தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

நடிகர் அமீர் கான் தயாரிப்பில் கிரண் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ளது லாபதா லேடீஸ்.
தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!
Published on
Updated on
3 min read

ஆண்களோ பெண்களோ உலகம் முழுவதும் திருமணம் செய்கிறவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய பிரச்னை தனிமனித சுதந்திரத்தை, விருப்பத்தை, கனவுகளை சமரசம் செய்வதாகத்தான் இருக்கிறது. உறவைத் தாண்டி அவரவர் வழியில் சிந்திக்கும் மேலைநாட்டு கலாசாரங்களில் பெரும்பாலும் சகிப்புத்தன்மைகள் குறைவு.

ஆனால், அதீத பழக்க வழக்கங்கள், பண்பாட்டுப் பின்னணி கொண்ட இந்தியா போன்ற நாட்டில் திருமணம் என்பது கிட்டத்தட்ட போருக்கு நிகரானது.

சடங்குகளின் வழியே மண வாழ்க்கைக்குச் செல்பவர்களின் குடும்பங்கள், ஒருவரின் ரசனை, தேவை உள்ளிட்டவற்றை புரிந்துகொள்வதற்குள் இங்கு பாதி பேருக்கு வாழ்க்கையே வெறுத்துவிடுகிறது. 2000-களில் திருமணங்களில் கொடுக்கப்பட்ட மதிப்பும் சகிப்புத்தன்மையும் இன்று முற்றிலுமாக இல்லையென்ற நிலைக்கே வந்திருக்கிறது.

அப்படி, திருமணங்களால் நிகழும் குழப்பங்களையும் பெண்கள் சந்திக்கும் சிக்கல்களையும் பேசியிருக்கிறது லாபதா லேடிஸ் (laapataa ladies).

2001-ல் தீபக் குமாருக்கும் ஃபூல் குமாரிக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமண நிகழ்வுகள் முடிந்ததும் தீபக் மனைவியைத் தன்னுடன் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார். திருமணமான பெண்கள் கணவனைத் தவிர வேறு யாரையும் முகம் கொடுத்து பார்க்கக் கூடாது என்பதால் ஃபூல் குமாரி தன் முகத்தை மறைத்தபடியே தீபக்குடன் ரயிலில் ஏறுகிறாள்.

இவர்கள் அமர்ந்த இருக்கையில் புதிதாக திருமணமான இரண்டு ஜோடிகள் தங்கள் குடும்பத்தினருடன் இருக்கின்றனர். அங்கு ஒவ்வொருவரும் திருமணத்திற்கு எவ்வளவு வரதட்சிணை வாங்கினோம் என்பதைப் பெருமையாகப் பேசுவதிலிருந்து படத்தின் கதை துவங்குகிறது.

அன்று இரவில் தாங்கள் இறங்கவேண்டிய ரயில் நிலையத்தைக் கண்டவுடன் உறங்கிக்கொண்டிருக்கும் மனைவியை தீபக் எழுப்புகிறான். அவசரமாக, அவன் கீழறங்க அவளும் பின்தொடர்கிறாள். பேருந்தில் ஏறி அங்கிருந்து வீடு செல்லும்வரை பரபரப்பாக இருக்கும் தீபக், வீட்டிற்குச் சென்றதும் மனைவியைக் குடும்பத்தினரிடம் காட்டி மகிழ்ச்சியடைகிறான்.

தீபக்கின் குடும்பத்தினர் ஆரத்தி எடுத்து பொட்டு வைப்பதற்காக ஃபூல் குமாரியிடம் முகத்தைக் காட்டச் சொல்கிறார்கள். அவள் சிறிய தயக்கத்திற்குப் பின் துணியை விலக்குகிறாள். அந்த முகத்தைப் பார்த்த மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைகிறார்கள். ஆம். அது ஃபூல் குமாரி இல்லை. அந்த ரயிலில் இருந்த வேறு ஒருவரின் மனைவி ஜெயா. தீபக் தலையில் கைவைத்தபடி என்ன செய்வது எனத் தெரியாமல் அச்சமடைகிறான்.

மறுபுறம் தன் கணவனைத் தவறவிட்ட ஃபூல் குமாரியும் ஜெயாவின் கணவனும் இன்னொரு இரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். ஃபூல், தீபக்கைக் காணாததால் அதிர்ச்சியில் அங்கும் இங்கும் தேடிப் பார்க்கிறார். அதேநேரம், தன் மனைவியைக் காணாததால் ஆத்திரமடையும் பிரதீப், கோபத்தில் சில இடங்களில் தேடிவிட்டு அவளிடமிருந்து வரதட்சிணையாகப் பெற்ற நகைகள் கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியில் வீட்டிற்குச் செல்கிறான்.

அடுத்தநாள் தீபக்கும், பிரதீப்பும் ஒரே காவல்நிலையத்தில் தங்களது மனைவிகளைக் காணவில்லை என புகார் அளிக்கின்றனர். இதை விசாரிக்கும் அதிகாரியோ லஞ்சத்தை எதிர்பார்க்கும் காவலர். கணவனைக் காணாமல் பரிதவிக்கும் ஃபூல் குமாரியின் காட்சிகளுக்கு இணையாக கணவனைப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஜெயாவின் காட்சிகளும் சுவாரஸ்யமாகக் கதையை நகர்த்துகிறது.

தீபக் பல இடங்களில் தேடியும் தன் மனைவியைக் கண்டுபிடிக்காமல் திணறுகிறான். கணவனுடன் சேரும் வாய்ப்பு இருந்தும் ஜெயா தலைமறைவாக தீபக் வீட்டில் இருக்கிறாள்.

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!
உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

ஃபூல் குமாரி என்ன ஆனாள்? அவளைத் தேடிச் சென்ற முயற்சி வெற்றி பெறுகிறதா? ஜெயா ஏன் தன் அடையாளத்தை மறைக்க வேண்டும்? என்கிற கதைக்குப் பெண் சுதந்திரம், கல்வியின் அவசியத்தை மையமாகக் கொண்டு ஆழமான கருத்தைப் பேசியிருக்கிறார் இயக்குநர் கிரண் ராவ்.

குடும்பம், திருமண சடங்குகளின் பெயரில் இந்தச் சமூகத்தில் ஒரு பெண் எதையெல்லாம் எதிர்கொள்கிறாள் என்பதை நவீனகால பெண்ணைத் தவிர்த்துவிட்டு 2000-களின் கிராமப் பின்புலத்திருக்கும் பெண்களை வைத்து நல்ல திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். இன்றும் நம்மால், ‘ஆமாம்’ சொல்ல வைக்கும் பெண்கள் மீதான அடக்குமுறைகளை, சமூக அவலங்களை நகைச்சுவையாகக் கூறி கைதட்ட வைக்கின்றனர்.

‘ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஆண் முக்கியமில்லை..’, ‘கனவுகளுக்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்காதே’ போன்ற வசனங்களும் கதாபாத்திரங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. காவல் அதிகாரி, ஃபூல் குமாரிக்கு அடைக்கலம் தரும் பெண் தேநீர் வியாபாரி, ஜெயா ஆகியோரின் கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம் சிறப்பு.

நடிகர்கள் ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ் (தீபக்), நிதான்ஷி கோயல் (ஃபூல் குமாரி), பிரதீபா ரண்டா (ஜெயா) உள்ளிட்டோரின் அழகான நடிப்பு, இது திரைப்படமா இல்லை திரைக்குள் யாராவது நடமாடுகிறார்களா என எண்ண வைத்துவிடுகிறது. வட மாநில கிராமம், வெள்ளந்தியான மனிதர்கள், ரயில் நிலையம், காவல் நிலையம் என நிதானமான ஒளிப்பதிவு திரை அனுபவத்தைக் கொடுத்து வெற்றிபெற்றிருக்கிறது.

நம்முடன் இருப்பவர்களின் விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் பின்பே நாம் என்பதை உணர வைத்த இயக்குநருக்கு பாராட்டுகள். லாபடா லேடீஸ் என்றால் தொலைந்த பெண்கள் என அர்த்தம். படத்தில் பெண்கள் தொலைந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் வேண்டுதலும் கனவும் தொலையவில்லை.

சுவாரஸ்யமாக, இப்படத்தை நடிகர் அமீர் கான் தயாரித்துள்ளார். அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ்தான் படத்தின் இயக்குநர். பிரிவிலும் ஒருவரின் கனவுகளுக்கு இன்னொருவர் இடமளித்திருப்பது எப்படி ஆச்சரியமோ, லாபதா லேடீஸ் படமும் அந்த ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

லாபதா லேடீஸ் (laapataa ladies) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com