கமல் 62!

1959-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் ஆன சமயத்திலேயே நடிப்பு
கமல் 62!

தமிழர்களைப் பொருத்தவரையில் திரைப்படங்கள் வாழ்வின் ஒரு அங்கம். சந்தோஷம், துக்கம் என எது மிகுந்தாலும் திரையரங்குகளுக்குச் சென்று தங்களை கரைத்துக் கொள்வதை விரும்புவர்கள். சினிமாவையும் அதன் நாயகர்களையும் கொண்டாடி மகிழும் ஒரு கலாச்சாரம் பல வருடங்களாக இங்குள்ளது. ஏராளமான ரசிகர்கள் முன்னனி நாயகர்களை தங்கள் மனத்துக்கு நெருக்கமாக உணர்கிறார்கள். இத்தகைய ரசிகர்கள்தான் திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்து மகிழ்பவர்கள். ரசித்துப் பார்த்த படங்களைப் பற்றி அதிகம் பேசுபவர்கள். சமீப காலமாக இணையதளங்களில் விமரிசனங்களை எழுதிக் குவிப்பவர்கள். தமிழக மக்களின் மனங்களில் நாயக வழிபாடு என்பது வெகுகாலமாகவே தொடர்ந்து வருகிறது. நூற்றாண்டு கால திரை வரலாற்றின் 50 ஆண்டுகளை கமல்ஹாசன் என்ற பெயரை இணைக்காமல் ஒருவராலும் எழுதிவிட முடியாது என்பது உண்மையிலும் உண்மை. பேச்சில், இயக்கத்தில், மூச்சில் என அனைத்திலும் சினிமா என்று வாழும் ஒருவரை பார்ப்பது அரிது. சினிமாவுக்கென தன்னை முழுவதுமாக ஒப்புவித்துக் கொண்ட அற்புத நடிகர் கமல்ஹாசன். உலக நாயகன் என்று ஒரே மனதாக அனைவரும் போற்றும் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு 61 வயதாகிறது என்றால் நம்புவது கடினம் தான்.

குழந்தை நட்சத்திரமாகத் திரையில் தோன்றிய காலகட்டத்திலிருந்து இன்று வரை புகழின் உச்சத்தில் இருக்கும் ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே. 80-களில் பெண்கள் மாப்பிள்ளை யார் மாதிரி பார்க்க வேண்டும் என்ற கேட்கப்பட்ட கேள்விக்கு பெரும்பாலான பெண்கள் கமலஹாசனைப் போல் என்று தங்களுக்கு பிரியமான நடிகரின் பெயரைத் தான் சொல்வார்கள். தன்னுடைய பன்முகத் திறமைகளில் முதன்மையாக நடிகன் என்று அடையாளப்படுவதையே விரும்புகிறவர் கமல். தமிழக முதல்வரின் உடல்நலக் குறைவு, சமீபத்திய விபத்து, சில வாரங்களுக்கு முன்னால் நடிகை கவுதமியுடனான பிரிவு போன்ற காரணங்களால் கமல் இந்ந்த வருடம் தன் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடவில்லை. ஆனாலும் உலகளாவிய அவரது ரசிகர்கள் தங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர்களில் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தவாறு இருக்கின்றனர். சினிமாவுக்கு தனி இலக்கணம் எழுதவேண்டும் எனில் அது கமல்ஹாசனிமிருந்து தான் தொடங்க வேண்டும். நம் காலத்து நாயகனான கமல்ஹாசனைப் பற்றி சில சுவாரயஸ்யமான தகவல்கள் இதோ :

1959-ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகம் ஆன சமயத்திலேயே நடிப்பு தான் தனக்கு எல்லாம் என்று உணர்ந்து கொண்டான் சிறுவன் கமல். அந்த சின்னஞ்சிறு வயதிலேயே தன் எதிர்காலத்தை முடிவு செய்த பக்குவம் ஆச்சரியம் தருவது ஆகும். சினிமாவுக்காக தன்னை தயார்படுத்துக் கொண்டவர் அவர். தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்புக்கான தங்கப்பதக்கம் வாங்கினார். அதன் பின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கமல் பெற்ற விருதுகளும் பரிசுகளும் பாராட்டுக்களும் வேறு எவரும் எளிதில் அடைய முடியாத சிகரங்கள். 17 முறை ஃப்லிம் ஃபேர் விருது வாங்கியவர் என்ற தனிப்பெருமையும் அவருக்கு உண்டு.

இந்தியத் திரையுலகில் ஆழமாக தன் புகழைப் பதிய வைத்த கமல்ஹாசன், தன் திரை வாழ்க்கையின் ஆரம்பக் காலகட்டத்தில் மலையாளத் திரைப்படங்களில் தான் அதிகம் நடித்தார். சிறந்த நடிகர் என்று நற்பெயரையும் விரைவில் பெற்றார். கமல் இதுவரை நடித்துள்ள 200 படங்களில், நாற்பது படங்கள் மலையாள மொழிப்படங்கள் ஆகும். இந்தியா சினிமாவின் நிகரற்ற கலைஞனாக கமலை முன்னிலைப்படுத்திய மலையாள இயக்குனர்களையும் ரசிகர்களையும் இதற்காக பாராட்டியே ஆகவேண்டும். கற்றலில் ஆர்வமுள்ள கமல், மலையாள படங்களில் இயல்பான நடிப்பின் மூலம் தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டார் எனலாம்.

கமல்ஹாசன் தன்னையே உருக்கி தன்னை உருவாக்கிக் கொண்ட ஒரு மாயக் கலைஞன் என்றால் மிகையில்லை. ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருடைய பரீட்சார்த்த முயற்சிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. கமலையும் புது முயற்சிகளையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. தேவைப்படும் எனில் எத்தகைய ஆபத்தான காட்சியாக இருந்தாலும் துணிச்சலாக ஏற்று நடிப்பார். சில சமயம் அவருடைய புதுமையான முயற்சிகளுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும். ஆனால் அதற்கெல்லாம் சோர்ந்து விடுபவர் அவரில்லை. தன்னுடைய நூறாவது படமான ராஜ பார்வையை அவரே தயாரித்து நடித்தார். அந்தப் படத்தில் பார்வையற்றவராக மிகச் சிறப்பாக நடித்ததை திரையுலகினரே அதிசயித்தனர். நூறாவது படத்தில் கமலைத் தவிர இத்தகைய கதாபாத்திரத்தை வேறு யார் ஏற்று நடிக்க முடியும் என்று பத்திரிகைகள் பாராட்டின. திரை ஆர்வலகர்களும் விமரிசகர்களும் இப்படத்தை பெரிதாகப் பாராட்டினாலும் வசூலில் இப்படம் தோல்வியைத் தழுவி, கமலுக்கு பெருத்த பண நஷ்டத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்து தான் அந்த நஷ்டத்தை கமலால் சமன் செய்ய முடிந்தது. ஆனாலும் அடுத்த சில வருடங்களிலே அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டார். இருவேடங்களில் ஒன்றில் தன் உருவத்தை குள்ளமாக மாற்றி சர்க்கஸ் கோமாளியாக நடித்தார். ‘உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் தங்கமே ஞானத் தங்கமே’ என்ற பாடலுக்கு உருகாதவர் யாரும் இருக்கமுடியாது. இம்முறை அவர் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைத்தது. ஆகச் சிறந்த புகழும் அவரைத் தேடி வந்தது. கதாபாத்திரத்துக்காக தன் அடையாளத்தை சிதைத்துக் கொள்ளும் அளவுக்கு தன்னை உருமாற்றிக் கொள்பவர் கமல். அன்பே சிவம் திரைப்படத்தில் அவருடைய தோற்றத்தைப் பார்த்தால் அவர் கமல்தானா என்று நம்புவது கடினம். அத்திரைப்படத்தில் விபத்துக்குப் பிறகான காட்சிகளில் தன் உருவ மாற்றத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை வேறொருவராக நிறுவியிருப்பார். வானளாவிய புகழ் இருந்தும், அவர் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? ஒரே காரணம்  சினிமாவை அவர் நேசித்தது, அதிலிருந்து தன்னை வேறாக பார்க்க முடியாமல் இருப்பதுமான அர்பணிப்புணர்வுதான்.

2008-ல் கமலின் பிரம்மாண்டமான திரைப்படமான தசாவதாரம் இசை வெளியீட்டு  நிகழ்ச்சிக்கு நடைப்பெற்றது. அதற்கு சிறப்பு விருந்தினராக தலைமை ஏற்றவர் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி ஆவார். அத்திரைப்படத்தின் இசைத் தகட்டை வெளியிட பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பயணம் செய்து வந்தவர் நடிகர் ஜாக்கி சான். கமல் சானின் ரசிகர். நிகழ்ச்சியில் கமல் பேசுகையில் ஜாக்கி சானை படங்களைப் பார்த்து, ரசித்து அவரைப் போலவே சண்டையிட முயற்சி செய்ததில் 32 எலும்பு முறிவுகள் தனக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். ஜாக்கி சான் பேசும் போது, 'இந்தப் படத்தை இருபது நிமிடங்கள் தான் பார்த்தேன்…வாவ் வாவ். கமலுடன் என்றாவது ஒரு நாள் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் ஆசை ஏற்பட்டுவிட்டது’ என்று மனதாரப் புகழ்ந்தார்.

ஹீரோயிஸம் என்பதை தாண்டி பல திரைப்படங்களில் மனிதத்தைப் போற்றும் கதாபாத்திரங்களில் தோன்றுவதையே பெரிதும் விரும்பினார் கமல். தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மாற்றியமைத்ததே அதற்கு முக்கிய சான்று. கமலின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்து குருதி தானம், கண் தானம், மற்றும் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ள ரசிகர்கள் ஏராளம். எய்ட்ஸ் விழிப்புணர்விலும், மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்ததும் சமூக அக்கறையில் அவருடைய பங்கினை எடுத்துரைக்கும் செயல்கள். யாரும் செய்யத் தயங்கும் காரியங்களை துணிந்து செய்வார். தன் மனத்துக்கு சரியென படுவதை நேர்படப் பேசும் பண்பாளாராகவே எப்போதும் தன்னை முன்நிறுத்துபவர் கமல். பொதுக் காரணங்களுக்காக திரை உலகினர் ஒருங்கிணைந்து நடத்தும் போராட்டங்கள் பலவற்றில் கமல் முன்நின்று வழிநடத்தியுள்ளார். அவ்வகையில் நிழல் வாழ்க்கையில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் நாயகன் என்பதை நிரூபித்துள்ளார் அவர்.

கமல்ஹாசனின் குருவான இயக்குனர் பாலசந்தர் அவருடைய குணாதிசியங்களை பல முறை வியந்து பாராட்டியுள்ளார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் இயக்கத்தில் கமல் 36 படங்களில் நடித்துள்ளார்.  பன்முகத் திறமையாளராக இருந்த போதினும், யாரும் எளிதில் எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்படைக்கும் நடிகர் அவர். உத்தமவில்லன் திரைப்படத்தில் தன்னுடைய குருநாதருடன் நடித்து தன் கனவை நிறைவேற்றியதுடன் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு பெருமை சேர்த்தவர் கமல். சிறிய பெரிய இயக்குனர் என்ற பாகுபாடுகளை அவர் பார்ப்பதில்லை. திரையுலகில் இயங்கி வரும் ஒவ்வொரு இயக்குனருக்கும் கமலை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளூர நிச்சயம் இருக்கும்.  

ரஜினி ரசிகர்கள் கமல் ரசிகர்கள் என எண்பதுகளில் ரசிகர்கள் இரண்டு பகுதிகளாகப் பிளவுபட்டிருந்தார்கள். ஆனால் அவ்விரு உச்ச நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் தம் ஒற்றுமையை பறைசாற்றியவர்கள். அவரவர் வழியில் நடித்து பல வெற்றிப் படங்களை ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்தனர். கமல்ஹாசனுக்கு விருது கிடைக்கும் போதெல்லாம் முதல் வாழ்த்து ரஜினியிடமிருந்தும், ரஜினிக்கு உடல் நலிவுற்ற சமயங்களில் முதல் விசாரிப்பு கமலிடமிருந்தும் வரும். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்ட போது ரஜினி தனது டிவீட்டில் வாழ்த்திய செய்தியிது - எங்கள் தலைமுறையின் நடிகர் திலகம் செவாலியர் அருமை நண்பர் கமல்ஹாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 1979-ல் நினைத்தாலே இனிக்கும் படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவை கமல் எடுத்தார். அதற்கு முக்கிய காரணம் ரஜினி இரண்டாம் நாயகனாக இல்லாமல் தனியாக நடித்து அதிகப் புகழ் பெற வேண்டும் என்பதுதான். இத்தகைய மனம் தான் அவர்கள் இருவரையும் ஒருங்கிணைக்கிறது. கமல் எதிர்ப்பார்த்தற்கும் மேலாகவே ரஜினி வெற்றி பெற, தன்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டிருப்பார் கமல். கமல் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ்த் திரையுலகமே எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம் இவர்கள் இருவரும் மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பதுதான். ரசிகர்களின் கனவு நனவாகுமா என்று அந்த ஆள்வார்பேட்டை ஆண்டவருக்கே வெளிச்சம். ரஜினியுடன் மட்டுமல்லாமல் சக நடிகர்கள் அனைவரிடமும் இணக்கமாக பழகக் கூடியவர் கமல்.

நடிகனுக்கு ஓய்வு எதற்கு என்று இன்றும் வெற்றிச் சித்திரங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பவர் கமல். பாபநாசம், தூங்காவனம் என்ற வித்தியாசமான கதைக்களன்களில் தான் ஏற்று நடிக்கும் பாத்திரத்திற்கு புதிய வெளிச்சத்தைத் தந்து கொண்டிருப்பவர். அவருடைய அடுத்த படமான சபாஷ் நாயுடு பெரும் எதிர்ப்பார்ப்புக்களுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது.

உலக நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com