Enable Javscript for better performance
Do you remember lady James Bond VijayaLalitha?!- Dinamani

சுடச்சுட

  

  லேடி ஜேம்ஸ்பாண்ட் விஜயலலிதா இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?!

  By சரோஜினி  |   Published on : 19th June 2019 03:04 PM  |   அ+அ அ-   |    |  

  0000vijayalalitha

  கே பாலசந்தரின் ‘நூற்றுக்கு நூறு’ திரைப்படத்தில் ஜெய்சங்கருடன் ‘நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன், நீ வர வேண்டும், என் உள்ளம் மயங்கி ஆடுகிறேன் நீ வர வேண்டும்’ என்று குட்டைப் பாவாடையில் பாப் தலைமுடியை வெட்டி வெட்டி நியூ இயர் பார்ட்டியில் ஆடுவாரே  அவரே தான். தமிழில் ‘செந்தூரப் பூவே’ திரைப்படத்துக்குப் பிறகு அவரைக் காண முடிந்ததில்லை. தமிழை விடத் தெலுங்கில் தான் அவருக்கு லேடி ஜேம்ஸ்பாண்ட் பட்டம் கிடைத்தது என்பதால் அங்காவது தென்படுவார் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 22 வருடங்களாகி விட்டன அவரைத் திரையில் பார்த்து என்கிறார்கள் அக்கடபூமியில். அட, அவர் எங்கே போய் விட்டார்? என்று தேடினால், இதோ நம் கோடம்பாக்கத்தில் தான் குடியிருக்கிறார் என்று தெரிந்தது. தொடர்ந்து பல ஆண்டுகளாக பெரியதிரை, சின்னத்திரை என எந்தப் பக்கமும் எட்டிப்பார்க்காமல் அப்படி என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டால்;

  ‘எல்லாக் குடும்பத் தலைவிகளும் என்ன செய்வார்களோ? அதைத்தான் நானும் செய்துகொண்டிருந்தேன். 1995 ல் காதல் திருமணம் ஆயிற்று. கணவர் பெரு நாட்டில் பிஸினெஸ் செய்து வருகிறார். ஒரே மகன், இப்போது தான் 20 வயதாகிறது. பாஸ்டனில் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார். படங்களில் நடிப்பது எனக்குப் பிடித்த வேலையாக இருந்தாலும் அதை விட ரொம்பப் பிடித்த விஷயமாக என் மகன் வந்த பின்னர் நான் அவனுக்காகவே என் முழு நேரத்தையும் செலவிடத் தொடங்கினேன். அவனைப் பள்ளியில் விட்ட முதல்நாளை நினைத்தால் இப்போதும் எனக்கு சிரிப்பாகத் தான் இருக்கும்.

  அவனை என் உயிராக நினைக்கத் தொடங்கி விட்டதால், பள்ளிக்குள் விட்டு விட்டு என்னால் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. ஒருவேளை, அவனது அழுகையை சமாதானப் படுத்த முடியாமல் டீச்சர்கள் என்னைத் தேடினால், நான் வீட்டிலிருந்து திரும்பவும் பள்ளிக்குச் செல்ல 20 நிமிடங்கள் ஆகும். அந்த அளவுக்கு கூட அவன் என்னைத் தேடித் தவிக்கக் கூடாது என்று நினைத்தேன் நான். மகன் என்னைத் தேடும் போது நான் உடனே அவன் முன்னால் இருக்க வேண்டும் என்று நினைத்து, வீட்டுக்கே திரும்பாமல் அவனது பள்ளி நேரம் முடியும் வரையிலும் கூட சில நாட்கள் நான் பள்ளியின் முன்னால் காத்திருந்திருக்கிறேன். அப்போது என்னை அங்கே எதிர்பார்த்திராத ரசிகர்கள் யாரேனும் அங்கு என்னைக் கண்டால், ‘மேடம் என்ன மேடம் நீங்க போய் இங்க நின்னுட்டு இருக்கீங்க?’ என்பார்கள், அவர்களிடம் நான் சொல்வேன், ‘என் பிள்ளை உள்ளே இருக்கிறான்’ என்று. அந்த அளவுக்கு என் மகனை ஒரு நொடி கூட பிரிந்திருக்கப் பிடிக்காமல் அவன் கூடவே நான் இருந்தேன். அதனால் தேடி வந்த சினிமா வாய்ப்புகள், சின்னத்திரை வாய்ப்புகளைக் கூட வேண்டாமென தட்டிக் கழித்திருக்கிறேன். 

  ஏ வி எம் சரவணன் சார், ஒவ்வொரு புதிய மெகாத் தொடர் ஆரம்பிக்கும் முன்பும் என்னை நடிக்க அழைப்பார். ’அம்மா, ரொம்ப முக்கியமான கேரக்டர்ம்மா இது, நீங்க நடிச்சா நல்லா இருக்கும்’ என்று, நான்... அவரிடம், ‘சார், பையன் ரொம்பச் சின்னப்பையன் சார், நான் அவன் கூட இருக்கனும்’ என்றே தொடர்ந்து ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டு இருப்பேன். அவர் கூட, ‘என்னம்மா இது? எப்போபார்த்தாலும் இப்படியே சொல்றீங்க, பையன் எத்தனை காலம் தான் சின்னப் பையனாவே இருப்பான்? போங்கம்மா,’ என்று சலித்துக் கொள்வார். இப்படித்தான் நான் 22 ஆண்டுகளையும் கடத்தி இருக்கிறேன். இப்போதும் கூட எனக்கு நடிப்பதில் பெரிதாக விருப்பமில்லை. காரணம், நான் நடிப்பில் ஓரளவு சாதித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் என் டான்ஸ் இருந்தால் தான் படப்பெட்டியை வாங்குவேன் என்று சொன்ன விநியோகஸ்தர்கள் இருந்தார்கள். அப்போது ஐட்டம் சாங் என்றெல்லாம் இல்லை, எங்களுடைய தனி டான்ஸ் பாடலை, சோலோ சாங்க் என்பார்கள். அது இருந்தால் தான் படம் ஓடும் என்ற நிலையும் இருந்தது. அவற்றில் கவர்ச்சி நடனம் ஆட வேண்டிய நிலை இருந்த போதும் அதைப் பற்றியெல்லாம் நான் குற்ற உணர்வு கொண்டதில்லை. எனக்குத் தெரிந்து தானே நான் நடிக்க வந்திருக்கிறேன், யாருடைய வற்புறுத்ததாலும் இல்லை. உடைகள் கவர்ச்சியாக இருந்த போதும் அவை அனைத்தும் கேமிராவின் முன்னால் மட்டும் தான். டைரக்டர் கட் சொல்லி விட்டார் அத்தோடு சரி. மற்றபடி எங்களது தனிப்பட்ட வாழ்விலும்,பொது வாழ்விலும் வெளி இடங்களுக்குச் செல்கையில் நாங்கள் கெளரவமாக உடையணிந்து கொண்டு தான் சென்றோம். அதனால், சினிமாவில் நடிப்பது தொழில், அது சம்பாத்தியம் தருகிறது எனும் போது அதைப் பற்றி நான் எந்த விதத்திலும் குற்ற உணர்வு கொண்டதில்லை’ இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தாலும் நான் ஏன் அதை ஏற்றுக் கொள்வதில்லை என்றால், ஏதோ ஓரளவுக்கு நடிப்பில் எனக்கென ஒரு இடத்தை நான் உண்டாக்கி வைத்திருக்கிறேன். இனிமேல் வயதாகி விட்டது. இப்போது சும்மா ஏதோ ஒரு வேடத்தில் நடித்து விட்டுப் போய் விட முடியாது. எனக்கென்று வரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். அந்த கதாபாத்திரங்களை நான் செய்தால் தான் பொருத்தம், வேறு யாராலும் முடியாது என்று ஏதாவது முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்படி அல்லாத படங்களில் நடிக்கும் விருப்பம் இல்லாது போய் விட்டதால் நான் நடிப்பிலிருந்து ஒதுங்கி விட்டேன். அவ்வளவு தான்.

  - என்கிறார் விஜயலலிதா. 

  இப்போதும் சென்னை கோடம்பாக்கத்தில் வசிக்கும் விஜயலலிதா, யாருக்கும் பேட்டி தருவதில்லை. பிறகெப்படி அவரைத் தெரிய வந்தது என்றால், தெலுங்கு காமெடி நடிகர் அலி, E TV யில் ‘அலிதோ சரதாக’ என்றொரு சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நடத்துகிறார். அதில் பிரபலங்களை அளித்து நேர்காணல் செய்வார் அலி. அதில் அவரது சமீபத்திய சிறப்பு விருந்தினராக விஜயலலிதா பங்கேற்றிருந்தார். அதிலிருந்து தெரிந்து கொண்டவையே மேற்படி விஷயங்கள்.

  நடிகை விஜயசாந்தியின் சித்தி தான் விஜயலலிதா. விஜயசாந்தியை முதன்முதலாகத் தெலுங்குத் திரைப்பட உலகில் அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இவருக்கு உண்டு. சித்தி அங்கு லேடி ஜேம்ஸ்பாண்டாக 70, 80 களில் கலக்கினார் என்றால் 90 களில் வைஜெயந்தி ஐ பி எஸ்ஸாக அக்கடபூமியில் தனி ஆவர்த்தனம் செய்து ஹீரோயின் ஓரியண்டட் சூப்பர் டூப்பர் ஹிட்டுகள் கொடுத்து அசத்தியவர் விஜயசாந்தி என்பதை யாராலும் மறக்க முடியாது.

  Courtesy: Alitho Saradaga reality show, ETV 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai