கலையைத் தேடிய கலைஞன் - தப்பு தாளத்தின் சரியான இசை

‘பதினாறு வயதினிலே’-வில் பரட்டையாக வந்து திரையரங்கை ஆக்கிரமித்த வில்லன் ரஜினி அதே ஆண்டு வெளியான ‘முல்லும் மலரும்’ திரைப்படத்தில் கைகளை இழந்த அண்ணனாக பார்வையாளர்களைக் கலங்கடித்தார்
கலையைத் தேடிய கலைஞன்
கலையைத் தேடிய கலைஞன்

தமிழ் சினிமாவில் எழுபதுகளின் இறுதியில் கதை , திரைக்கதையில் பெரிய திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன.

குறிப்பாக பாரதி ராஜா, மகேந்திரன் உள்ளிட்டோரின் வருகையால் எதார்த்த பாணியிலான திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பெரிய ஸ்டூடியோக்களில் இல்லாமல் பல ஊர்களுக்களில் நடக்கத் தொடங்கியது.

இந்தக் காலகட்டத்தில் தான் ரஜினிகாந்த் தன்னை ஒரு நல்ல நடிகராகவும் எந்தக் கதாப்பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை சரியாக நடிக்க முடியும் என நிரூபித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக, பாரதிராஜா இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளியான ‘பதினாறு வயதினிலே’-வில் பரட்டையாக வந்து திரையரங்கை ஆக்கிரமித்த வில்லன் ரஜினி அதே ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் கைகளை இழந்த அண்ணனாக பார்வையாளர்களைக் கலங்கடித்தார்.

ஒருபுறம் வில்லன், மறுபுறம் பரிதாபத்திற்கு ஆளாகும் கதாப்பாத்திரம் என கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் மறையாத முகமாக ரஜினி மாறிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னைத் தக்கவைக்க ‘மாஸ் ஹீரோ’ கதைகளில் நடிக்காமல் தொடர்பில்லாமல் ஒருபடத்தில் நடித்தார். ஒருவகையில் பரட்டை திருந்தினால் எப்படி இருக்கும்? என்கிற நினைப்பை சரி செய்யும் விதமாக வெளியான திரைப்படம் தான் தப்பு தாளங்கள்.

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல், சரிதா ஆகியோர் நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தப்பு தாளங்கள்’ படம் ரஜினியின் ஆரம்பகால திரை வாழ்வின் மிக முக்கியமானத் திரைப்படம்.

தகப்பன் யாரெனத் தெரியாதவன், பாலியல் தொழில் செய்கிறவளின் காதலன் , அவமானப்படுத்தும் தம்பியை ஒன்றும் செய்ய முடியாதவன் என தன்னுடைய பலவீனங்களுடன்  தேவுவாக (ரஜினி) முதல் பாதியில் ஒரு ஆர்பாட்டமான ரவுடியாக வலம் வருபவர் அடுத்த பாதியில் திருந்தி புதிய வாழ்வைத் தொடங்கும் கனவுகளிலும் ஏக்கங்களிலும் இருக்கும் ரஜினி வெளிப்படுத்திய உணர்ச்சிகள் தான் அப்படத்தின் பெரிய பலம்.

குறிப்பாக , சரசுவும் (சரிதா) தேவுவும் சேர்ந்து வாழ முடிவு செய்வார்கள். அந்த நேரத்தில் தேவுவின் தம்பி சோமா( சுந்தர் ராஜ்) சரசுவைக் பலாத்காரம் செய்யும் போது அதைத் தடுக்க முயற்சி செய்கிற கணவனாகவும் இறுதிக் காட்சியில் தன் தம்பியின் மனைவியிடம் பேசிவிட்டு சிரித்துக்கொண்டே விதியின் முடிவை  நினைத்து அழும் காட்சியும் ரஜினி ஒரு சிறந்த நடிகன் என்பதற்குச் சான்று.

எல்லாமும் பழையதாகிக் கொண்டிருக்கிற இன்றைய காலத்தில் ’தப்புத் தாளங்கள்’ படத்தில் வெளிப்பட்ட ரஜினியின் முகபாவனைகளும் நடிப்பும் 42 ஆண்டுகள் கழித்து பார்க்கும் போதும் அதீதமான மிகை என்கிற நினைப்பை வரவழைக்கவில்லை என்பதே ரஜினியின் வெற்றி.

சொடக்கு போட்டபடியே நடந்து வருவதும், மூக்குப் பொடி டப்பாவில் ஒரு தட்டு தட்டி மூக்கிற்கு கொண்டு செல்லும் காட்சிகள் இன்றும் ரசிக்கக்கூடிய ‘ஸ்டையில்’.

மேலும், அதே திரைப்படத்தில் கே.பாலச்சந்தர் வழங்கிய வசனங்களை எந்த மறுப்பும் இல்லாமல் வளர்ந்து வருகிற ரஜினி பேசியது ஆச்சரியமான ஒன்று. குறிப்பாக, ஒரு இடத்தில் தேவுவைப்(ரஜினி) பார்த்து ‘வேசி மகன்’ என்கிறான் ஒருவன். தாமதிக்காமல் ‘நான் அதுதான்’ என்கிறான் தேவு. அது ஒரு கதாப்பாத்திரத்தின் வசனம் தான் என்றாலும் அன்றைய ரசிகர்களின் பார்வையில் நிச்சயம் அது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும். 

அதைப் பொருட்படுத்தாமல் தன்னை ஒரு நல்ல நடிகனாக மட்டுமே மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாகத்தான் ரஜினியின் பார்வை இருந்திருக்கிறது.

இன்று புகழில், நட்சத்திர அடையாளத்தில் ரஜினி இருந்தாலும், ரசிகர்களிடம் அவன் நமக்கு நெருக்கமானவன் என்கிற உணர்வைக் கடத்திய சில நல்ல திரைப்படங்களில் ஒன்றாக ’தப்பு தாளங்கள்’ இருக்கிறது. என்றும் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com