நடிகர் விதார்த் நடிப்பில் உருவான லாந்தர் படத்தின் திரை விமர்சனம்.
காவல்துறையாக அதிகாரியாக இருக்கும் கதைநாயகன் அரவிந்த் (விதார்த்) பணி முடிந்து இரவில் வீட்டிற்குச் செல்கிறார். அப்போதென காவலர் ஒருவர் சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய ஒருவரை சாலையில் பார்க்கிறார். உடனே, காவல்நிலையத்திற்குத் தகவல் கொடுத்து மற்ற காவலர்களை வரவழைக்கிறார். அவர்களும் அந்த சந்தேக ஆசாமியைச் சுற்றி வளைக்கின்றனர்.
ஆனால், அனைவரையும் தாக்கிவிட்டு அந்த ஆள் சாலையில் நடந்து செல்கிறார். நாயகன் அரவிந்துக்கு விசயம் சொல்லப்படுகிறது. அவர் வந்தும், அடையாளம் தெரியாத ஆசாமியைப் பிடிக்க திணறுகிறார். அப்படி அந்த சாலையில் சென்றது யார்? என்கிற சாதாரணமாக கதையே லாந்தர்.
குறும்படத்தையே தரமாக எடுத்துவரும் காலத்தில் சில கோடிகளை முதலீடு செய்து அவை வீணாகப்போகின்ற வலியைப் பார்வையாளர்கள் வரை கொண்டு சென்றிருக்கின்றனர் படக்குழுவினர். வலுவான கதையும், வசனமும் இல்லாத இப்படத்தில் நடிக்க விதார்த் எப்படி ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை.
காவல்துறையைக் கொஞ்சமும் மதிக்காமல் போகிறவர்கள் எல்லாரும் அடித்துப் பார்க்கிற ஆள்களாகவே சித்திரித்திருக்கின்றனர். ஒரு லாஜிக்கும் இல்லாத கதையாகவே இப்படத்தைப் பார்க்க முடிகிறது.
சீரியஸான காட்சிகளுக்கும் பார்வையாளர்கள் கைதட்டி சிரிக்கின்ற வகையிலேயே காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இயக்குநருக்கு இது முதல் படமென்றாலும் தொழில் தெரிந்த ஒருவரை இணை இயக்குநராக வைத்திருக்கலாம்.
மைனா, குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை உள்ளிட்ட கதையம்சமுள்ள படங்களில் நடித்த விதார்த்தை, இப்படத்தில் பார்ப்பது அதிர்ச்சியாகவே இருக்கிறது. நல்ல படங்களின் நாயகன் எனப் பெயரெடுத்தவருக்கு இப்படம் மிகப்பெரிய அடி. ஆனால், லாந்தரில் ஆறுதலான விசயம் என்றால் அது விதார்த்தின் நடிப்பு மட்டுமே.
விதார்த்தின் மனைவியாக நடித்த சுவேதா டோரதி அழகாக இருந்தாலும் அவருக்கான காட்சிகளில் அழுத்தமாகத் தெரியவில்லை. மஞ்சு என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சஹானாவும் சரியாகப் பொருந்தவில்லை.
கிளைமேக்ஸ் காட்சியில் கார் துரத்தல் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தன. நகரத்தின் டாப் ஆங்கிள் காட்சிகள், காரில் செல்லும் காட்சிகள் மட்டுமே ஒளிப்பதிவில் தேறியவை. பின்னணி இசைகளும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.
சஸ்பென்ன்ஸ் திரில்லர் என்கிற பெயரில் எந்தவிதமான பரபரப்புக்கும் இடம் கொடுக்காமல் பார்வையாளர்களின் பொறுமையையே இப்படம் சோதித்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் சாஜி சலீம் கூடுதல் கவனத்துடனே தன் அடுத்த படத்தை இயக்க வேண்டும். கதையும் திரைக்கதையும் மட்டுமே வென்று வரும் சூழலில் அதைப்பற்றி யோசிக்காமல் முன்னணி நடிகரை நம்பி சினிமாவை உருவாக்கினால் என்ன நிகழும் என்பதற்கு லாந்தர் இன்னொரு உதாரணம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.