கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணாவைத் தவற விடுகிறாரா ரஜினி?

ஒரு ரஜினி படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 90களுக்குப் பிறகு வந்த படங்களில்...
கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணாவைத் தவற விடுகிறாரா ரஜினி?
Published on
Updated on
4 min read

1994-ல் நாட்டாமை சிறிய படமாக எடுக்கப்பட்டு பிரமாண்ட வெற்றியைப் பெறுகிறது. ஒரே நாளில் தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநராக மாறுகிறார் கே.எஸ். ரவிகுமார். இதனால் அவருடைய உழைப்பு குறையவில்லை. அடுத்த வருடம் அவர் இயக்கிய மூன்று படங்கள் வெளிவருகின்றன. அதில் ஒன்று ரஜினி நடித்த முத்து. அதற்கடுத்த வருடம் இரு படங்கள். அதிலொன்று கமல் நடித்த அவ்வை சண்முகி.

ரஜினி, கமல் படங்களை இயக்கினாலும் கே.எஸ். ரவிகுமாரின் வேகம் குறையவே இல்லை. 97, 98 ஆண்டுகளில் தலா இரு படங்கள். அடுத்த வருடம் மூன்று படங்கள். அதிலொன்று ரஜினி நடித்த படையப்பா. அந்த வருடம் மட்டும் கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் 4 படங்கள் வெளிவந்தன. இதுதவிர சுயம்வரம் படத்தின் இயக்குநர்களில் அவரும் ஒருவர். 

பிரபலங்களை இயக்கியும் கே.எஸ். ரவிகுமாருக்கு இணையாகத் தொடர்ந்து படங்களை இயக்கிக் கொண்டிருந்த இன்னொரு தமிழ் இயக்குநர் இருக்க முடியாது. ரஜினிக்கு உள்ள அதே வேகம். 

முத்து, படையப்பா என இரு பெரிய வெற்றிப் படங்களை 4 வருட இடைவெளிக்குள் அளித்தாலும் ரஜினியுடன் மீண்டும் இணைந்தது லிங்காவில் தான். அந்தப் படம் 2014-ல் தான் வெளிவந்தது. அதே வருடம் ரஜினி நடித்த அனிமேஷன் படமான கோச்சடையானுக்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் பங்காற்றினார். 

*

1988-ல் சத்யா என்கிற படத்தின் மூலம் புயலென தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமாகிறார் பாலசந்தரின் சீடரான சுரேஷ் கிருஷ்ணா. அடுத்ததாக இந்திரன் சந்திரன் என்றொரு இன்னொரு மகத்தான படம். ரஜினியை இயக்கும் வாய்ப்பு திடீரென கிடைக்கிறது. வஸந்த் இயக்க மறுத்ததால் அண்ணாமலை படத்தை இயக்க சுரேஷ் கிருஷ்ணாவை அழைக்கிறார் கே. பாலசந்தர். கதை, இசையமைப்பாளர், படக்குழு என எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது. சொன்னதைக் கேட்டு இயக்க வேண்டும். பிரச்னையின்றி படத்தை முடித்து வெளியிட வேண்டும். 

அப்போது இளம் இயக்குநர், குறைந்த அனுபவம் கொண்டவர் என ரஜினி படத்தை இயக்குவதற்கான தகுதிகள் குறைவாக இருந்தாலும் துணிச்சலுடன் குருநாதர் அளித்த வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. திரைக்கதையை முடிந்தளவு மெருக்கேற்றுகிறார். ஹிந்திப் படங்கள் பார்த்து வளர்ந்ததால் அதன் தாக்கம் படமாக்கத்தில் தெரிய ஆரம்பிக்கிறது. வந்தேன்டா பால்காரன் பாடலை பிரமாண்டமாகப் படமாக்குகிறார். ஒரு ரஜினி படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான வடிவமைபைத் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்குகிறார். அற்புதமான பாடல்கள், தேவையான நகைச்சுவைக் காட்சிகள், உணர்வுபூர்வமான காட்சிகள், திருப்பங்கள், சண்டைக்காட்சிகள், பில்ட் அப் காட்சிகள் என எல்லாமே கச்சிதமான அமைகின்றன. படம் வெளியாகிறது. ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுகிறார்கள்.  

92-ல் அண்ணாமலை படத்தின் அசுர வெற்றியும் சுரேஷ் கிருஷ்ணாவுடனான கூட்டணியும் ரஜினி திரை வாழ்க்கைக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்தக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்தது. 1994-ல் வீரா வெற்றியடைந்த பிறகு 1995-ல் பாட்ஷா வெளியானது. இன்றுவரை ரஜினிக்கு இப்படியொரு படம் அமையவில்லை எனும் விதமாக மிகப் பெரிய வெற்றியை அடைந்து ரஜினியின் அந்தஸ்தைப் பல மடங்கு உயர்த்தியது. 

அண்ணாமலை படத்துக்கு அடுத்ததாக மூன்று படங்கள் முடித்த பிறகு மீண்டும் ரஜினி - சுரேஷ் கிருஷ்ணா கூட்டணி சேர்கிறது. இந்தமுறை இரண்டு படங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.

ஹிந்திப் படமொன்றில் தவிர்க்கப்பட்ட காட்சியொன்றை ரஜினியிடம் கூறுகிறார் சுரேஷ் கிருஷ்ணா. நம்ப மாட்டீர்கள். அதுதான் பாட்ஷா படத்தில் இன்றைக்குப் பார்த்தாலும் புல்லரிப்பை ஏற்படுத்தக்கூடிய, அய்யா... என் பேரு மாணிக்கம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு... என்று மேசையில் கைகளை ஊன்றியபடி ரஜினி சொல்லும் காட்சி.  உதாசீனப்படுத்தப்பட்ட இந்தக் காட்சியிலிருந்து பாட்ஷா படத்துக்கான கதையை அமைக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினிக்கும் கதை பிடித்துப் போகிறது. ஆனால் இப்போது இந்தப் படத்தைப் பண்ண வேண்டாம் என்கிறார். அண்ணாமலைக்குப் பிறகு இன்னொரு ஆக்‌ஷன் படம் என்றால் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். அதைப் பூர்த்தி செய்வது கடினம். அதற்கு முன்பு ஒரு நகைச்சுவைப் படம் பண்ணலாம் என்கிறார். அதுதான் வீரா. ரஜினியின் திரைப்பட மூளை எப்படிச் சரியாக வேலை செய்கிறது பாருங்கள். 

ரஜினியின் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் சுரேஷ் கிருஷ்ணா. வீராவும் பெரிய வெற்றிப் படமாகிறது. அடுத்து இயக்கிய பாட்ஷா, ரஜினியின் திரைவாழ்க்கையின் மகுடமாகப் பாராட்டு பெறுகிறது. இப்படியொரு ரஜினி படம் இனி வரப்போவதில்லை என்கிற அளவுக்கு. 

பாட்ஷாவின் வசூலை அதன்பிறகு வெளியான படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கபாலி, 2.0 போன்ற படங்கள் தாண்டினாலும் ரசிகர்கள் மனத்தில் பாட்ஷா அளவுக்கு வேறெந்த படமும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதனால்தான் இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் பாட்ஷா எப்போது ஒளிபரப்பப்பட்டாலும் சமூகவலைத்தளங்களில் ஒரு பரபரப்பு ஏற்படும்.  

*

2000ம் ஆண்டுக்குப் பிறகு வெளியான பாபா முதல் சமீபத்தில் வெளியான அண்ணாத்த வரை ரஜினி நடித்த படங்களில் பாபா, கோச்சடையான், லிங்கா, குசேலன், தர்பார் தவிர அனைத்தும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. 

2000-ம் ஆண்டு முதல் 2010 வரை ரஜினியின் படங்களை இயக்கியவர்கள் - சுரேஷ் கிருஷ்ணா, பி. வாசு, ஷங்கர் போன்ற மூத்த இயக்குநர்கள் மட்டுமே. 

2010-க்குப் பிறகு ரஜினி முற்றிலும் புதிய பாதையில் பயணித்து வருகிறார். மூத்த இயக்குநர்களுக்குப் பதிலாக சமீபத்தில் வெற்றி கண்ட மற்றும் இளம் இயக்குநர்களை முழுதாக நம்புகிறார். இதனால் தான் கடந்த 9 வருடங்களில் ரஜினியின் படங்களை இயக்கும் பொறுப்புகள் - செளந்தர்யா ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், பா. இரஞ்சித், ஷங்கர், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர். முருகதாஸ், சிவா ஆகியோருக்குக் கிடைத்துள்ளன.  

இவர்களில் ஷங்கரும் கே.எஸ். ரவிகுமாரும் மட்டுதான் அனுபவஸ்தர்கள். செளந்தர்யா, பா. இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், ஏ.ஆர். முருகதாஸ், சிவா ஆகிய இயக்குநர்களிடம் முதல்முறையாக நடித்துள்ளார் ரஜினி.

எனினும் ரசிகர்களுக்குத் திருப்தி வரவில்லை. சமீபத்திய படங்களைப் பார்த்தவர்கள் பாட்ஷா, படையப்பா போல இல்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். அதிலும் சமீபத்திய படங்களான தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டும் ரசிகர்களுக்கு முழுத் தீனி அளிக்கவில்லை. கபாலி, காலா-வில் வயதுக்குரிய வேடங்களில் ரஜினி நடித்தாலும் அவருடைய ரசிகர்களுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. நடுவில் ஷங்கர், சிவாஜி என்கிற அக்மார்க் ரஜினி படத்தை அளித்தார். எந்திரன், 2.0 எல்லாம் தொழில்நுட்பம் கலந்ததால் வழக்கமான ரஜினி படமாக அவை அமையவில்லை. 

பேட்ட படம் பழைய ரஜினியைக் காண்பிக்க முயற்சி செய்தாலும் அந்தளவுக்குக் கவரவில்லை. இருந்தாலும் சமீபத்தில் வந்த ரஜினி படங்களில் பேட்ட பரவாயில்லை ரகம். ஆனாலும் இன்னொரு பாட்ஷா, படையப்பா சாத்தியமா?

லிங்கா, பாபா படத்தின் தோல்விகளுக்குப் பிறகு கே.எஸ். ரவிகுமார், சுரேஷ் கிருஷ்ணா பக்கம் ரஜினி திரும்பவில்லை. அவர்களுக்கு ரஜினி இன்னொரு வாய்ப்பை அளித்துப் பார்த்திருக்கலாம். இத்தனைக்கும் பாபா, ரஜினி சொன்ன கதை. அதனால் பாட்ஷா போல சுரேஷ் கிருஷ்ணாவுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கலாம். அதேபோலத்தான் கே.எஸ். ரவிகுமாரும். லிங்காவில் பல காட்சிகள் உணர்வுபூர்வமாக இருந்தன. அதனால் அவருக்கும் இன்னொரு வாய்ப்பு வழங்கியிருந்தால் இன்னொரு படையப்பாவை அவர் கொடுத்திருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஒரு ரஜினி படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 90களுக்குப் பிறகு வந்த படங்களில் அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, சிவாஜி ஆகிய படங்களைச் சொல்லலாம். இந்தப் படங்களில் உள்ள கலவையுடன் இன்னொரு ரஜினி படம் மீண்டும் வரவில்லை. 

இன்னொரு பாட்ஷா, இன்னொரு படையப்பா சாத்தியமா? ரசிகர்கள் காத்திருக்கலாமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com