தமிழ்த் திரையுலகில் புதுமைப்பெண்களின் முகமும் வலியும்…

இவரது கதாநாயகிகள் நடத்திய தர்பார் பெண்களுக்கான புதிய பார்வையைத் தோற்றுவித்தது...
தமிழ்த் திரையுலகில் புதுமைப்பெண்களின் முகமும் வலியும்…

திரையுலகம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்து, மக்களுக்கான ஆறுதல்களைத் தெரிவித்து, அவர்களை ஆற்றுப்படுத்தி வருவதால் அதற்கான வரவேற்பு கடந்த கருப்பு வெள்ளைக் காலத்திலிருந்து இன்றும் தொடர்கிறது. ரசிகர்களின் விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் வண்ணமயமாகப் பூர்த்தி செய்வதாலும் அதன் மீதான ஈர்ப்பு இன்று வரை சிறிதும் குறைந்தபாடில்லை. காலந்தோறும் அதன் பிரச்சாரக் கண்களுக்கு அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ஈர்க்கப்பட்டு அதனைப் பயன்மிக்க பலன் அடைபவர்களாகவும் விளைவுகளைப் பெறுபவர்களாகவும் இருந்து வருகின்றனர். 

படம் - @NFAIOfficial
படம் - @NFAIOfficial

திரையுலகம் தனது மாய உலகில் பெண்களுக்கான முக்கியத்துவத்தை எப்போதும் தரத் தயங்கியதில்லை. பெண்களைப் பிரதான இடத்தில் வைத்துக் கொண்டாடி வருவது கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 1947-ம் ஆண்டு மிஸ் மாலினி என்கிற பெண் தலைப்பை முன்னிறுத்தி வெளியான படமே பெண்களுக்கான முக்கியத்துவத்தை தலைப்பிலேயே தொடங்கி வைத்த திரைப்படம் என்று கூறலாம். ஆனால் அதற்கு முன்னதாகவே 1944-ல் கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளியான தாஸி அபரஞ்சியும் அதனைத் தொடர்ந்து 1945-ல் வெளியான கண்ணம்மா கண்ணம்மா என் காதலியும், 1952-ம் ஆண்டு வெளியான மூன்று பிள்ளைகளும் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள். அறத்தின் பாடல் பெண் புலவர் ஒளவையாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ஒளவையார் திரைப்படம் எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் பாடகி கே.பி. சுந்தராம்பாள் ஒளவையாராக நடித்து கடந்த 1953-ம் ஆண்டு வெளியாகிச் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன் அந்தக் காலத்திலேயே பாடகியாக இருந்து நடிகையான கே.பி. சுந்தராம்பாள் அத்திரைப்படத்திற்குப் பெற்ற ஊதியம் பரபரப்புடன் பேசப்பட்டது. 1948-ம் ஆண்டில் வெளியான சந்திரலேகா ஒரு பெண்ணைக் காதலித்ததன் விளைவாக அந்த நாடே தடுமாறும் திரைப்படமாக அமைந்திருந்தது. தயாரிப்பாளராக இருந்த எஸ்.எஸ்.வாசன் இயக்குநராக அறிமுகமான திரைப்படமாக வெளிவந்து திரைப்படங்களுக்கு அதிக பொருட்செலவு செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டிய திரைப்படமாக இன்றும் திரையுலக வரலாற்றில் குறிப்பிடப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்தத் திரைப்படத்தின் டிரம்ஸ் நடனக் காட்சிகள் இன்று வரை பிரமாண்டத்தின் உச்சமாகவே போற்றிப் பாடப்பட்டு வருகிறது. ஒரு பாடல் காட்சிக்காக அதிகளவில் செலவிடப்பட்டது இன்று வரை கருப்பு வெள்ளை ஆச்சர்யமாகவே உள்ளது. 

சந்திரலேகா (படம் - விக்கிபீடியா)
சந்திரலேகா (படம் - விக்கிபீடியா)

பெண் என்கிற பெயரில் கடந்த 1954-ம் ஆண்டு வெளியான காதல் தொடர்பான திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா மற்றும் அஞ்சலிதேவி ஆகியோர் நடித்தார்கள். இயக்கம் - எம்.வி. ராமன். இக்காலத்தில் இருந்தே காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு வரவேற்பிருந்ததை உணர முடிகிறது. இந்தக் காலக்கட்டத்தில்தான் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமான சாவித்திரி தனது நடிப்புச் சாகசத்தைத் திரையில் தொடங்கி மாயம் புரியத் தொடங்கினார். மாயாபஜார், மஞ்சள் மகிமை, களத்தூர் கண்ணம்மா, பாசமலர், நவராத்திரி, கை கொடுத்த தெய்வம் என கதாநாயகர்களை விஞ்சிடும் வகையில் தனது நடிப்புத் திறனை வஞ்சகமின்றி வெளிப்படுத்தி ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்தார். அதிலும் குறிப்பாக 1964-ம் ஆண்டு வெளியான நவராத்திரியில் 9 வேடங்களில் நவரசத்துடன் நடித்த சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுதல்களைப் பெற்றார். 

பெண் (@ProductionsAvm)
பெண் (@ProductionsAvm)

அதேபோல்  அதே ஆண்டு வெளியான கை கொடுத்த தெய்வத்திலும் சாவித்திரியின் நடிப்பைப் போற்றாதவர்கள் இல்லையென்றே கூறலாம். அதே சாவித்திரி 1971-ம் ஆண்டு பிராப்தம் என்கிற பெயரில் முதல் பெண் இயக்குநராகப் பரிணாமம் அடைந்ததும் திரையுலகில் புதுமைப் பெண்களின் ராஜ்ஜியம் பரவத் தொடங்கியதற்கு ஆரம்பமாக இருந்தது. இவரது காலத்திற்கு முன்பாகவே தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த சாரதா தனது திறன்மிக்க நடிப்பாற்றல் காரணமாக மூன்று முறை தேசிய விருது பெற்று ஊர்வசி சாரதா என்கிற அடைமொழியுடன் அறியப்பட்டார். இவரது நடிப்பில் 1968-ல் வெளியான துலாபாரம் சோகக்காட்சிகளுக்காகவே கொண்டாடப்பட்ட திரைப்படமாக வரலாற்றில் இடம் பெற்றது. துலாபாரத்திற்குப் பிறகு சோகத்தை மட்டுமே ஏந்தி வந்த படங்கள் திரை வரிசைப் பட்டியல்களில் இடம் பெற்றன. இவர்களைப் போலவே தெலுங்குத் தேசத்திலிருந்து தமிழுக்கு வந்த நடிகை பானுமதி, அவரது துணிச்சலுக்குப் பெயர் போனவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் போன்ற அனைத்து கதாநாயகர்களுடன் நடித்தவர். இவர் பாடகியாக இருந்து தனது பாடல் திறனை இசை நயத்துடன் வெளிப்படுத்தினார். மேலும் இவர் இசையமைத்த இப்படியும் ஒரு பெண், வாங்க சம்பந்தி வாங்க போன்ற திரைப்படப் பாடல்கள் இன்றும் ரசிக்கத் தகுந்த பாடல்களாகவே உள்ளன. வானொலிக் காலங்களில் இவரது பாடல்கள் இடம்பெறாத அலைவரிசை வானொலிகளே இல்லையென்று கூற முடியும். கம்பீரமும், வார்த்தை உச்சரிப்பும் கேட்பவரைப் பரவசத்தில் ஆழ்த்தியதால் அவர் கேட்கப்படுபவராகவும், ரசிக்கப்படுபவராகவும் இருந்தார். இவரது திரைப்படப் பணியைப் பாராட்டி இந்திய அரசு இவரது படம் பொருந்திய அஞ்சல் தலையையும் பத்மபூஷன் விருதினையும் வழங்கி தன்னைக் கெளரவப்படுத்திக் கொண்டது. பெண்களைப் போற்றிப்பாடும் திரைப்படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் தொடர்ந்து இடம்பெற்றன. அந்த வரிசையில் 1976-ம் ஆண்டு  வெளியான பத்ரகாளியும் அன்னக்கிளியும் முக்கியத் திரைப்படங்களாகும். குறிப்பாக அன்னக்கிளி சுஜாதாவை மையமாக வைத்து வெளியான படமாகவும் இளையராஜாவின் முதல் திரை இசைப் படமாகவும் துணிச்சலான கதாநாயகியைக் கொண்ட படமாகவும் அமைந்து வெற்றிப் படமாகவும் ஒளிர்ந்தது. 

பானுமதி
பானுமதி

பெண்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் பெண் கதாநாயகிகளைத் துணிச்சல் மிக்க கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து பெண்களுக்கான பங்களிப்பையும் அவர்களுக்கான உரிமைகளையும் அதிகரிக்கச் செய்த இயக்குநர்களில் கே. பாலச்சந்தரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். கருப்பு வெள்ளைக் காலம் தொட்டு வண்ணங்களில் மிளிர்ந்த திரைக்காலம் வரை இவரது கதாநாயகிகள் நடத்திய தர்பார் பெண்களுக்கான புதிய பார்வையைத் தோற்றுவித்தது. 1969ல் இவரது இயக்கத்தில் வெளியான இருகோடுகள் திரைப்படத்தில், தான் காதலித்துக் கைவிட்டவரே தனக்கு மேலதிகாரியாக, ஆட்சியராக வருவது போன்ற கதையமைப்பில் வெளியான படம். இது, அந்தாண்டின் சிறந்த திரைப்படமாகவும் செளகார் ஜானகியின் நடிப்பைத் தொடங்கி வைத்த திரைப்படமாகவும் இருந்தது. 

கே. பாலச்சந்தரின் பெண் புகழ் பாடும் திரைப்படங்கள் வரிசையில் செளகார் ஜானகி, பிரமீளா, சுஜாதா, ஸ்ரீவித்யா, சரிதா, ஜெயப்பிரதா, மாதவி, சுஹாசினி ஆகியோர் தங்களது திரைப்பட நிழலை மீறியும் கேபி திரைப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். குறிப்பாகக் கூறுவதென்றால் அரங்கேற்றத்தில் தனது குடும்பத்திற்காகத் தன்னையே விலையாக்கும் கதாநாயகியையும், அவள் ஒரு தொடர்கதையில் தனது குடும்பத்திற்காகத் தனது ஆசைகளை நிராசைகளாக்கிக் கொண்டு தொடர்ந்து தன் சாப்பாட்டுப் பையைத் தூக்கிச் செல்லத் தயாராகும் கதாநாயகியையும், அபூர்வ ராகங்களில் பொருந்தாக் காதலில் வயப்பட்ட போதும் தனது மகள் எதிர்காலத்திற்காகக் காதலை உதறும் கதாநாயகியையும், மூன்று முடிச்சில் தனது காதலரின் மரணத்திற்குக் காரணமானவரின் தந்தையை மணம் முடித்து காதலைக் கொன்றவரின் அம்மாவாக உயரும் கதாநாயகியையும், வறுமையின் நிறம் சிவப்பில் தனக்கான வாய்ப்பையும் காதலையும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் புரிய வைக்க முடியாமலும் தவித்து இறுதி முடிவு எடுக்கும் கதாநாயகியையும், சிந்து பைரவியில் பிரபல இசைக்கலைஞரின் ரசிகையாக இருந்து ரசித்து தனது ஆதர்சத்திற்கு அவரது உறவுப் பரிசாகத் தனக்கு வழங்கப்பட்ட குழந்தையைக் குழந்தையில்லா இசைக்கலைஞரின் குடும்பத்திற்குப் பரிசாக வழங்கி கடக்கும் கதாநாயகியையும் கண்டோம். இவரது கதாநாயகிகள் துணிச்சலைப் பாராட்டிய கதாநாயகிகளாக இருந்து வரவேற்பைப் பெற்றவர்கள். 

புதுமைப் பெண் (@ProductionsAvm)
புதுமைப் பெண் (@ProductionsAvm)

கே.பியின் வருகைக்குப் பின்னர் பாரதிராஜா தனது பங்களிப்பாகத் தமிழ்த் திரையுலகிற்கு வழங்கிய பல திரைப்படங்கள் பெண்களைப் போற்றும் திரைப்படங்களாகவே அமைந்தன. இவரது முக்கியத் திரைப்படமாக புதுமைப்பெண்ணைக் கூறலாம். அந்தத் திரைப்படத்தினைப் பாராட்டி தமிழக அரசு வரிவிலக்கு அளித்ததுடன், விருதுகளையும் வழங்கிக் கெளரவித்தது. அதில் நடித்த நடிகை ரேவதி அதற்குப் பிறகு கதாநாயகி அந்தஸ்தில் தனிக்கவனம் பெற்றவர் என்பதும் அதற்குப் பின்னர் அவர் தேர்வு செய்யும் கதாநாயகிப் படங்களும் சிறப்புப் பெற்றவையாகவே அமைந்ததற்கு பாரதிராஜாவிற்கு நன்றிகளைத் தெரிவித்தாக வேண்டும்.  இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதையில் கெளரவம் மிக்க ஊர்ப்பெரியவரான சிவாஜிக்கு மரியாதை கிடைத்த போதிலும் அவரளவில் நிம்மதி கிடைக்காததை உணரும் சாதாரண பரிசல் ஓட்டிப் பெண் அவரை மனதாரக் காதலித்து அவருக்கான நிம்மதியை உடல் தொடாமல் பேசியும் பழகியும் உணவு வழங்கியும் மருந்து வழங்கியும், அன்பைப் பராமரித்து அந்த ஊர்ப்பெரியவர் குடும்பத்திற்கு இழுக்கு என்கிறபோது அதற்காகக் கொலை செய்யத் துணிபவராக அன்புப் பரிசை வெளிப்படுத்திய கதாநாயகியின் தபசு வித்தியாசமும் மிகுந்த பாராட்டையும் பெற்றது. 

இதே ரேவதி நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், பெண்கள் பணிபுரியும் இடத்தில் அவர்கள் படும் பாடுகளையும், அதற்காக ஒருங்கிணைந்த பெண்கள் எடுக்கும் காட்சிகளுமாக நகரும் திரைப்படமும் திரைப்பட வரிசையில் பெண்களுக்கான முக்கியத் திரைப்படமாகவே இடம் பெற்றிருந்தது. இந்த புதுமைப்பெண்கள் புகழ் பாடும் திரைப்பட வரிசையில் இன்று வரை சிறப்புமிக்க திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது சிறப்பு என்றே கூறவேண்டும். கதாநாயகி தபசைப் போற்றிடும் திரைப்படங்கள் வரிசையில் இறைவி, அறம், 36 வயதினிலே, மகளிர் மட்டும், அருவி, தரமணி, பேரன்பு போன்ற திரைப்படங்களும் அரிதானவையாகவும் வித்தியாச உணர்வையும் தரத் தயங்கியதில்லை. பேரன்பு போன்ற திரைப்படங்கள் மூளைத்திசு பாதிக்கப்பட்ட மகளுக்கும் தந்தைக்குமான போராட்டம் குறித்து வெளிப்படையாக உணர்த்திய படம். அதில் பாதிப்புக்குள்ளான பெண்ணைப் பராமரித்து ஏமாற்றும் பெண்களையும் தனது பெண்ணை நேர்மையுடன் பராமரிக்க முன்வரும் திருநங்கை ஒருவரைத் தனது வாழ்க்கைத் துணையாக்கி அவருடன் தனது வாழ்க்கையைத் தொடரும் கதாபாத்திரத்தின் துணிச்சலையும் இயக்குநர் ராம் வழங்கியதை இந்த நூற்றாண்டின் சிறந்த படமாகக் கருதத் தோன்றுகிறது. 

இந்த வரிசையில்தான் பெண்களும் விளையாட்டில் திறனுள்ளவர்கள் என்பதையும் பல போராட்டங்களைத் தாண்டிதான் அவர்களால் வாழ்க்கையைப் போன்றே விளையாட்டிலும் ஜொலிக்க முடிகிறது என்பதையும் வெளிப்படுத்திய திரைப்படங்களும் வெளியானது. இந்த வரிசையில் கனா திரைப்படத்தை முக்கியமானதாகக் குறிப்பிடலாம். இதே வரிசையில் பெண்கள் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் விளையாட்டுப்படமாக எடுக்கப்பட்ட பிகில் திரைப்படத்தில் தன்னை ஒருதலையாகக் காதலித்தவனிடமிருந்து முகத்தில் ஆசிட் பரிசு பெற்ற நிலையையும் விளையாட்டு வீராங்கனை குடும்பப் பெண்ணாக இருப்பதை விடவும் அவரது திறமையை வெளிப்படுத்திடும் பெண்ணாக இருந்திட வேண்டும் என்பதையும் குண்டுப் பெண்ணாக இருந்தாலும் அவருக்குள்ளிருக்கும் திறமையை வெளிப்படுத்திட வேண்டும் என்கிற முனைப்பையும் வெளிப்படுத்தியதற்காக அதனையும் வரவேற்றிட வேண்டும். இந்த வரிசையில் பெண்கள் கபடியைப் போற்றி எடுக்கப்பட்ட கென்னடி கிளப் போன்ற திரைப்படமும் சிறப்பானது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.  

பெண்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையிலான திரைப்படங்களைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் கதாநாயகிகளும் வெற்றியை மட்டும் கருதாது தைரியமாகத் தந்து கொண்டு இருப்பதையும் பாராட்டிட வேண்டும். தமிழ்த் திரைப்படங்களில் புதுமைப்பெண்களின் வரவு தொடர்ந்திட வேண்டும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, அடுப்பறைக்குள் திணிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை முக்கியப்படுத்திடும் வகையிலான திரைப்படங்களின் வரிசை வரவேற்கத்தக்கது. பெண்களின் பங்களிப்பை உலகுக்கு உணர்த்திடும் திரைப்படங்கள் இன்னும் கூடுதலாக வழங்கிட வேண்டியது தமிழ்த் திரைப்பட உலகத்தினரின் கடமையும், பொறுப்புமாகும். பெண்களைக் கெளரவப்படுத்திடும் வகையில் அவர்களுக்கான மரியாதையை அதிகப்படுத்திடும் திரைப்படங்களை வழங்கிட வேண்டியதைத் தமிழ்த் திரைப்பட உலகத்தினர் உணரவேண்டியது இக்காலத்தின் கட்டாயமாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com