பாதிக்கப்பட்டது பேய்களா? ரசிகர்களா? சப்தம் - திரை விமர்சனம்!

பாதிக்கப்பட்டது பேய்களா? ரசிகர்களா? சப்தம் - திரை விமர்சனம்!

சப்தம் திரை விமர்சனம்...
Published on
சப்தம் - திரை விமர்சனம்(2.5 / 5)

நடிகர் ஆதி நடிப்பில் உருவான சப்தம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதை நாயகனான ரூபன் (ஆதி) மும்பையில் ஆவிகளைச் சப்தங்கள் மூலம் கண்டறியும் நிபுணராக இருக்கிறார். அங்கு ஒவ்வொருவரின் அமானுஷ்ய பிரச்னைகளைச் சரிசெய்துகொண்டிருந்தவருக்கு, மூணாரில் மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் மர்மமான முறைகளில் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். அதற்குப் பின் ஆவிகள் உள்ளவனா என சோதனை செய்ய அழைப்பு வருகிறது.

உண்மையில், இவை சாதாரண தற்கொலைகளா இல்லை இதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கின்றனவா என கல்லூரி நிர்வாகம் திணறும்போது நாயகன் கல்லூரிக்குள் வந்து சப்தங்கள் மூலம் எங்காவது ஆவிகள் இருக்கின்றனவா என சோதனை செய்கிறார். அடுத்தடுத்து நிகழும் தற்கொலைகள் நிறுத்தப்பட்டதா? உண்மையில் இதற்குப் பின் இருக்கும் அமானுஷ்யம் என்ன என்பதே மீதிக்கதை.

ஈரம் படத்தை பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. காதல் கதையாக ஆரம்பித்து பின் திகில் பின்னணியில் கதை நகர, நகர பரபரப்பான படமாக அமைந்ததுடன் உணர்ப்பூர்வமாகவும் இருந்தது. அப்படத்தை இயக்கிய இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி கூட்டணி மீண்டும் ஹாரர் படத்தில் இணைகின்றனர் என்கிற செய்தி வந்ததும் ‘சப்தம்’ படத்தின் மீதான ஆவல் உருவானது.

Dotcom

ஆனால், படம் எதிர்பார்த்தபடி இருக்கிறதா? முதலில் இயக்குநர் அறிவழகனுக்கு பாராட்டுகள். காரணம், தமிழ் சினிமா ரசிகர்களுக்கான படமாக இது இருந்தாலும் உருவாக்கத்தில் அட்டகாசமான தரத்தைக் கொடுத்திருக்கின்றனர். அறிமுகக் காட்சியிலிருந்து இறுதிவரை மேக்கிங் தனித்து தெரிகிறது.

சில காட்சிகளில் ஒலியமைப்பு சிறப்பாகக் கைகொடுத்து படத்தின் கதையோட்டத்திற்கு வலு சேர்க்கின்றன. நாயகியான லட்சுமி மேனன் தூக்கத்தில் தன் விரல்களைக் காற்றில் அசைப்பது போன்ற காட்சிகள் திகில் உணர்வைக் கொடுத்தன.

பேய்க்கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்றாலும் ரசிகர்களுக்கு ’இப்படியும் இருக்கலாம் இல்லையா’? என ஓரளவு நம்பும்படியான கதையையே படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

ஆனால், கதையாகவும் திரைக்கதையாகவும் ஏமாற்றம்தான். படத்தில் உணர்வுப்பூர்வமான இடங்கள் இருந்தும் அவை சரியாகக் கடத்தப்படவில்லை. இரண்டாம் பாதியில் சிம்ரன் காட்சிகள் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தலாம் என நினைத்தால்... நினைத்தால்... நினைக்க மட்டும்தான் முடிகிறது. மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கதைக்குள் கொண்டு வந்து எமோஷன்களை உருவாக்க இயக்குநர் முயன்றும் அது சரியாகக் கைகொடுக்கவில்லை.

நடிகர் ஆதி தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு பெரிதாக மெனக்கெடாமல் தேவையான நடிப்பையே வழங்கியிருக்கிறார். சிம்ரன், லட்சுமி மேனன், லைலா உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கின்றனர். எம்.எஸ். பாஸ்கர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை இன்னும் படத்திற்குள் கொண்டுவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.

Dotcom

இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசை மற்றும் ஒலியமைப்பு பொறியாளர்களின் பணி நன்றாக இருந்தன. ஆனால், அதிக ஒலியமைப்பு கொண்ட திரையரங்கில் படத்தைப் பார்த்தால் ‘காது வலிக்கிறது’ என ரசிகர்கள் புலம்ப வாய்ப்புகள் உண்டு. ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாதன் மற்றும் கலை இயக்குநர் மனோஜ் குமாருக்கு பெயர் சொல்லக்கூடிய படமாகவே அமைந்துள்ளது.

மேக்கிங்கில் மிகுந்த கவனம் செலுத்திய இயக்குநர் கதையாகவும் சில தருணங்களைக் கொடுத்திருந்தால் நல்லதொரு திரைப்படமாகவே சப்தம் உருவாகியிருக்கும். முன்பே சொன்னதுபோல் எமோஷனல் காட்சிகள் பாதிப்பை ஏற்படுத்தாது பெரிய பலவீனம். மொத்தத்தில் எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்க்கக்கூடிய படமாகவே ஒலிக்கிறது இவர்களின் சப்தம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com