விஷுவல் விருந்தாக 'டியூன் - 2' திரை விமர்சனம்

டெனிஸ் வில்லினுவ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள டியூன் இரண்டாம் பாகத்தின் திரை விமர்சனம்.
விஷுவல் விருந்தாக 'டியூன் - 2' திரை விமர்சனம்

க. தர்மராஜகுரு

பூமியில் எப்படி பெட்ரோலியமும், டீசலும் முதன்மை எரிபொருளாக உள்ளதோ, அதைப் போன்று "ஸ்பைஸ்" (Spice) எனும் எரிபொருள் அராக்கிஸ் (Arrakis) எனும் கோளில் கிடைக்கிறது. கடலில் வழி கண்டறிந்து செல்வதற்குத் திசைகாட்டி உதவியதைப் போல், விண்வெளியில் திசை கண்டறிந்து பயணிப்பதற்கு இந்த ஸ்பைஸ் எனும் இயற்கை வளத்தை எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். பால்வெளியில் உள்ள மற்ற கோள்கள் அனைத்தும், இந்த எரிபொருளை உற்பத்தி செய்ய, அராக்கிஸ் கோளில் வாழும் மக்களின் நிலங்களைப் பறித்து, அவர்களை அடிமையாக்குகிறார்கள். இதனால் அங்குள்ள பூர்வகுடிகள் தங்கள் நிலத்தை இந்த ஆளும் வர்க்கத்திடமிருந்து மீட்கப் போராளிகளாகின்றனர். இதற்கிடையில் இந்த எரிபொருளை யார் உற்பத்தி செய்வது, யார் இந்த அராக்கிஸ் எனும் விளைநிலத்தை சொந்தமாக்கி நிர்வகிப்பது எனும் அதிகாரச் சண்டை வெடிக்கிறது.  இந்த அரசியல் குழப்பங்களுக்கு, அதிகாரச்சண்டையில் அங்கம் வகிக்கும் அரசர் ஒருவரின் மகனான கதாநாயகன் தீர்வு கண்டானா? அடிமை மக்கள் என்ன ஆனார்கள்? நிலத்தின் நிர்வாக உரிமை யாருக்குக் கிடைத்தது? ஹீரோவை ஏன் அந்த அடிமைகள் ‘கடவுள் தேர்ந்தெடுத்தவனாகக்’ கருதுகிறார்கள் என்பதே டியூன் படவரிசைகளின் (Dune Franchise) கதைக்களம்.

கடந்த 2021ல் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான டியூன் - பார்ட் ஒன் (Dune - Part One) வசூல் ரீதியாகவும், விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று அடுத்த பாகத்திற்கான ஆவலைத் தூண்டியது. ஆனால் எந்த அவசரமும் இல்லாமல் மூன்று வருடங்கள் பொறுமையாக உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ள இந்த இரண்டாம் பாகம், இணையத்தில் மழையாய் கொட்டும் பாராட்டுகளுக்கு உரித்தானது என்றே சொல்லவேண்டும். 

பொதுவாக அறிவியல் புனைக்கதைகளில் முதன்மையாக எதிர்பார்க்கப்படுவது விஷுவல் கிராபிக்ஸ். ஆனால் வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் இருந்தாலும், கச்சிதமான கதை இல்லாவிட்டால் அந்த படம் பேசப்படுவதில்லை. இயக்குநர் டெனிஸ் வில்லுனவ்வின் (Denis Villeneuve) இந்த டியூன் திரைப்படம், அந்த இரண்டிலுமே கச்சிதமாக உள்ளது. புதியதொரு உலகை உருவாக்கி, இயற்கைக் காட்சிகளையும், புதுமையான கட்டிடங்களையும், எதிர்கால ஆயுதங்களையும் மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களின் கடவுள் சார்ந்த புரிதல்களுக்கும், அவர்களின் நம்பிக்கைகளுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் நம்மை கதையோடு ஒன்ற வைக்கின்றது.

படத்தின் பின்னணி இசை, திரையரங்கிலிருந்து வீடு வரை மனதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. இசையமைப்பாளர் ஹேன்ஸ் சிம்மர் (Hans Zimmer), நம்மை அந்த உலகிற்கு கடத்துவதில் முக்கிய வேலையைச் செய்திருக்கிறார். மேன் ஆப் ஸ்டீல் (Man of Steel), இன்டர்ஸ்டெல்லார் (Interstellar) போன்ற படங்களுக்கு இசையமைத்த ஹேன்ஸ் சிம்மர் இந்த படத்திற்கு இசை கூட்டியுள்ளார். படத்தின் சண்டைக் காட்சிகளிலும், ராட்சச புழுவை சந்திக்கும் காட்சிகளிலும் தோன்றும் பின்னணி இசை நம்மை சிலிர்க்க வைக்கிறது. 

பாரன் (Baron) எனும் வில்லனாக நடித்துள்ள ஸ்டெல்லன் ஸ்டார்ஸ்கார்ட் அவரது கோரமான தோற்றத்தாலும், அலட்டிக்கொள்ளாத ஆனால் பயமுறுத்தும் நடிப்பாலும் மிரட்டுகிறார். ஃபயட் ரூத்தா (Feyd-rautha) எனும் வில்லனை அறிமுகப்படுத்தும் காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும், ஆஸ்டின் பட்லரின் நடிப்பு அந்த சலிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. 

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள டிமத்தி சார்லமேட், சென்டாயா, பட்டிஸ்டா, ஜாவீர் பார்டென், ரெபேக்கா ஃபெர்குசான் ஆகியோர் கச்சிதமான நடிப்பால் கவர்கின்றனர். முதல் பாகத்தில் மிகவும் பயந்த சுபாவத்துடன் அழுதுகொண்டே இருக்கும் ஜெசிக்காவாக நடித்த ரெபெக்கா, ரெவரன்ட் மதராக மாறும் காட்சிகளில் மிரளவைக்கிறார். ஒன்றும் தெரியாத சிறுவனாக அறிமுகமான டிமத்தியின் கதாபாத்திரம் மிகவும் வலிமையாக மாறியிருப்பது அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது. 

சரியான தயாரிப்பு முன்னேற்பாடுகளால், அதிகளவு செட்டும், மீதம் கிராபிக்ஸ்ஸும் பயன்படுத்தியிருப்பது காட்சிகளை மெருகேற்றியுள்ளது. மார்வெல், டிசி மாதிரியான பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த காலத்தில் திரைப்படங்களை வெளியிடும் நோக்கத்தில் கிராபிக்ஸ் காட்சிகளில் கோட்டைவிட்டு ரசிகர்களிடத்திலும், விமர்சக ரீதியாகவும் அதிருப்தியை ஏற்படுத்திவரும் நிலையில், இயக்குநர் டெனிஸ் தரமான திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும். 

எரிபொருளுக்காக சொந்த நிலத்தை இழந்து, அடக்குமுறைகளை அனுபவிக்கும் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக, உயிருக்கு பயந்து ஒளிந்துகொண்டிருக்கும் குடும்பங்கள் எல்லாம் நமக்கு சமீபகால உலக அநீதிகளை நினைவுபடுத்துகிறது.

அண்ணன் - தம்பி சண்டை, உலகையே அழிக்கவரும் வில்லன், மதர்பாக்ஸ் என கமர்சியல் கட்டுகளை ஓரமாக வைத்துவிட்டு, எரிபொருள் மீதான அதிகாரச் சண்டையை கதைக்களமாக தேர்ந்தெடுத்திருப்பது பரவலான வரவேற்புக்கு காரணமாக இருக்க வேண்டும். 

1977ல் வெளியாகிய ஸ்டார் வார்ஸ் (Star wars) படவரிசைகள் மீது உலக கவனம் இருக்க, 1984-ல் வெளியான டியூன் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் ஸ்டார் வார்ஸ் இயக்குநர் ஜார்ஜ் லூக்கஸ், டியூன் புத்தகங்கள்தான் இதுபோன்ற படங்களை எடுக்க தன்னை ஊக்குவித்ததாக தெரித்திருந்தார்.

எனினும் டியூன் எனும் மாபெரும் நாவல், திரைக்கேற்ற கதையல்ல என்றே கருதப்பட்டது. ஆனால் இதுபோன்ற கதைகளில் ஆர்வம் காட்டும் டெனிஸ், இந்த சிக்கலான பிரம்மாண்ட கதையைக் கையிலெடுத்துள்ளார். அரைவல் (Arrival) போன்ற யாரும் தொட விரும்பாத கதைகளை வெற்றிப்படங்களாக்கும் டெனிஸ் வில்லுனவ், தனது படங்களை பொறுமையாக எடுக்க விரும்புவதாகக் கூறுகிறார். டியூன் மூன்றாம் பாகத்திற்கான தயாரிப்புப் பணிகளை கடந்த ஆண்டிலிருந்தே செய்துவருவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்குமுன் தற்போது திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த விஷுவல் விருந்தை முடிந்தால் ஐமேக்ஸ்ஸில் (Imax) ரசிக்க முயற்சி செய்யுங்கள்.

வெறும் விஷுவல் கிராபிக்ஸை மட்டும் கணக்கில் வைத்து, சுமாரான கதைகளில் எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் டியூன் உயிரோட்டம் கொண்ட கதையாக நிற்கிறது என்றே தோன்றுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com