச்சிதமாகக் கையாண்டுள்ளனர். 

முதல் பாதியில் விறுவிறுப்பாக நகர்ந்த காட்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் தொய்வு அடைவது, தேவையில்லாத இடங்களில் கீர்த்தி பாண்டியனின் வாய்ஸ் ஓவர்  போன்றவை காட்சியின் அழுத்தத்தை குறைக்கின்றன. இருந்தாலும், சாதிய பிரச்னை, 90-களின் காலகட்டம், திறமைகளுக்கு எதிரான அதிகாரம் என பல உள்மடிப்பு கொண்ட பிரச்னைகளை கிரிக்கெட் மூலம் சொல்லி, அதில் அபார வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஆர்ப்பாட்டம் இல்லாத வெற்றியைப் பெற்றிருக்கிறது ப்ளூ ஸ்டார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com