பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க?

'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது.
பூ மலர்ந்திட நடமிட்ட பொன்மயிலே... மாதவி ஃபேனா நீங்க?

'பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே... 
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம் 
விழிகளால் இரவினை விடியவிடு

நான் நடமிட உருகிய திருமகனே
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ '

'டிக் டிக் டிக்' படத்தில் வரும் இந்தப் பாடலையும் மறக்க முடியாது... பாடலின் பாவங்களில் ரசம் குறையாது அழகிய நடமிடும் மாதவிப் பொன் மயிலாளையும் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. 'மாதவிப் பொன்மயிலாள்' என்பது என்னுடைய வார்த்தைப் பிரயோகம் அல்ல, அது 1967 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘இருமலர்கள்’ திரைப்படத்தில் நாட்டியப் பேரொளி பத்மினியின்’ அடவுகளுக்காக கவிஞர் வாலி பிரயோகித்த சொற்கள். காவிய மாதவியைப் போலவே நடிகை மாதவியும் கூட பரதத்தில் சிறந்த ஆளுமை கொண்டவர் என்பதோடு பெயரும் பொருத்தமாக இருப்பதால் இவரையும் அப்படிக் குறிப்பிடுவதில் குற்றமெதுவும் இருக்க வாய்ப்பில்லை.

80 களில் ஸ்ரீதேவி, ஜெயப்ரதா, எல்லாம் பாலிவுட்டுக்குச் சென்றதும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்டில் அம்பிகா, ராதா, ராதிகா, பானுப்ரியா கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். அம்பிகா, ராதாவுக்கும், பானுப்ரியாவுக்கும் முன்பு சில காலம் தென்னிந்தியத் திரைப்படங்களில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நடிகைகளில் மாதவியும் ஒருவர். முதன்முதலில் தமிழில் அவர் அறிமுகமான திரைப்படம் கமலின் சொந்தத் தயாரிப்பான ராஜபார்வை. அதில் கமலும், மாதவியும் இடம்பெற்ற;

‘அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதே’  

-பாடல் இப்போதும் பலரது ஹிட்லிஸ்டில் டாப் டென் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

சூப்பர் ஸ்டார்களோடு மாதவி நடித்த திரைப்படங்கள்...

தமிழில் ரஜினியோடு விடுதலை, உன் கண்ணில் நீர் வழிந்தால், தம்பிக்கு எந்த ஊரு, கர்ஜனை, தில்லு முல்லு உள்ளிட்ட வெற்றிப்படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல ‘இன்சாப் கெளன் கரேங்கா’ உட்பட இந்தியிலும் ரஜினியுடன் பல படங்களில் மாதவி இணைந்து நடித்திருக்கிறார். கமலுடனும் காக்கிச்சட்டை, மங்கம்மா சபதம், சட்டம், ஏக் துஜே கேலியே, எல்லாம் இன்ப மயம், ராஜ பார்வை, டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். திரையுலகில் மாதவி அறிமுகமானது முதல் அவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த அந்த 17 வருடங்களில் கிட்டத்தட்ட 300 க்கும் மேலான திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி தவிர ஒரிய மொழிப்படங்களிலும் மாதவி நடித்திருக்கிறார். 80 முதல் 90 வரையிலான காலகட்டங்களில் இத்தனை மொழிகளிலும் நடித்ததோடு மட்டுமல்லாமல் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் மாதவி உலகம் முழுக்கச் சென்று வழங்கிக் கொண்டு வெகு பிஸியான கலைஞராக இருந்தார்.

பிறந்தது ஆந்திராவில்...

பழைய ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பிறந்த மாதவியின் அப்பா பெயர் கோவிந்த ஸ்வாமி, அம்மா பெயர் சசிரேகா. இவருக்கு கீர்த்தி குமாரி என்றொரு சகோதரியும், தனஞ்செயன் என்றொரு சகோதரரும் உண்டு. மிகச் சிறு வயதிலேயே உமா மகேஸ்வரியிடம் பரதம் கற்றுக் கொண்ட மாதவி, நாட்டுப்புற நடனத்தை மிஸ்டர் பட் என்பவரிடம் கற்றுக் கொண்டார். 

மாதவி, ஹைதராபத்திலுள்ள ஸ்டான்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் பழைய மாணவிகளில் ஒருவர்.

திரையுலகப் பிரவேஷம்...

ஒரு நடன நிகழ்ச்சியின் போது தெலுங்குத் திரையுலக பிரம்மாக்களில் ஒருவரான இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் தாசரி நாராயணராவின் கண்களில் மாதவி படவே, அவரது அருமையான பாவங்களால் ஈர்க்கப்பட்ட தாசரி தனது தயாரிப்பில் நரசிம்ம ராஜூ(விட்டலாச்சார்யா படங்களின் ஏகதேச நாயகன்), மோகன்பாபு நடிப்பில் தயாராகிக் கொண்டிருந்த தூர்பு படமாரா (கிழக்கு, மேற்கு) எனும் படத்தில் மாதவியை நாயகியாக்கினார். இப்படித்தான் தொடங்கியது மாதவியின் திரையுலகப் பயணம். அதன் பிறகு அவரால் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி தொடர்ந்து 17 வருடங்களுக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஒரியா எனப் பன்மொழிகளில் பிஸியான நடிகையாகத் திகழ்ந்தார்.

மாதவியின் கணவர் ரால்ப் ஜெய்தீப் ஷர்மா (கணவரின் அம்மா ஜெர்மனி, அப்பா பஞ்சாபி) 

தனது திருமணம் குறித்து மாதவி பேசியதிலிருந்து...

‘என்னுடையது வீட்டினர் பார்த்து செய்து வைத்த அரேஞ்டு மேரேஜ். எங்களுடைய ஸ்வாமிஜி ராமா மற்றும் எனது பெற்றோர்கள் தேடிக் கண்டடைந்த வரன் தான் என் கணவர். திருமணத்திற்கு முன்பு நாங்கள் ஒருமுறை மட்டுமே தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தோம். பிறகு ஏர்போர்ட்டில் வைத்து அவரை ஒருமுறை சந்தித்த போது அவர் எனக்கு நிச்சயதார்த்த மோதிரத்தைப் பரிசளித்தார். சந்தித்த ஒரே வாரத்தில் 1996 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 14 ஆம் நாள் காதலர் தினத்தன்று எங்களுக்குத் திருமணமானது.

ஆயிற்று 17 வருடங்கள்... என் ஸ்வாமிஜியும், பெற்றோரும் எனக்காக மிகச்சிறந்த கணவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று இப்போது உணர்கிறேன். என் கணவர் என்னைப் பூப்போல பார்த்துக் கொள்கிறார். சிறு வயதிலிருந்தே நான் என் பெற்றோர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது ஒரே ஒரு விஷயத்தைத் தான், அது என் திருமணம் பெற்றோர்கள் பார்த்து செய்து வைக்கும் திருமணமாக இருக்க வேண்டுமென்பது மட்டுமே! அதுவே என் வாழ்க்கையில் நடந்தது.

எங்களுடையது அருமையான குடும்ப வாழ்க்கை. என் கணவர் ஆன்மீகத்தில் மிகுந்த பற்றுடையவர். நானும் அப்படித்தான். காலையில் சீக்கிரம் எழுந்து குழந்தைகளுக்காகவும், கணவருக்காகவும் சமைத்து வைத்து விட்டு நாள் தவறாமல் வீட்டில் பூஜை செய்வோம். வீட்டைப் பொருத்தவரை நான் மிக மிக பாரம்பரியப் பழக்க வழங்கங்களைக் கடைபிடிக்க விரும்புவேன். அதுவே பிஸினஸ்க்காக வீட்டை விட்டுக் கிளம்பி எங்கள் சொந்தக் கம்பெனி மீட்டிங்கில் கலந்து கொள்ளச் செல்லும் போது வெஸ்டர்ன் உடைகளை அணிந்து கொண்டு செல்வேன். இங்கே அப்படித்தானே இருக்க முடியும். அதனால் தான் என் கணவர், என்னை  ’நீ கிழக்கு, மற்றூம் மேற்கின் பெர்ஃபெக்ட் கலவை’ என்பார்.

குழந்தைகள்...

மாதவிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகளுக்கு 13 வயதாகிறது. இரண்டாவது மகளுக்கு 11 வயது மூன்றாவது பெண்ணுக்கு 9 வயதாகிறது. 

மூவரும் பெண்குழந்தைகளாக அமைந்ததில் உள்ள பெருமிதம்...

நான் 5 வயது முதல் பரதம் ஆடி வருகிறேன்... நாள் தவறாமல் நடன நிகழ்ச்சிகள் இருக்கும், பிறகு 13 வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கி விட்டேன். அப்புறம் மூச்சு விடக்கூட நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தேன்... அதனால் கடவுள் என் மீது இரக்கப்பட்டு, சின்ன வயதில் விளையாட நேரமின்றி உழைத்துக் கொண்டிருந்து விட்டாய், அதனால் இப்போது உன் பெண் குழந்தைகளுடன் விளையாடு என்று ஆசிர்வதித்து எனக்கு மூன்று பெண் குழந்தைகளை அளித்திருக்கிறார். என் மூன்று பெண்களுக்கும் நான் அம்மா என்பதை விட, சிறந்த தோழி என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அவர்கள் என்னை அப்படித்தான் அழைப்பார்கள். அவர்கள் என்னை விட்டு ஒருநாள் கூட தனித்திருக்க மாட்டார்கள். பிசினஸ் ட்ரிப்புகளுக்காக வெளியூர் செல்ல நேர்ந்தாலும் கூட ஒன்று நானோ அல்லது அவர்களது அப்பாவோ அவர்களுடன் இருந்து அவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் என் குழந்தைகளை எண்ணியே நான் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன்.

எப்போதாவது மீண்டும் திரையுலகில் மறுபிரவேஷம் செய்யும் எண்ணமிருக்கிறதா?

ஏன் இல்லை... நிச்சயமாக இருக்கிறது... ஏதாவது நல்ல திரைப்படங்களைக் காணும் போது, நான் இதில் நடித்திருக்கலாமோ என்று தோன்றும். ஆனால் மறுபடியும் என் குழந்தைகளையும், கணவரையும் பற்றி யோசிக்கும் போது அவர்களை யார் கவனித்துக் கொள்வார்கள்! அப்படியே யாராவது கவனித்துக் கொண்டாலும் கூட ஒரு அம்மாவாக, ஒரு மனைவியாக நான் அவர்களைப் புரிந்து கொண்டு கவனித்துக் கொள்வதைப் போல வருமா? அவர்கள் மற்ற அனைவரையும் விட என்னுடன் இருக்கையில் தான் கம்ஃபோர்டபிளாக உணர்வார்கள். எனவே குழந்தைகள் நன்றாக வளர்ந்து அவர்களை அவர்களே கவனித்துக் கொள்ளும் நிலை வரும் வரை எனக்கு சினிமா வேண்டாம் என நான் முடிவு செய்து விட்டேன். ஆனால் நல்ல திரைப்படங்களைக் காணும்போதெல்லாம் நான் திரையுலகில் பிஸியாக இருந்த அந்தப் பொன்னான நாட்கள் நினைவுக்கு வரும். மீண்டும் நடித்தாலென்ன என்ற ஆசை துளிர் விடும். அதற்காக செலவிட எனக்கு இப்போது நேரமில்லை என்பதால் அப்படியே அமைதியாகி விடுவேன்.

மகள்கள் விரும்பினால் எதிர்காலத்தில் அவர்களை நடிகைகளாக அனுமதிப்பீர்களா?

கண்டிப்பாக அனுமதிப்பேன். அவர்களுக்கு அந்த ஆசை இருக்கிறதா? என்று தெரியவில்லை. மூத்த மகள் எங்களுடைய குடும்பத் தொழிலான ஃபார்மஷூட்டிகல் நிறுவனம் சார்ந்த கல்வி பெறும் விருப்பத்துடன் இருக்கிறார். மூன்று பேரில் ஒருவராவது நடிகையானால் நான் நிச்சயம் சந்தோசப்படுவேன். ஆனால் அவர்கள் இப்போதும்  சிறு குழந்தைகள் தான் என்பதால் அதைப் பற்றியெல்லாம் நான் யோசிக்கவில்லை. மூத்த மகள் எங்கள் தொழில் மீது ஆர்வமாகத்தான் இருக்கிறார்... பார்க்கலாம், அவர் பொறுப்பெடுத்துக் கொள்ளும் வயது வந்ததும் வாய்ப்புக் கிடைத்தால் நான் மீண்டும் சினிமாவில் நடிக்கலாம் என்றிருக்கிறேன்.

இப்போதும் நடிக்கச் சொல்லிக் கேட்டு வாய்ப்புகள் வருகின்றனவா?

ஆமாம், என் வயதுக்கேற்ற வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 1 மாதமாவது கால்ஷீட் தரவேண்டியதாக இருக்கும். அது என்னால் இப்போதைக்கு நிச்சயமாக முடியாது. அதனால் தவிர்த்து விடுகிறேனே தவிர, எதிர்காலத்தில் என் மகள்களில் யார் நடிகையாக விரும்பினாலும் சரி,  நான் அவர்களுக்கு சிறந்த சப்போர்ட்டராகவே இருப்பேன்.

 நடித்ததில் கணவருக்குப் பிடித்த படம்?

நான் நடித்த படங்களில் ‘மாத்ரு தேவோ பவ’ படத்தைத் தவிர வேறு எந்தப் படத்தையுமே நான் என் கணவருக்குக் காட்டியதே இல்லை. அந்தப் படத்தில் நான் 4 குழந்தைகளுக்குத் தாயாக கணவனை இழந்த கைப்பெண்ணாக நடித்திருந்தேன். வெறும் கைம்பெண் மாத்திரமல்ல புற்றுநோயால் மரணத்தை எதிர்கொண்டிருக்கும் ஒரு தாயாக என் 4 குழந்தைகளையும் நான் குழந்தைகளில்லாத தம்பதியினருக்குத் தத்துக் கொடுப்பதைப் போல அந்தக் கதை செல்லும். அந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. அப்படியிருந்தும் ஒரு தாயாக அதில் என் நடிப்பு பெரிதும் சிலாகிக்கப் பட்டது. உண்மையில் இப்போது நான் அந்தப் படத்தில் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக வேறோரு கோணத்தில் நடித்திருப்பேன் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது எனக்குக் கணவர் இருக்கிறார், குழந்தைகள் இருக்கிறார்கள், உண்மையில் அந்தக் கதையின் வலியை இப்போது தான் என்னால் சிறப்பாக உணர்ந்து கொண்டு நடித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.

இப்போது வெளிவந்த புதிய திரைப்படங்களைப் பார்ப்பதுண்டா?

நான் அமெரிக்காவில் இருப்பதால் அதிகமாகத் திரைப்படங்களைக் காணும் வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் எங்களுடையது சொந்தத் தொழில் என்பதால் அதில் கவனம் செலுத்த வேண்டிய நிலை. ஆனாலும் நல்ல சினிமாக்கள் என்று நண்பர்கள் குறிப்பிடுவதைப் பார்க்க முயல்வேன். இன்றைய திரைப்படங்கள் நிச்சயம் நாங்கள் பணி புரிந்த காலத்தை விட மிகவும் மேம்பட்டதாகவே இருக்கின்றன. இப்போதெல்லாம் பக்கா பிளானிங்குடன் படமெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது நல்ல முன்னேற்றம்.

குடும்பத் தொழில் பற்றி...

எங்களுக்கு இரண்டு ஃபார்மாஷூட்டிகல் கம்பெனிகள் இருக்கின்றன. 40 வருடங்களுக்கு முன்பு என் மாமனாரும், மாமியாரும் தொடங்கியது. திருமணமாகி இங்கு வந்த புதிதில் வீட்டிலிருக்கப் போரடித்ததால் கணவருக்கு உதவியாகக் கம்பெனியில் சின்னச் சின்ன வேலைகளை எடுத்துச் செய்து கொண்டிருந்தேன். அது அப்படியே பெருகிப் பெருகி இப்போது எங்கள் கம்பெனிக்கு நான் வைஸ் பிரஸிடெண்ட்.

இன்று ஒரு பிசினஸ் வுமனாக முன்பு நடிகையாக இருந்ததைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வீர்கள்?!

இட்ஸ் எ பியூட்டிஃபுல் ஆப்பர்ச்சூனிட்டி. ஆனால் நீங்கள் வெற்றி, தோல்விகளைப் பற்றி கவலைப்படாதவராக இருக்கும் வரை அது மிகச் சிறந்த அனுபவம். வெற்றிகளின் போது கர்வத்துடனும், தோல்விகளின் போது துயரத்துடனும் இருந்தால் மற்றெல்லா வேலைகளையும் போல நடிகையாக இருப்பதும் கூட நிச்சயம் துன்பமான விஷயம் தான். பகலென்று இருந்தால் இரவும் வரும் என்பதை நாம் உணர்ந்தே இருந்தால் நல்லது.

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக் கொள்ள குடும்பம், குழந்தைகள், சொந்தத் தொழில் தவிர்த்து வேறு என்ன செய்கிறீர்கள்?

நானும், என் கணவரும், மூத்த மகளும் ஃபிளையிங் வகுப்புகளுக்குச் சென்று வருகிறோம். சீக்கிரமே நான் ஒரு பைலட் ஆகி விடுவேன். எங்கள் வீட்டு மாடியிலிருந்து எனக்கான ஃபிளைட்டை எடுத்துக் கொண்டு நான் எங்களது அலுவலகத்துக்குச் செல்வது நிச்சயம் சுவாரஸ்யமான அனுபவமாகத்தானே இருக்கும்?!

- புன்னகை மாறாமல் கேட்கும் மாதவியைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தென்னிந்திய மொழித்திரைப்படங்களில் நாம், நமது சொந்தக் குடும்ப உறுப்பினர்களைப் போலவும், நண்பர்களைப் போலவும் எண்ணி ரசிக்க முடிந்த நடிகர், நடிகைகள் வெகு சிலரே! அவர்களில் ஒருவர் மாதவி. அந்நாளைய மிக, மிக அழகான நடிகைகளில் ஒருவர். அப்போதும், இப்போதும் சூப்பர் ஸ்டார்களென நாம் கொண்டாடி வரும் அமிதாப்பச்சன், ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லாலுடன் பல படங்களில் நாயகியாக நடித்தவர். நடிப்புலகில் மட்டுமல்லாது, சொந்த வாழ்விலும் ஜெயித்து மிக வெற்றிகரமான பிசினஸ் வுமனாக இயங்கி வருகிறார் என்பது நிச்சயம் பெருமைக்குரிய விஷயம் தானே!

வாழ்த்துக்கள் மாதவி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com