ரஜனி, அஜீத் பற்றி தவறான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்ட நடிகை!

ஐக்கிய நாடுகள்  மேம்பாட்டு திட்ட  தூதுவராக  இந்திய வம்சாவளி நடிகை பத்மா லட்சுமி  நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜனி, அஜீத் பற்றி தவறான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்ட நடிகை!


ஐக்கிய  நாடுகள்  தூதுவராக பதவி பெற்றவர்

ஐக்கிய நாடுகள்  மேம்பாட்டு திட்ட  தூதுவராக  இந்திய வம்சாவளி நடிகை பத்மா லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 'உலகில் பல்வேறு நாடுகளில் பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். சில நாடுகள் வறுமையை ஒழித்து விட்டதாக  கூறிக் கொண்டாலும் பெண்களுக்குரிய சமத்துவத்தை அளிப்பதில் பின் தங்கியே உள்ளன. இதனால் பாதிக்கப்படும் பெண்களின்  துன்பங்களை  நீக்க பாடுபடுவேன்' என்கிறார் பத்மா லட்சுமி. 

தென்னிந்திய  திரை உலகத்தை  பாராட்டும் நடிகை

ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலிருந்து  2009- ஆம் ஆண்டு கன்னடத்தில் 'உல்லாசா உற்சாகா'  படத்தின் மூலம் திரையுலகத்திற்கு வந்த யாமி கவுதம், அண்மையில் நடித்து வெளியான 'உரி - சர்ஜிகல்  ஸ்டிரைக்'  இந்தி படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார். இதனால் நிறைய வாய்ப்புகள் வருவதால், எந்த மொழியாக இருந்தாலும் தனக்கேற்ற கதை கிடைத்தால் நடிக்க தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும், 'தென்னிந்திய திரையுலகத்தினர் நேரத்திற்கு  முக்கியத்துவம்  கொடுத்து  குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடிப்பது  எனக்குப் பிடித்திருக்கிறது' என்று  கூறுகிறார்  யாமி கவுதம்.

பிரச்னைக்குள்ளான இஷா  கோபிகர்

1998- ம்  ஆண்டு 'காதல் கவிதை'  படத்தின் மூலம் தமிழில்  அறிமுகமான இஷா கோபிகர்,  20 ஆண்டுகளுக்குப் பின் 'இன்று நேற்று நாளை' என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை  இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கத்தில்  உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயனுடன்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அரவிந்தசாமியுடன்,  நடித்த  'என் சுவாச காற்றே'  வெற்றிக்குப் பின் இஷா கோபிகர், கடைசியாக விஜய் காந்தின்  'நரசிம்மா'  படத்தில்  நடித்தார். தற்போது மீண்டும் தமிழில் நடிக்க வந்த இஷா  கோபிகர்,  ரஜனிகாந்த்,  அஜீத் ஆகியோரைப் பற்றி  தவறான தகவல்களை  தன் ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட, ரஜனி மற்றும்  அஜித்  ரசிகர்களின்  கடுமையான கண்டனத்திற்குள்ளாகியுள்ளார்.

லண்டன்  திரைப்பட  விழாவை   தொடங்கும்  வாய்ப்பு

லண்டனில்  இயங்கும்  ஆசிய  திரைப்பட விழா  தொடங்கி  21 - ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி,  இந்த  ஆண்டு  மார்ச் 28-ஆம் தேதி தொடங்கிய திரைப்பட  விழாவுக்கு தலைமை  ஏற்கும்  வாய்ப்பு  முன்னாள்  பாலிவுட் நடிகை ஜீனத் அமனுக்கு கிடைத்துள்ளது.  1970- 80 களில் 'ஹரே கிருஷ்ணா ஹரே ராமா', 'குர்பானி',  'சத்தியம்  சிவம் சுந்தரம்'  போன்ற வெற்றிப் படங்களில் தன்னுடைய  உடை  மற்றும் புதுமையான  கதாபாத்திரங்கள்  மூலம்  ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற ஜீனத் அமனை கௌரவிக்கும் பொருட்டு இந்த வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறதாம்.

22  ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்த  ஜோடி


1988-ஆம் ஆண்டு  முதன்முதலாக  'கத்ரோன்  கே கிலாடி'  என்ற படத்தில் சஞ்சய் தத்துடன் ஜோடி சேர்ந்த மாதுரி தீட்சித்,  கடைசியாக 1997-ஆம் ஆண்டு 'மஹந்தா' என்ற படத்தில் அவருடன்  ஜோடியாக  நடித்ததோடு சரி, பிறகு இருவரும் சேர்ந்து  நடிக்கவில்லை.  இடையில்  இருவரும்  சேர்ந்து நடித்த 'கல்நாய்க்', 'சாஜன்',  'தனேதார்' போன்ற படங்கள் பெரும் வெற்றிப் பெற்று இன்றளவும் பேசப்படுகின்றன.  இப்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு  'கலங்க்' என்ற படத்தில் இருவரும்  ஒன்றாக நடிக்கின்றனர்.  இது இவர்கள்  இருவரும் ஜோடியாக நடிக்கும் பத்தாவது  படம் என்பதோடு,  ஸ்ரீதேவி  இறந்துவிட்டதால் அவருக்குப் பதில் மாதுரி தீட்சித் ஒப்பந்தம்  செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பின் முதல் படம்

மூன்றாண்டுகளுக்கு முன் இந்தியில் 'கங்கா ஜல்'  என்ற படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா. பின்னர் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' மற்றும் தொடர்களிலும்  நடிக்கச்  சென்று விட்டார்.  மீண்டும்  'தி ஸ்கை  இஸ் தி  பிங்க்' என்ற படத்தில் நடிப்பதற்காக மும்பை திரும்பிய  பிரியங்கா, இடையில் திருமணம் செய்து கொண்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை  முடித்துக் கொடுத்துள்ளார். 'இன்னும் ஒரே ஒரு பாடல்   காட்சியை  படமாக்கிவிட்டால் 'தி ஸ்கை  இஸ் தி பிங்க்' வரும் அக்.11-ஆம் தேதி, பிரியங்காவின் திருமணத்திற்குப் பின் வெளியாகும் முதல் படம் என்ற சிறப்பை பெறும் என்று இயக்குநர் சோனாலி போஸ்' கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com