கேலிகளைத் தாண்டி வென்றாரா சூர்யா சேதுபதி? பீனிக்ஸ் திரை விமர்சனம்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் 'அனல் அரசு' இயக்கத்தில் வெளியாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது?
பீனிக்ஸ்
பீனிக்ஸ்
Published on
பீனிக்ஸ் (3 / 5)

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் வெளியாகியுள்ள பீனிக்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது? 

ஆரம்பத்திலிருந்தே அறிமுக நாயகனான சூர்யா மீது சமூக வலைதளங்களில் ஒரு வகை எதிர்மறையான கருத்துக்கள் பரவலாகி இருக்கின்றன. அதற்கு அவரது பேச்சுக்களை முக்கியமான காரணமாகச் சொல்லலாம். ஒரு நடிகரின் மகனாக இருந்து எளிதாக கதாநாயகனாகிவிட்டதாகவும், தனது பெயரில் தனது தந்தை பெயரை சேர்க்காததால் மட்டும், இது சுயமுன்னேற்றம் கிடையாது எனவும் பல எதிர்மறைக் கருத்துக்கள் கொஞ்சம் தூக்கலாகவே காணக்கிடக்கின்றன.

பீனிக்ஸ் திரைப்படத்தில் சூர்யா சேதுபதி
பீனிக்ஸ் திரைப்படத்தில் சூர்யா சேதுபதி

அதிலும், படம் வெளியாவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் அவர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விடியோ ஒன்று வைரலாகி அவரது Attitude குறித்தும்கூட பல Trollகள், Meme-கள் கொட்டிக்கிடப்பதைக் காணலாம். முதல் படம் வெளியாவதற்கு முன்னரே இவ்வளவு எதிர்மறை பிம்பத்தை சுமக்க ஆரம்பித்திருக்கும் சூர்யா சேதுபதி, படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதைப் பார்ப்பதற்காகவே இந்த படத்தின் மீது கொஞ்சம் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்புகள் உருவாகின. அந்த நெகட்டிவிட்டியைத் தகர்த்தெரிந்தாரா? அல்லது தத்தளிக்கிறாரா? 

முதலில் படத்தின் கதைக்களம் என்னவென்றால்… ஆளும் கட்சி MLA ஒருவரை 17 வயது சிறுவன் ஒருவன் பொதுமக்கள் முன்னிலையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்கிறான். காவல்துறை அவனைக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க, அந்த MLAவின் குடும்பமும், கட்சியும் அந்தச் சிறுவனை எப்படியாவது கொன்று பழிதீர்க்கத் துடிக்கிறார்கள். அதற்கு அவர்கள் செய்யும் முயற்சியும், சிறுவனின் கொடூரச் செயலுக்கான காரணமுமே பீனிக்ஸ் முழு நீளத் திரைப்படமாக திரையில் விரிகிறது! 

பீனிக்ஸ் திரைப்படத்தில் சூர்யா சேதுபதி
பீனிக்ஸ் திரைப்படத்தில் சூர்யா சேதுபதி

முதலில் இந்தப் படத்தில் பேசப்படவேண்டியது, அறிமுக நாயகனான சூர்யா குறித்துதான். உண்மையில், எதிர்பார்ப்புகளைத் தாண்டி, எந்தவித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாத நடிப்பையே சூர்யா வழங்கியுள்ளார். முதல்பாதி  முழுக்க, Slow motion சண்டைகள் மட்டுமே அவரது முக்கால்வாசி வேலையாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அவரது கதாபாத்திரத்தை சரிவரச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முதல்பாதியில் சில இடங்களில் ஹீரோவுக்கான Build up-கள் தூக்கலாக இருப்பதாகத் தோன்றலாம். யாரென்றே தெரியாத இந்த ஹீரோவிற்கு அவ்வளவு மாஸ்-கள் தேவையே என்றே தோன்றும்! ஆனால் முதலில் சரியாக ஒட்டாத காட்சிகள், நாயகனின் கதை புரிந்த பிறகு நன்றாகவே இருந்தன. இரண்டாம் பாதியில் வரும் சண்டைக் காட்சிகளில் சூர்யா ரசிக்கும்படியாக காட்டப்பட்டுள்ளார். 

பீனிக்ஸ் திரைப்படத்தின் சண்டைக் காட்சி!
பீனிக்ஸ் திரைப்படத்தின் சண்டைக் காட்சி!

அடுத்ததாக, இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘அனல்’ அரசு! கதை எனப் பார்க்கும்போது, இது மிகவும் சாதாரணமான, பழி வாங்கும் கதைதான். புதிதான கருவோ, திரைக்கதை அமைப்போ இல்லாவிட்டாலும், முதல் படத்தை தொந்தரவு தருமளவிலான தொய்வுகள் இல்லாமல் அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். முதல்பாதி பெரிதாக எந்த தாக்கத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும், இரண்டாம் பாதியை விறுவிறுவென நகர்த்தியிருப்பது சிறப்பு. அறிமுக நடிகரிடமும் சரி, அறிந்த நடிகர்களிடமும் சரி, தேவையான நடிப்பை சிறப்பாகப் பெற்றுள்ளார். காட்சிகள் உருவாக்கத்திலும் தேர்ச்சி பெறும் வகையில் நினைத்ததை திரையில் காட்டியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். 

எழுத்தாளராக, சில இடங்களில் வரும் வசனங்கள் சற்று தொந்தரவு செய்தாலும், அதைப் பெரிய குறையாக எடுத்துக்கொள்ள முடியாது. Build up வசனங்களும், “ஜெயிக்கிறது பிரச்னையா, இல்ல நாங்க ஜெயிக்கிறதுதான் பிரச்னையா” எனும் வசனங்கள் கதைக்கு கச்சிதமாகப் பொருந்தவில்லையோ என்ற தயக்கங்கள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் பாதியில் சிறுவனின் கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறுவதுபோல் காட்டப்படுகிறது, ஆனால் இரண்டாம் பாதியில் சொல்லப்பட்ட கதையை வைத்துப் பார்த்தால், இதை எளிதாகக் கண்டுபிடித்திருக்கலாமே என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற சின்னச் சின்ன Speed Breakerகளை கமெர்ஷியல் கண்கொண்டு தவிர்த்துவிட்டால், படம் வேகமாக நகர்ந்துவிடுகிறது.

பீனிக்ஸ் படத்தின் சண்டைக் காட்சி!
பீனிக்ஸ் படத்தின் சண்டைக் காட்சி!

முக்கியமாக சண்டைக் காட்சிகளைப் பற்றி சொல்லத்தேவையில்லை. அனல் அரசு படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு பஞ்சமிருக்குமா? குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் நன்றாக படமாக்கப்பட்டுள்ளன. ஹீரோவைக் காட்டிய விதமும், சண்டைப் பயிற்சியும் நல்ல அனுபவத்தைத் தருவதாகவே அமைத்திருந்தன. 

அடுத்ததாக படத்தில் நடித்திருக்கும் மீதக் கதாப்பாத்திரங்களில் First Rank, நடிகை தேவதர்ஷிணிக்கே! ஹீரோவின் அம்மாவாக வரும் அவரது நடிப்பு, படத்தோடு ஒன்றத் தயங்குபவர்களைக் கூட உள்ளே இழுத்துப்போட்டுவிடுமளவில் இருப்பது மிகச் சிறப்பு. முக்கால்வாசி நேரம் அழுதுகொண்டிருந்தாலும், அந்த அழுகையும், எப்போதும் படத்தில் பார்க்கும் அழுகையாக இல்லாமல், உண்மையிலேயே குழந்தையை சிறைக்குத் தொலைத்த அம்மாவாக புலம்பும் காட்சிகளில் பாராட்ட வைக்கிறார். அடுத்ததாக வில்லியாக வலம் வந்த வரலட்சுமியும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஆடுகளம் நரேன், சம்பத் ராஜ் உள்ளிட்ட மீதக் கதாபாத்திரங்களுக்கு பெரிய நேரம் தரப்படவில்லை என்றாலும், ஏற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். 

பீனிக்ஸ் திரைப்படத்தில் தேவதர்ஷினி மற்றும் வரலட்சுமி
பீனிக்ஸ் திரைப்படத்தில் தேவதர்ஷினி மற்றும் வரலட்சுமி

ஸ்பெஷல் ட்ரீட்டாக, படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜும் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றிருக்கிறார். நடிப்பும், வசனங்களும் மிக இயல்பான முறையிலேயே வெளிப்படுத்தி கதாபாத்திரமாக மிளிரிகிறார். ஒளிப்பதிவிலும் அதே சிறப்பை வழங்கியுள்ளார். 

படத்தின் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் பாடல்கள் நன்றாக இருந்தாலும், மனதில் நிற்கும்படியாக இல்லை. ஆனால் அந்தக் குறையை க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் வரும் பின்னணி இசையில் சரிகட்டிவிடுகிறார். 

பீனிக்ஸ் படத்தின் காட்சி!
பீனிக்ஸ் படத்தின் காட்சி!

மொத்தமாக பார்த்தால் தனது முதல் படத்திலேயே, ஒரு கமெர்ஷியல், ஆக்சன் படத்திற்குத் தேவையான விஷியங்களையும் கொடுத்து இயக்குநர் அனல் அரசு கவர்ந்திருக்கிறார். நாயகனாக அறிமுகமாகியுள்ள சூர்யா சேதுபதிக்கும் இது நல்ல துவக்கமாகவே அமைந்துள்ளது. சமூக வலைதளக் கருத்துக்களைத் தாண்டி, நல்ல கதைகளைத் தேர்வு செய்து, நடிப்பிலும், செய்தியாளர் சந்திப்புப் பேச்சுகளிலும் கவனம் செலுத்தினால், அடுத்த கட்ட திரைப் பயணத்திற்கு அவர் தயாராகிவிடுவார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com