‘கிழக்கே போகும் ரயில்’ ஹீரோ சுதாகரை ஞாபகமிருக்கா? 

என்ன தான் தெலுங்கில் காமெடியனாக கொடி கட்டிப் பறந்தாலும் ஒரு காலத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே டஃப் ஃபைட் கொடுத்த ஹீரோவாக இருந்தவராயிற்றே அதைப் பற்றிய ஏமாற்றங்கள் ஏதேனும் இல்லாமலா
‘கிழக்கே போகும் ரயில்’ ஹீரோ சுதாகரை ஞாபகமிருக்கா? 

“மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ
வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர் தானோ
சலங்கைகள் தரும் இசை தேன் தானோ”
 

- இந்தப் பாடல் உங்களுக்கு ஞாபகமிருந்தால், நீங்கள் நிச்சயம் சுதாகரை மறந்திருக்க மாட்டீர்கள். தமிழில் கிட்டத்தட்ட 35 படங்கள் ஹீரோவாக நடித்து விட்டு பிறகு தெலுங்குக்குச் சென்றார். அங்கும் சில படங்களில் ஹீரோவாக நடித்து விட்டு பிறகு காமெடிப் பக்கம் ஒதுங்கி விட்டார். ஒதுங்கி விட்டார் என்பதை விட காமெடியில் கலக்கினார் என்றும் சொல்லலாம். கிட்டத்தட்ட 600 திரைப்படங்கள், அதில் முக்கால்வாசியும் காமெடியனாகவே நடித்தார் என்றால் தெலுங்குப் படங்களில் காமெடியில் கலக்கினார் என்று தானே அர்த்தம். தமிழில் பாலய்யா, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்கள், நகைச்சுவைக் காட்சிகளில் தங்களது வாய்ஸ் மாடுலேஷனுக்காக பெயர் போனவர்கள். அதே போல சுதாகரும் கூட அவருடைய வித்யாசமான வாய்ஸ் மாடுலேஷனுக்காக தெலுங்கில் சிறந்த காமெடியனாகக் கொண்டாடப் பட்டார். 90 களின் இறுதியில் சுதாகர் காமெடியனாக நடிக்காத பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களே தெலுங்கில் இல்லை எனும்படியாக சுதாகர் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். 

என்ன தான் தெலுங்கில் காமெடியனாக கொடி கட்டிப் பறந்தாலும் ஒரு காலத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே டஃப் ஃபைட் கொடுத்த ஹீரோவாக இருந்தவராயிற்றே அதைப் பற்றிய ஏமாற்றங்கள் ஏதேனும் இல்லாமலா இருக்கும் என்று சுதாகரிடம் கேட்டதில்... அவர் சொன்ன பதில்கள்;

தமிழில் ஹீரோவாக இருந்த நீங்கள் தெலுங்கில் காமெடியனாக ஆனது ஏன்?

தமிழில் இயக்குனர் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ படம் தான் என்னுடைய அறிமுகப் படம். அந்தப் பட வாய்ப்பு கிடைக்கும் போது, நான் சென்னை ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் படித்து முடித்து விட்டு, பட வாய்ப்புகளுக்காக ஒரு நண்பரைக் காண்பதற்கு சென்னையிலிருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன். அங்கே வைத்து தான் பாரதிராஜா முதன்முதலாக என்னைப் பார்த்து விட்டு கிழக்கே போகும் ரயிலில் நடிக்கச் சொல்லிக் கேட்டார். எனக்கு அந்த வாய்ப்பு ஆனந்த அதிர்ச்சியாக இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். அந்தப் படம் தான் என் அறிமுகப் படம். ராதிகாவுக்கும் அது தான் முதல் படம். நாங்கள் இருவரும் புதுமுகங்களாக இருந்த போதும் அந்தப் படம் அப்போது சூப்பர் டூப்பர் ஹிட். முதல் படம் தந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து பாரதிராஜா என்னையே அவரது படங்கள் சிலவற்றுக்கு நாயகனாக்கினார். அவரது இயக்கத்தில் நான் நடித்தவை அத்தனையும் வெற்றிப் படங்களே! ஆனால் ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததும் அதில் சேரச் சொல்லி அந்தக் கட்சிப் பிரமுகரான ஜேபிஆரிடமிருந்து எனக்கு வற்புறுத்தல் வந்தது. நான் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால் சேர விருப்பமில்லை என்றேன். அதனால் சிலர், நான் நடித்த தமிழ் படங்களின் தயாரிப்பு வேலைகளில் தடைகளை ஏற்படுத்த ஆரம்பித்தனர். ஒரு சில திரைப்படங்கள் பாதியில் நின்றன. சில முழுப்படங்கள் வெளியிடத் தயார் நிலையில் இருந்தும் ஏனோ அவற்றை வெளியிடுவதில் பெரும் சிக்கல் நிலவியது. அப்போது தான் இயக்குனர் பாரதிராஜா, ‘சுதாகர், நீங்கள் ஒரு தெலுங்கு நடிகர், எனவே இந்தப் பிரச்னைகளிலெல்லாம் பட்டுக் கொள்ளாமல், பேசாமல் தெலுங்கு சினிமாப் பக்கம் போய் விடுங்கள்’ என்றார். எனக்கும், அவர் சொல்வது தான் சரி என்று பட்டது. அப்போது எனக்குத் திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. அதனால் உடனடியாக முடிவெடுத்து தெலுங்குப் பக்கம் சென்று விட்டேன்.

சென்னையில் ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் படிக்கும் போது சிரஞ்சீவி உங்களது கிளாஸ்மேட்டாக இருந்தாராமே?

சிரஞ்சீவி இன்றைக்கும் எனது நல்ல நண்பர். அவர் என் கிளாஸ்மேட் இல்லை. எனது ரூம்மேட் ஆக இருந்தார். நானும், சிரஞ்சீவியும், ஹரிபிரசாத்தும் ஒரே அறையில் தங்கிக் கொண்டு வாய்ப்புகள் தேடிக் கொண்டிருந்தோம். சென்னையில் ஒரே அறையில் நாங்களே சமையல் பொருட்கள் வாங்கி, சமைத்து, பாத்திரம் கழுவி சந்தோசமாகச் சிரித்துக் கொண்டு வாழ்ந்து களித்த அந்த நாட்கள் என்றென்றைக்கும்  மறக்க முடியாதவை. சிரஞ்சீவிக்கு முன்பே எனக்குத் தமிழில் ஹீரோ வாய்ப்பு கிடைத்து விட்டது. அவர் அப்போது சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பிறகு எனக்குக் கிடைத்த பட வாய்ப்பு ஒன்றில் என்னால் அப்போதைக்கு தேதிகள் அளிக்க முடியாத காரணத்தால் நான் சிரஞ்சீவிக்கு அதைப் பரிந்துரை செய்தேன். பிறகு அவர் தெலுங்கில் சூப்பர் ஹீரோ ஆனாலும் எங்களது நட்பை மறவாமல் அவரது பல படங்களில் எனக்கு வாய்ப்புத் தந்தார். அது மட்டுமல்ல, ‘யமுடுக்கி மொகுடு’  வெற்றிப்படத்தின் வாயிலாக என்னைத் தயாரிப்பாளராகவும் ஆக்கிய பெருமை சிரஞ்சீவியையே சேரும். பிரெய்ன் ஸ்ட்ரோக் வந்து நான் கோமா நிலையிலிருந்த போது என்னைத் தன் மனைவியுடன் வந்து பார்த்துச் சென்ற நடிகர்கள் சிலரில் சிரஞ்சீவியும் ஒருவர். 

சுதாகர் ஒரு முன்கோபி அதனாலும் கூட அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்தன என்று இன்டஸ்ட்ரியில் ஒரு பேச்சிருக்கிறதே?

அப்படிச் சொல்ல முடியாது. நான் எல்லோருடனும் ஃப்ரெண்ட்லியாகப் பழகக் கூடியவன் தான். ஆனால் மாலை ஆறு மணிக்கு மேல் ஷூட்டிங் இருந்தால் அதை முன்கூட்டியே சொல்லி விட வேண்டும் எனக்கு. சில இயக்குனர்கள் அப்படிச் சொல்லாமல் நேரத்தைக் கடத்தி வேலை வாங்கும் போது நன் சில நேரங்களில் எரிச்சல் பட்டதுண்டு. ஆனால் முன்னதாக என்னிடம் தெரிவித்து விட்டு இரவு ஷூட்டிங் நடத்தப் பட்டால், நான் அதில் சந்தோசமாகக் கலந்து கொண்டு வேலை செய்யக்கூடியவன் தான். பிரபல இயக்குனர் ராகவேந்திரா, என் டி ஆர், மோகன் பாபு படங்களில் எல்லாம் இரவு வரை ஷூட்டிங் நீளும், அப்போதெல்லாம் அவர்கள் முன்கூட்டியே என்னிடம் சொல்லி விடுவதால் நான் எந்தப் பிரச்னையும் இன்றி என் மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு படத்தில் என் போர்ஷனை மிகச் சரியாக செய்து விடுவேன். மற்றபடி முன்கோபி என்பதெல்லாம் அவரவர் வசதிக்கு இட்டுக் கட்டிச் சொல்லிக் கொள்கிறார்கள்.

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்...

நான், என் மனைவி, மகன் பென்னி, எனது மூத்த சகோதரர் என நான்கே பேர் தான் என் குடும்பத்தில். என் சகோதரர் திருமணம் செய்து கொள்ளாமல் என்னுடனே அப்படியே தங்கி விட்டார். அவருக்கு நான் தான் எல்லாமும். மகன் பென்னி இஞ்சினியரிங் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருக்கிறார். எங்களுக்குத் திருமணமாகி 10 வருடங்கள் கழித்துப் பிறந்த மகன் என்பதால் அவன் மீது எனக்கு அதீத ப்ரியம். அவனுக்கு நான் ஹீரோவாக நடித்த படங்கள் என்றால் இஷ்டம். அந்த மாதிரிப் படங்களை இப்போது கூட நீங்கள் செய்தால் என்ன டாடி? என்று சொல்லிக் கொண்டிருப்பான். பதிலுக்கு அவனிடம் நான், ஏன் எனத் காமெடிப்படங்களும் நன்றாகத் தானே இருக்கின்றன. அதைப் பாரேன் என்பேன். நான் காமெடியனாக நடித்தவற்றில் சில படங்களை மட்டுமே அவன் பார்த்திருக்கிறான். பெரும்பாலும் எனது எல்லாப் படங்களையும் அவன் பார்த்ததில்லை.

காமெடியனாக தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் உங்கள் திரைவாழ்க்கையில் திடீரெனப் பெரிய இடைவெளி வந்தது ஏன்?

முன்பே சொன்னதைப் போல பிரெய்ன் ஸ்ட்ரோக் வந்ததால் நான் கோமா ஸ்டேஜில் சில காலங்கள் இருக்க வேண்டியதானது. அப்போது என்னைச் சுற்றி நடந்த எதுவும் எனக்கு தெரியாது. பிறகு என் மனைவியும் மகனும் சொன்ன பிறகே அப்போது நடந்த பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். நடமாட முடியாத நிலையில் இருந்த போது, நான் எப்படி திரைப்படங்களில் நடித்திருக்க முடியும்? அதனால் வந்த இடைவெளி தான் அது.

நீங்கள் பிரெய்ன் ஸ்ட்ரோக் என்று சொன்னாலும், குடிப்பழக்கத்தால் உங்களது சிறுநீரகம் பாதிப்புக்குள்ளானதால் தான் உங்களுக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று சொல்கிறார்களே?

இல்லை அது பொய். எனக்கு பிரெய்ன் ஸ்ட்ரோக் வந்ததால் தான் என்னால் படங்களில் நடிக்க முடியாமலானது. இப்போது அதிலிருந்து முழுவதுமாக மீண்டு விட்டேன். இது தெலுங்கு சினிமாவில் எனது  ரீ என்ட்ரி. நான் அளவு மீறிக் குடித்து உடலைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு மொடாக்குடியன் அல்ல. அப்படி இருந்தால் என்னால் இவ்வளவு படங்களில் சிரத்தையாக எப்படி நடிக்க முடிந்திருக்கும்? சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த ரீ எண்ட்ரி சீஸனில் என்னை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது... .என்னைக் கண்டதும் ரசிகர்கள் எனக்களித்த மாபெரும் வரவேற்பு தான். ரசிகர்கள் இன்றும் இந்த சுதாகரை மறக்கவே இல்லை என்று நினைக்கும் போது எனக்குப் பெருமிதமாக இருந்தது.

உங்கள் முதல் பட நாயகி ‘ராதிகா’ பற்றிச் சொல்லுங்கள்?

கிழக்கே போகும் ரயில் எனக்கு மட்டுமல்ல ராதிகாவுக்கும் அது தான் முதல் படம் என்று சொல்லியிருந்தேன் இல்லையா? அந்தப் படத்தில் அறிமுகமாகும் போது, ராதிகாவைப் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்டதெல்லாம்,  ‘அவர் பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகள், அந்தக் காலகட்டத்தில் தான் எம் ஆர் ராதா, எம்ஜிஆரை துப்பாக்கியால் தொண்டையில் சுட்ட பரபரப்பான சம்பவம் நிகழ்ந்திருந்தது என்பதால், ஷூட்டிங்கின் போது ராதிகாவுடன் நான் பயந்து, பயந்து தான் நடித்தேன். அத்ல் ஒரு பாடல் காட்சியின் போது ஓடிச் செல்லும் ராதிகாவைத் துரத்திப் பிடித்து உயரத் தூக்கி, பிறகு மெதுவாக கீழே இறக்கி விட வேண்டும். அந்தக் காட்சியைப் படமாக்குகையில் எனது விரல் நகம் பட்டு அவரது உடல் புண்ணாகி விட்டது. ஷாட் முடிந்ததும் உடனே ஓங்கி பளாரென்று ஒரு அறை விட்டார் ராதிகா. நான் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டேன். ஆனால் அதன் பிறகு ராதிகா, என்னிடம் ஸாரி கேட்டு  எனக்கு நல்ல தோழியானது தனிக்கதை. முதல் படமே வெற்றிப் படமான பிறகு எங்களை ராசியான ஜோடியாக இயக்குனர்கள் கருதியதால் தொடர்ந்து 17 படங்களுக்கும் மேலாக நாங்கள் இருவரும் ஜோடியாக நடித்தோம்.

தமிழில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்து விட்டு தெலுங்கில் காமெடியனானதில் உங்களுக்கு வருத்தங்கள் இல்லையா?

வருத்தங்கள் எல்லாம் பெரிதாக எதுவுமிருந்ததில்லை எனக்கு. தமிழில் வெற்றிகரமான ஹீரோவாக இருந்த போதும் சந்தோஷமாகத் தான் இருந்தேன். தெலுங்கில் காமெடியனாக நடித்த போதும் சந்தோஷமாகவே நடித்தேன். எனக்குப் பிடித்தே எனது கதாபாத்திரங்களை நான் செய்து கொண்டிருந்தேன். தெலுங்கில் காமெடியனாக மட்டுமில்லை வில்லனாகவும், நகைச்சுவை கலந்த வில்லனாகவும், தயரிப்பாளராகவும் கூட நான் ஆக முடிந்ததால் எனக்கு சினிமாவில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்பது தான் விருப்பமாக இருந்ததே தவிர வருத்தங்கள் என்று எதுவுமில்லை. ஏனென்றால் இடைவிடாமல் நடித்துக் கொண்டிருந்தவரை தெலுங்கில் அனைத்து முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு பிடித்த நடிகனாக இருந்தேன் நான். ஹீரோவாக நடித்தது பெருமிதமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால் அப்போது எனக்கு 23 வயது தான். அதற்குள் அப்போது தமிழில் ரஜினி, கமலுக்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் இருந்தார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம் தானே?! பிறகு அவர்களது படங்களிலேயே நான் காமெடியனாகவும் நடித்தேன். எல்லாமும் நல்ல அனுபவங்கள்.

இப்போது உங்களது ரீ என்ட்ரியில், முன்பு நீங்கள் செய்த அதே விதமான வாய்ஸ் மாடுலேஷன் காமெடி எடுபடும் என்று நினைக்கிறீர்களா?

இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் அதே விதமாகத் தான் இப்போதும் காமெடி செய்ய வேண்டும் என்பதில்லை. காலத்திற்கேற்ப காமெடியிலும் புதுமைகளை முயற்சிப்பதில் எனக்கேதும் தடையில்லை. இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதில் எனது கிரியேட்டிவிட்டியையும் சேர்த்து நான் நடிக்கும் காட்சிகளை ரசிகர்களுக்குப் பிடித்தமான வகையில் பிரஸண்ட் செய்வது தானே என் போன்ற நடிகர்களுக்குப் பெருமையாக இருக்க முடியும். அதை நான் எனது ஒவ்வொரு படத்திலும் செய்து வந்திருக்கிறேன்... இனிமேலும் செய்வேன்.

இப்படியாக நீள்கிறது சுதாகரின் மிக நீளமான நேர்காணல். அதிலிருந்து சில பகுதிகளை மட்டுமே இங்கே அளித்திருக்கிறேன்.

தென்னிந்திய சினிமாவில் சிலர் வில்லனாக அறிமுகமாகி பிறகு வெற்றிகரமான ஹீரோக்களாக ஆனதை நாம் கண்டிருக்கிறோம். உதாரணத்துக்கு ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார், என்று நம்மிடம் பல நடிகர்கள் உள்ளனர்.

அதே போல காமெடியனாக அறிமுகமாகி சூப்பர் ஹீரோக்கள் ஆனவர்களையும் கூட நாம் கண்டிருக்கிறோம்.. கவுண்டமணி முதல், சந்தானம், சிவகார்த்திகேயன், சுனில் வரை அதற்கும் சிறந்த உதாரணங்கள் நமக்கு உண்டு.

ஆனால் ஒரு நடிகர் கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேலாக தமிழில் பிரபல ஹீரோவாக நடித்து விட்டு, அதை விடுத்து தெலுங்குக்குச் சென்று அங்கே சில படங்களில் ஹீரோவாகி அதிலிருந்து அப்படியே காமெடியனாகிப் பல படங்களில் நடித்து  கடைசியில் தான் அறிமுகமான தமிழ் படங்களிலேயே நகைச்சுவை கலந்த வில்லன் வேடங்களை ஏற்று நடித்தவர்கள் வெகு சிலரே. அவர்களில் சுதாகரும் ஒருவர். சுதாகர் தமிழில் நடித்து வெகு நாட்கள் ஆன போதும், அவரை தமிழ் ரசிகர்களும் கூட இன்னும் மறக்கவில்லை என்பதற்கு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ திரைப்படத்தில் வரும் சுதாகரை ஞாபகப் படுத்தும் காட்சிகளே உதாரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com