ரவுடிகளும், அடிமைகளும்! ரெட்ரோ அல்ல, கிங்டம்!  -திரை விமர்சனம்!

ரவுடிகளும், அடிமைகளும்! ரெட்ரோ அல்ல, கிங்டம்! -திரை விமர்சனம்!

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் பரவலான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள திரைப்படம் கிங்டம் எப்படி இருக்கிறது?
Published on
கிங்டம்(2 / 5)

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கௌதம் தின்னனுரி இயக்கத்தில் பரவலான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள திரைப்படம் கிங்டம் எப்படி இருக்கிறது? 

கிங்டத்தின் கதைக்களம் என்னவென்றால்...

படத்தின் நாயகன் சூரி, சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிய தனது அண்ணன் சிவாவைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அண்ணனைக் கண்டுபிடிக்க வழியே இல்லை என்ற நிலையில் இருக்கும்போது, சூரி மீது ஆர்வம் காட்டும் மேல் அதிகாரி ஒருவர், அவனை ரகசிய உளவாளியாக ஒரு வேலையைச் செய்துமுடித்தால், அவனது அண்ணனைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கூறுகிறார். அதற்கு "OK" சொல்லும் சூரி, அந்த வேலையை முடித்தாரா? அண்ணனைக் கண்டுபிடித்தாரா? என்பதை நோக்கியே கதை மொத்தமும் நகர்கிறது! 

கிங்டம் படத்தில் ஒரு காட்சி
கிங்டம் படத்தில் ஒரு காட்சி

மேலே சொல்லிய சுருக்கம்தான் கதையின் உருவம் என்றாலும் அதனுள் சில சுவாரசியங்களைப் புகுத்த முயன்றுள்ளார் இயக்குநரும் எழுத்தாளருமான கௌதம்! அதைப்பற்றி சில நிமிடத்தில் பார்க்கலாம்! அதற்கு முன்..! 

படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரலில் ஹீரோவாக திரையில் வந்தவர், இப்போதுதான் மீண்டும் திரையில் முகம் காட்டியிருக்கிறார். நடுவில் கல்கி திரைப்படத்தில் அர்ஜூனனாக கேமியோ கொடுத்திருந்தாலும், ஹீரோவாக, முழு நீளத்தில் இப்போதுதான் வந்திருக்கிறார். 

கிங்டம் படத்தில் ஒரு காட்சி
கிங்டம் படத்தில் ஒரு காட்சி

படத்தின் துவக்கத்திலிருந்து தனது கதாபாத்திரத்தை மிக அழகாக ஏற்று நடித்திருக்கிறார். “எந்த ஆக்சனும் எடுக்க முடியாத நிலை”யில் இருக்கும் கான்ஸ்டபிளாகவும் சரி, “யாரா இருந்தாலும் வெட்டுவேன்”என ரவுடியாக மாறும்வரையும் சரி கச்சிதமாகப் பொருந்தி திரையில் மிளிர்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

அவருக்கு அடுத்ததாக கதாநாயகி எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை, ஏனென்றால் அவருக்கு கொடுக்கப்பட்ட நேரமும் குறைவு, முக்கியத்துவமும் குறைவு! ஆனால் வந்த நேரத்தில் கதை கேட்கும் இடங்களை நிரப்பியிருக்கிறார். 

அடுத்ததாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐய்யப்பா பி. சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட அனைவருமே தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். வில்லனாக வலம் வந்த வெங்கிடேஷ் வி.பி. மிகக் கொடூர வில்லனாக மிரட்டுகிறார். சில முகம் தெரிந்த நடிகர்கள் வந்தாலும், பலர் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் இல்லாதவர்கள்தான்! அதனால் "நெஸ்ட்டு" என நகர்ந்துவிடலாம்!

முதல்பாதியில் ஒரு 30 நிமிடம் விருவிருப்பாகவும், கதைக்கு நேர்மையான நடிப்பு மற்றும் திரைக்கதையாலும் படம் நல்ல தளத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது. ஆனால் நகர நகர கொஞ்சம் சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடுகிறது. அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கடுப்பு, கொஞ்சம் கொட்டாவி எல்லாம் வந்தாலும், ஓப்பனாகச் சொல்லப்போனால், தூக்கம்வரும் அளவுக்கோ, உட்கார முடியாத அளவுக்கோ மோசமில்லை! இதைச் சொல்லக்காரணம், சமீபத்தில் அப்படியான படங்களை அடிக்கடி சந்தித்துக்கொண்டிருக்கிறோம்! இந்த சலிப்பிற்கு ஒட்டாத வசனங்களையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்! அது வழக்கமான மொழி பெயர்ப்புக் குறைதான் என்றாலும், அந்தக் குறையைக் கொஞ்சம் குறைவாகப் பார்க்க முடிந்ததை ஒரு முன்னேற்றமாகக் கருதலாம். மற்ற டப்பிங் படங்களை விட குறைவான இடங்களில் மட்டும்தான் வசனங்கள் கடுப்பேற்றியது. முக்கியமாக, இந்தியாவிலிருந்து தஞ்சம் புகுந்த மக்களை இலங்கைத் தமிழர்கள் அடிமைகளாக வைத்திருப்பதான கதையம்சம், தேவையற்ற ஒன்றாகவே பட்டது!

கிங்டம் படத்தில் ஒரு காட்சி
கிங்டம் படத்தில் ஒரு காட்சி

திரைக்கதையும், இந்தக் கதைக்கு என்ன தேவையோ அதை நல்லபடியாகச் செய்துள்ளது. பிரச்னை என்னவென்றால், அந்தக் கதையே “ஓக்கே”வான கதைதான் என்பதுதான். இந்த ஓக்கேவான கதைக்குத் தேவையான விஷயங்களையும், ஹீரோவுக்கான மாஸ் காட்சிகளையும் முடிந்த அளவில் கொடுத்து தன் வேலையைச் சரியாகச் செய்துள்ளார் எழுத்தாளர். ஆனாலும் சில காட்சிகளில் போர் அடிப்பதைத் தடுக்க முடிவதில்லை. உணர்வுப்பூர்வமான காட்சிகள் அழுத்தமானதாக இல்லை என்பதால் அந்த இடத்திலும் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன நடக்கும் எனப் பல இடங்கள் ஊகிக்கும்படியாக இருப்பதால், கொஞ்சம் பொறுமை அவசியமான ஒன்றுதான். இறுதியில் "அந்தக் குழந்தையே நீங்கதான் சார்" என்ற பழைய டெக்னிக்கைப் பயன்படுத்தியிருந்தாலும் அதை அனிருத் மன்னிக்கவைத்துவிடுகிறார். தமிழில் சூரியா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் சாயலும் இருப்பதால் அதுவும் கொஞ்சம் கவனம் கொடுக்கவேண்டிய ஒன்றாக இருக்கிறது. Same Same But Different!

கிங்டம் படத்தில் ஒரு காட்சி
கிங்டம் படத்தில் ஒரு காட்சி

ஒளிப்பதிவாளர்கள் கிரிஷ் கங்காதரன், ஜோமோன் டி ஜான் இருவரும் நல்ல வேலைபாட்டைக் கொடுத்துள்ளனர். சில காட்சிகளில் “கொஞ்சம் நல்லா இருந்துருக்கலாம்” எனத் தோன்றினாலும், சண்டைக் காட்சிகள் அனைத்திலும் சிறப்பான வேலையைச் செய்துள்ளனர். சண்டைக்காட்சிகளையும் மிக நன்றாகவே உருவாக்கியுள்ளனர். 

முக்கியமாக இந்தப் படத்திற்கு உதவிய இன்னொரு மிக முக்கியப்புள்ளி, இசையமைப்பாளர் அனிருத்! பல காட்சிகளுக்கு இவரின் பின்னணி இசை மிக முக்கிய பங்காற்றியுள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தனித்துத் தெரிய அவரின் இசை அமைப்பிற்குதான் முக்கிய பங்கு! 

மொத்தமாகப் பார்க்கையில், இது புதுமையான கதை இல்லை என்பதாலும், பலமுறை நாம் பார்த்துப் பழகிய, சில சமயம் பார்த்து பொறுமையிழந்த கதைதான் என்பதாலும், ஒருமுறை பார்க்கலாம் என்ற எண்ணத்தைத் தரும் படமாக வெளிவந்துள்ளது இந்த கிங்டம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com