
யோகிபாபு, வாணி போஜன், நிழல்கள் ரவி, சார்லி, கயல் சந்திரன், மைனா நந்தினி, குமரவேல், தீபா ஆகியோர் நடிப்பில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஆறு பகுதிகளைக் கொண்ட இணையத் தொடராக வெளிவந்திருக்கிறது சட்னி சாம்பார். ‘மொழி’ ராதாமோகன் கதை – திரைக்கதை - இயக்கம்.
திரைப்படத்துக்கும் சின்னத்திரைத் தொடருக்கும் இடைப்பட்டதான, ஓ.டி.டி.யில் மட்டுமே வெளியாகும் வெப் தொடர்கள் நம்ம ஊரில் சிறப்பான தரத்துக்குப் போட்டிபோட்டுக்கொண்டுதானிருக்கின்றன. உள்ளபடியே திரைப்படங்களுக்கு மிகச் சிறந்த மாற்றான வெப் தொடர்களில் நிறையவே சாதிக்க முடியும்.
ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நல்ல வெப் தொடர்கள் வாய்க்கப் பெற்றாலும் (பெரும்பாலானவற்றைத் தமிழ் மொழிப் பதிவில் பார்க்க முடிகிறது) தமிழில் ஒருசிலவற்றைத் தவிர இன்னமும் பெரும்பாலும் திரைப்படமாகச் சுருக்க முடியாத அல்லது எடுக்க முடியாதவைதான் தொடர்களாக வெளியாகின்றன.
சட்னி சாம்பார் என்ற டைட்டிலைக் கேட்டதுமே இரண்டு ஏதோ ஹோட்டல்களுக்கு இடையிலான போட்டி போல என்றுதான் தோன்றுகிறது. அறிமுகக் காட்சிகளும்கூட அதேமாதிரிதான் இருக்கின்றன. ஆனால், அப்படி இல்லை.
கதை என்னவோ, பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன பழைய விஷயம்தான். எத்தனையோ அக்னி நட்சத்திரங்களைப் பார்த்திருக்கிறோம். ஒரு அப்பா, இரு மனைவிகள், அவர்கள் வாரிசுகள், அப்புறம் பிரச்சினைகள்.
ஆனால், சட்னி சாம்பாரில் தீப்பறக்கிற மோதல்கள் எதுவும் இல்லை. ஆறு பகுதிகளுமாக 233 நிமிஷங்கள் – ஏறத்தாழ 4 மணி நேரம் – அடுத்தடுத்துப் பார்க்கும்படியாக - கழுத்தறுக்காமல், போரடிக்காமல், பெரிய மனத் தொந்தரவு எதுவுமில்லாமல் சந்தோஷமாகவே கழிகிறது.
தொடரின் தொடக்கத்தில் வந்து, கதையைத் தொடக்கிவைத்துவிட்டு இறந்துபோகிற ரத்தினசாமி (நிழல்கள் ரவி), கடைசிக் காட்சி வரையிலும்கூட படமாகவோ, உரையாடல்களிலோ, சச்சின் (யோகி பாபு) வாயிலிருந்து வசவுகளாகவோ (சில பிளாஷ்பேக்குகளிலும்) வந்துகொண்டே இருக்கிறார்.
எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கலாம், இனியும் வரும், ஆனால், யோகி பாபுவுக்கு இந்தத் தொடர் வாழ்நாளில் மறக்க முடியாததாகவே இருக்கும். பட்டினப்பாக்கத்தில் இட்லிக் கடையில் அறிமுகமாகிற காட்சியிலிருந்து தொடர் முடிகிற வரையிலும் கொஞ்சமும் எரிச்சலூட்டாத விதமாக நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில் நாலைந்து பேரை அடித்துப் போட்டுவிட்டு, ஏன்டா, என்னப் போயி சண்ட போட வச்சீட்டிங்களேடா... என்றொரு வசனம் பேசுகிறார். நகைச்சுவை நடிகர்தான், நகைச்சுவைகளையும் வெடிக்கிறார், ஆனால், நன்றாகவே நடித்துமிருக்கிறார்.
இன்னாது, யோகிபாபுவுக்கு வாணி போஜன் ஜோடியா? என்று, தொடங்கும்போது கொஞ்சம் ஜெர்க் ஆக வைத்தாலும், இருவருமே பாத்திரங்களுக்கு ஏற்ப மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். வாணி போஜனுக்கான இடம் சற்றுக்குறைவு எனப் பட்டாலும் கிடைத்த வாய்ப்புகளை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பொறுப்பான மகனாக வரும் கயல் சந்திரன் பெரும்பாலான காட்சிகளில் புரிந்து நடித்திருக்கிறார். சென்னையில் யோகி பாபுவைச் சந்திக்கும் காட்சிகளும் அந்த கேரக்டரைக் கையாளும் விதத்திலும் சிறப்பு.
அமுதா கபே, அமுதா இல்லம்... என்னுடைய பெயரைத்தான் எல்லாவற்றுக்கும் வைத்திருக்கிறார் அப்பா என்று நினைத்துக்கொண்டிருந்தால் எனக்கே அவர் பெயரைத்தான் வைத்திருக்கிறார் என்று சலித்துக்கொள்கிறார் மகளாக வரும் மைனா நந்தினி.
நந்தினியும் அவருக்கு இணையாக வரும் நிதின் சத்யாவும் நல்ல காம்பினேஷன். நிறைய இடங்களில் ஸ்கோர் செய்வதில் போட்டி போடுகிறார்கள்.
ஷோபியின் (வாணி போஜன்) குடிகார அப்பாவாக வரும் சார்லியின் நடிப்பு பிரமாதம். அவருடைய அனுபவம் அவரை வேற லெவலில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அப்பாவும் மகளும் மோதிக்கொள்கிற இடங்கள் எல்லாம் மனதில் படிகின்றன. கதையை நகர்த்துவதில் குமரகுருவின் கேரக்டர் நன்றாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. நந்தினி – நிதின் மகனாக வரும் சின்னப் பையன் நல்ல துடி.
தொடரில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் முக்கியமான கேரக்டர்கள் அத்தனையுமே மிகவும் பாசிட்டிவான அணுகுமுறையைக் கைக்கொள்வதுதான். நெகடிவிடியே கிடையாது எனலாம்.
எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலே இந்தத் தொடரின் சிறப்பு அம்சம் – எம்.ஆர். பொன் பார்த்திபனின் வசனங்கள், குறிப்பாக, நகைச்சுவை வசனங்கள். உதகையில் 13 நாள்கள் இருந்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்று சந்திரன் சொல்லும்போது, சரி போ, தனியா ஹனிமூன் வந்தா மாதிரி இருந்துட்டுப் போறேன் என்பார் யோகி பாபு (ஆங்காங்கே ஆங்கிலத்தில் வரும் கெட்ட வார்த்தைகளைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம், வீட்டில் பக்கத்தில் இருக்கும் குழந்தை அர்த்தம் கேட்டால் என்னவென்று சொல்வது? ராதாமோகன் கொஞ்சம் கவனிங்க).
அவ்வப்போது இதைப் போல ஏதாவது ஒரிஜினலாக வந்துகொண்டிருந்தால் தமிழிலும் வெப் தொடர்கள் நல்ல இடத்தையும் சந்தையையும் பிடிக்க முடியும்.
கத்தி, ரத்தம், கூச்சல், பழிவாங்கல் எதுவுமில்லாமல் சந்தோஷமாக ஒரு பொழுதைக் கழிக்கலாம், சட்னி சாம்பாருடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.